|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 January, 2013

மாணவ பருவத்திலேயே குற்ற சம்பவங்களில்!


16 வயது முதல் 18 வயது வரையிலான மைனர் குற்றவாளிகள் அதிகரிக்க சமூக வலைத்தளங்களும், இணையதளங்களும் முக்கிய காரணமாக இருக்கிறது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பதின் வயது சிறுவர்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இதற்குக் காரணம் சமூக மற்றும் பாலுணர்வை தூண்டு வலைதளங்கள்தான் என்று தெரிவித்துள்ளது அந்த ஆய்வு. இது குறித்து மும்பையை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் 600 மாணவர்களிடம் நடத்திய சர்வேயில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
 
96 சதவீத மாணவர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியுள்ளனர். தங்களது உணர்வுகள், மகிழ்ச்சிகளை முகம் தெரியாத யாரோ ஒருவருடன் பகிர்ந்து கொள்கின்றனர். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும்போதுதான் சில தவறான நபர்களின் சேர்க்கையில் மாணவ பருவத்திலேயே குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.55 சதவீத குழந்தைகள் சமூக வலைதளங்களில் போலியான பெயர்களில் கணக்கு ஆரம்பித்து, சாட்டிங் செய்வது, இணைய தள பதிவிறக்கம் செய்வது என்று உள்ளனர். இதில் சில நேரங்களில் வகுப்பறையில் ஏற்படும் சிறிய கோபத்தின் போது கூட, கொலை செய்யும் அளவுக்கு இணைய தளங்களில் தகவல்களை சேகரிக்கின்றனர்.

குழந்தைகளில் 87 சதவீதம் பேர், சமூக வலைதளங்களில் தங்களது உணர்வுகளை கொட்டுவதோடு தங்களது குடும்பம், பிரச்னைகள் குறித்தும் தெரிவித்து விடுகின்றனர். இதுவே பின்னாளில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.80 சதவீத குழந்தைகள் பெற்றோருடன் வெளியில் செல்வதை விட சாட்டிங் செய்வதையே விரும்புகின்றனர். 72 சதவீதம் பேர் தங்களது நண்பர்களுடனும், 78 சதவீதம் பேர் புதியவர்களுடனும் சாட்டிங் செய்வதை விரும்புகின்றனர்.தங்களது பணியை காரணம் காட்டி பல பெற்றோர்கள் குழந்தைகளோடு ஒட்டி உறவாடுவதில்லை. பெரும்பாலான குழந்தைகள் வேலைக்காரர்கள் மற்றும் விடுதிகளில் வளர்கின்றன. குழந்தைகள் மனம் வாடக்கூடாது என்பதற்காக நவீன செல்போன், இன்டர்நெட், கம்ப்யூட்டர் கேம்ஸ் போன்ற பொருட்களை வாங்கி கொடுப்பதோடு தேவையான அளவு பாக்கெட் மணியையும் அளிக்கின்றனர். இது போன்ற சூழலில் வளரும் குழந்தைகள் மிக எளிதாக தவறு செய்ய தூண்டப்பட்டு சிறு வயதிலேயே குற்றவாளிகளாகின்றனர்.10க்கு 8 குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, சோகம், பாராட்டு போன்றவற்றை பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள இயலாத நிலையில் ஏங்கி தவிக்கின்றனர். இதுபோல பாதிக்கப்படும் குழந்தைகளில் பலர் சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்களை பார்க்கின்றனர். இதில் 72 சதவீத பெற்றோருக்கு தங்களது குழந்தைகள் இது போல சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர் என்பதே தெரியாமல் உள்ளனர். அவர்கள் குறித்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கின்றனர். 24 மணி நேரமும் தொழில், பணம் என்று இருப்பவர்கள் தங்களது குழந்தைகளுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கவேண்டும் என்பதே இதற்கு தீர்வாக இருக்கும்.

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...