|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 March, 2013

போராடினால்தான் வெற்றி!


''திட்டத்துக்காக மக்கள் அல்ல, 
மக்களுக்காகவே திட்டம்"

விவசாய நிலங்களில்தான் எரிவாயு குழாய்களைப் பதிப்போம் என்று அடம்பிடித்த வந்த கெயில் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோதும், தமிழக அரசு அதிகாரிகளின் ஆதரவோடு அதிரடியாக நிலங்களை கையகப்படுத்தி குழாய்களைப் பதித்தது கெயில் நிறுவனம். தலைமைச் செயலாளர் அளவில் விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்கிற உத்தரவும் காற்றில் பறக்கவிடப்பட்ட்து. 

இதையடுத்து போராட்டத்தில் குதித்த விவசாயிகளை தமிழக போலீஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி ஒடுக்கப் பார்த்தனர். ஆனால், உறுதி கலையாத விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதன் பிறகே இந்த விஷயத்தில் கவனத்தைத் திருப்பிய முதலமைச்சர் ஜெயலிலதா... உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப் பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட்டார்.
மூன்று நாட்கள் தொடர்பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த முதல்வர் ஜெயலலிதா, இன்று (மார்ச்-25) சட்டசபையில் தன் முடிவை அறிவித்துள்ளார். 

1. கெயில் நிறுவனம் விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை 
பதிக்கும் தற்போதைய திட்டத்தினை உடனடியாக கைவிடவேண்டும். 

2. வேளாண் நிலங்கள் 
பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு கெயில் 
நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

3. கெயில் நிறுவனம் ஏற்கெனவே நிலங்களில் குழாய்களைப் பதிக்க தோண்டியுள்ள 
குழிகளை உடனடியாக சமன்படுத்தி அந்நிலங்களை அதன் முந்தைய நிலையில் 
விவசாயிகளிடமும் நில உரிமையாளர்களிடமும், ஒப்படைக்க வேண்டும். 

4. விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை தொடரும் வகையில் ஏற்கெனவே 
பதிக்கப்பட்ட குழாய்களை கெயில் நிறுவனம் உடனடியாக அப்புறப்படுத்த 
வேண்டும். 

5. இந்தத் திட்டத்தினால் பழவகை மரங்களையும் மற்றும் பிற கட்டுமானங்களையும் 
இழந்து, தற்போது வரை இழப்பீடு அளிக்கப்படாத விவசாயிகளுக்கும், நில 
உரிமையாளர்களுக்கும் உடனடியாக கெயில் நிறுவனம் உரிய இழப்பீட்டினை 
வழங்க வேண்டும். 'கெயில்' திட்டம் தொடர்பாக விவசாயிகள் மீது தொடரப்பட்ட அனைத்து 
வழக்குகளையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். 

''விவசாயிகளின் வீழ்ச்சியில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதை நியாய உணர்வு 
கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திட்டத்துக்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம் என்பதில் எனது 
தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்பதையும், மக்களின் வாழ்வாதாரங்களை 
பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு என்றைக்கும் 
உடந்தையாக இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றும் கூறியிருக்கிறார் ஜெயலலிதா! 
விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை, 'எதிர்காலத்திலும் இதே நிலையைத் தொடர்வார்' என்கிற நம்பிக்கையோடு பாராட்டுவோம்!

போராடினால்தான் வெற்றி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது... இந்த விஷயம். எனவே, பாதிப்பு வரும்போது போராட என்றுமே விவசாயிகளும் தயங்கக் கூடாது... தொடரட்டும் நியாயமான போராட்டங்கள்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...