|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 March, 2013

காமெடி போராட்டம்!

 
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி திமுக தலைமையிலான 'டெசோ' அமைப்பின் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடப் போகாமலேயே வள்ளுவர் கோட்டம் முன்பாகவே போலீஸார் கைது செய்தே ஆக வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மைக் பிடித்து கோரிக்கை விடுத்தார். பொதுவாக இலங்கை தூதரகரத்தை முற்றுகையிடுவதாக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் போது கட்சித் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று முழக்கமிடுவர். பின்பு தொண்டர்கள் இலங்கை தூதரகத்தை நோக்கி பேரணியாக செல்வார்கள். ஒரு குறிப்பிட்ட தொலைவில் போலீசார் தடுத்து நிறுத்துவர். பினன்ர் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் செல்வார்கள். ஆனால் தமிழ் அமைப்புகள், இயக்கங்கள் போராட்டம் நடத்தினால் போலீசார் தடுப்பையும் மீறி இலங்கை தூதரகம் நோக்கி முற்றுகையிட்டே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்னேற முயற்சிப்பார்கள்.. தள்ளு முள்ளு.. மல்லுக் கட்டு நடைபெறும்..சில நேரங்களில் ரத்த களறியும் ஏற்படும். ஆனால் திமுக தலைமையிலான 'டெசோ' அமைப்பு இன்று நடத்திய 'இலங்கை தூதரக' முற்றுகைப் போராட்டத்தில் நடந்தது என்ன தெரியுமா?. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டத்துக்காக பல்லாயிரம் பேர் கூடி இருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம்தான்! குறைந்தது பத்தாயிரம் பேர் என்பது மிகையல்ல.. அப்படி ஒரு கூட்டம்! . திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இலங்கை அரசுக்கு எதிராக ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 
 
ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த முழக்கங்கள் ஒரு 10 நிமிடம் நீடித்தன. பின்னர் 'மைக்' பிடித்த திமுக நிர்வாகி ஒருவர், "முக்கிய அறிவிப்பு... இங்கு கூடியிருக்கும் பத்தாயிரம் பேரில் தென் சென்னை மாவட்ட கழகத்தினர் (திமுக) முதலில் போலீஸ் வாகனத்தில் ஏற வேண்டும். அவர்கள் அனைவரும் வேனில் ஏற்றப்பட்ட பின்னரே வடசென்னை மாவட்ட கழகத்தினரும் மற்றவர்களும் போலீசார் வாகனத்தில் ஏற வேண்டும்'' என்று அறிவித்தார். மீண்டும் முழக்கம் ஆரம்பித்தது. அப்போது திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மைக்கை பிடித்து ஒரு 'முக்கிய' அறிவிப்பை வெளியிட்டார். ''நண்பர்களே! இங்கு கூடியிருக்கும் நம்மை கைது செய்ய காவல்துறையிடம் போதுமான வாகனங்கள் இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்... (பலத்த கைதட்டல்)... இங்கே நிற்கும் எங்களை நீங்கள் கைது செய்யாவிட்டால் நாங்கள் அப்படியே இலங்கை தூதரகத்தை நோக்கி நடக்க வேண்டியதிருக்கும்" என்று திடீர் என அறிவித்தது பத்திரிகையாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக முற்றுகைப் போராட்டம் நடத்துவர்கள் ஆகக் குறைந்தபட்சம் இலங்கை தூதரகம் நோக்கி சில அடிகளாவது நகர்வது வழக்கம். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான டெசோ அமைப்பினரோ வள்ளுவர் கோட்டம் அருகேதான் நாங்கள் நிற்போம். எங்களை இங்கேயே கைது செய்துவிடுங்கள்.. இல்லையெனில்தான் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக 'நகர்ந்து' செல்வோம் என்று கூறியது பொதுமக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடைசியாக நடந்தது என்னவெனில் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று போலீசார் அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டோர் அனைவரையும் 'வள்ளுவர் கோட்டத்திலேயே' இருக்க சொல்லிவிட்டது. 
 
 வழக்கம் போல ஊடகங்களும் இலங்கை தூதரகத்தை மு.க. ஸ்டாலின் தலைமையில் முற்றுகையிட "சென்ற" (நின்ற இடத்தைவிட்டு நகரவே இல்லை!) பல்லாயிரக்கணக்கானோர் போலீசாரால் 'தடுத்து' (!) நிறுத்தி கைது செய்யப்பட்டு "திருமண மண்டபங்களில்" (வள்ளுவர் கோட்டம் எப்ப கல்யாணம் மண்ட்பமானது?) தங்க வைக்கப்பட்டனர் என்று செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இது இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் அல்ல.. "வள்ளுவர் கோட்ட முற்றுகை" போராட்டம் என்று மூத்த செய்தியாளர் ஒருவர் கமெண்ட் அடித்தது இன்னமும் காதில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்திரா காந்தி கொள்கை.. ஸ்டாலின் கோரிக்கை: "முற்றுகைப் போராட்டம் நடத்தி கைது"(!) செய்யப்பட்ட மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தப் போராட்டம் போலீசாரே கைது செய்து வாகனங்களில் ஏற்ற முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளன. 1971-ல் லண்டன் நகரில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட அன்னை இந்திராகாந்தி, அந்த கால கட்டத்தில் பாலஸ்தீனம் உள்ளிட்ட சிலநாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அவரது அதே கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கவேண்டும் என்றார் அவர்,

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...