|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 January, 2013

இதுவும் மறந்துபோகும்...?

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதிபராசக்தி  தனியார் பல் மருத்துவமனை, முதுநிலை மருத்துவப் படிப்பைத் தொடங்குவதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக, கேட்கப்பட்டதாகக் கூறப்படும் கையூட்டுத் தொகை ரூ.1 கோடியில், முன்பணமாக ரூ.25 லட்சத்தை இந்தியப் பல் மருத்துவக் குழு உறுப்பினரிடம் வழங்கியபோது, சி.பி.ஐ. போலீஸாரால் இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய மருத்துவக் குழுத் தலைவர் டாக்டர் கேதான் தேசாய், பஞ்சாபைச் சேர்ந்த ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த வழக்கு என்ன ஆனது என்பதை எல்லோரும் மறந்துவிட்ட நிலையில், இரண்டாவது சம்பவம் இது. இந்தியாவில் ஆங்கில மருத்துவத்தையே பலரும் நாடுவதாலும், மருத்துவத்தில் "நிறைய சம்பாதிக்க முடியும்' என்பதாலும், மருத்துவக் கல்வி ஒரு வியாபாரமாக மாறிவிட்டது. இந்தக் கல்வி வியாபாரத்தில் பல்மருத்துவக் கல்லூரிகளும் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டன.

இந்தியாவில் அங்கீகாரம்பெற்ற பல்மருத்துவக் கல்லூரிகள் 136 உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டுக்கு 24,000 பல்மருத்துவர்கள் இளநிலை பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். முதுநிலை பல்மருத்துவத்துக்கு ஆண்டுக்கு 3,000 இடங்கள் மட்டுமே உள்ளன. முதுநிலை படிப்புக்கான போட்டித் தேர்வுகளில் ஊழலும் முறைகேடும் ஒருபுறம் இருக்க, தங்கள் கல்லூரிகளில் முதுநிலைப் பல்மருத்துவம் கொண்டுவந்துவிட வேண்டும் என்கின்ற வியாபார ஆர்வம் தனியார் கல்லூரிகளைப் பற்றிக்கொண்டிருக்கிறது. இதற்கான அங்கீகாரம் பெறத்தான் தற்போது "லஞ்ச பேரம்' பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த பேரம், மற்றும் கல்வி வியாபாரத்தின் விளைவு, லாபம் பாராமல் சிகிச்சை அளித்த பல்மருத்துவர்களையும் தற்போது நாம் இழந்து கொண்டிருக்கிறோம். வெறும் ரூ.30க்கும் ரூ.50க்கும் பற்களைப் பிடுங்கியெறிந்த விவகாரமாக இன்றைய பல்மருத்துவம் இல்லை. எடுத்த எடுப்பில் வேர்சிகிச்சை ஆரம்பித்து (குறைந்தது ரூ.1,500) விடுகிறார்கள். "ஃபில்லிங்' செய்வது பழைய காலம். இப்போதெல்லாம் "கேப்' வைக்காமல் விடுவதில்லை. குறைந்தது ரூ.1,500. வழக்கமாக, விபத்துகளில் தாடையும் பற்களும் உடைந்ததைக் காணத்தான் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பார்கள். இப்போதெல்லாம், வேர்சிகிச்சைக்கே எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிந்துரைக்கும் நிலைக்கு பல்மருத்துவம் முழு வியாபாரமாக மாறிக்கொண்டிருக்கிறது. உபயம் - தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள்!

கல்லூரிக்கு அனுமதி பெறவே "சில கோடி ரூபாய்' வழங்கத் தயாராக இருக்கும் இந்தக் கல்வி நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்களுக்கு தனி "கோட்டா' ஒதுக்கவும் செய்கின்றன. அப்படியானால், இதை ஈடுகட்டவும், கூடுதல் லாபம் பெறவும் மாணவர்களிடம் எந்த அளவுக்குக் கட்டணங்களையும் நன்கொடையும் வசூலிப்பார்கள் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்? முதுநிலை பல்மருத்துவப் படிப்பு வழங்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றாலும், அதற்கான உள்கட்டமைப்போ, பேராசிரியர்களோ இல்லாமல் முதுநிலை பல்மருத்துவப் படிப்பு எந்த வகையில் பயனுள்ளதாக அமையும்? லஞ்சம் கொடுத்து அனுமதி பெற்றாலும், இவர்கள் பேராசிரியர்களை, வெளியிடங்களிலிருந்து வரவழைத்துத்தான் பாடம் நடத்தியாக வேண்டும். அல்லது இவர்களது கல்லூரியில் பணியாற்றுவதாக போலியான பதிவேட்டைத் தயாரிக்க வேண்டியிருக்கும்.

தமிழ்நாட்டில் சுமார் 20 பல்மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல்மருத்துவக் கல்லூரி ஒன்று மட்டுமே அரசாங்கம் நடத்துவது. மற்ற அனைத்தும் தனியார் பல்மருத்துவக் கல்லூரிகள்.மாவட்டம்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கி, எம்பிபிஎஸ் படிப்பை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும்போது, ஏன் மாவட்டம் தோறும் ஒரு பல்மருத்துவக் கல்லூரியையும், இதன் இணைப்பாகத் தொடங்கவில்லை?தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் கொள்ளை லாபம் பார்க்க வழிதிறந்தது ஏன்? தமிழக மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் பல்மருத்துவத்தைப் படிக்கவே முடியாத நிலைமைக்குத் தமிழக அரசும் ஒரு மறைமுகக் காரணம்.

இந்திய பல் மருத்துவம் மட்டுமல்ல, பொதுமருத்துவக் கல்வித்தரமும் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. அண்மையில் இங்கிலாந்தில் மருத்துவப் பணிபுரிவதற்காக தகுதித்தேர்வு எழுதிய இந்திய மருத்துவர்களில் 65% பேர் தேர்ச்சி பெறவில்லை. நம் மருத்துவக் கல்வி உலகத் தரத்தில் இல்லை என்பதற்கு இது ஒரு சான்று.அரசுக் கல்லூரிகள் இல்லாத நிலையில், பல லட்சம் செலவழித்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெறும் மாணவர்கள், மருத்துவராகி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் தொழில் செய்யத் தொடங்கும் இவர்களை கார்ப்பரேட் மருத்துவ உலகமும், பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் தங்கள் பேராசைக்கேற்ப மூளைச் சலவை செய்துவிடுகின்றன. சமூகம் முழுதும் அதன் சுமையை ஏற்க நேருகிறது.காளான்கள் போலத் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிப்பதும், முறையான கட்டுப்பாடுகள் இல்லாமல் தரமற்ற மருத்துவர்களை உருவாக்கி உலவ விடுவதும், எத்தனை ஆபத்தானது என்பதைப் பற்றிக்கூட நமது ஆட்சியாளர்களுக்குக் கவலை இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சொத்தைப் பல்லாகிவிட்டிருக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் விவகாரத்தில் இன்றைய உடனடித் தேவை மூடி மறைக்கும் "கேப்' அல்ல, "வேர்' சிகிச்சை!


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...