|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 March, 2011

தேவை தெளிந்த தீர்ப்பு : ஆர்.ராஜேஸ்வரி சிவா - சமூக ஆர்வலர்


தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தங்களும், அரசியல் கட்சிகளின் கோமாளி கூத்துக்களும் துவங்கிவிட்டன. பேரங்களுக்கும், அதையொட்டிய நாடகங்களுக்கும் குறையொன்றுமில்லை.

பேரம் படிவதற்கு முன், தன்மான சிங்கங்களாக கர்ஜித்தல்; பேரம் படிந்து உடன்பாடு ஆனவுடன், பூனையாக பதுங்குதல்; திடீர் திடீரென முளைக்கும் ஜாதிக் கட்சிகள்; அந்தக் கட்சிகளுடனும் பேரம் நடத்தி, தொகுதி வழங்குதல் என, சுவாரஸ்யமான காட்சிகள் அரங்கேறுகின்றன. ஒரு சில கட்சிகள் எந்தக் கூட்டணியில் உள்ளனர் என்பதில், அக்கட்சியின் பேச்சாளர்களுக்கே, சந்தேகம் வந்து விடுகிறது.கூட்டணி கட்சியினரையே பழக்க தோஷத்தில், மேடையில் சாட ஆரம்பித்துவிடுகின்றனர். பாவம்... அவர்கள் தான் என்ன செய்வர்... தேர்தல் தோறும் கூட்டணி மாறிக் கொண்டே இருந்தாலும், "நாக்கு' ஒரே நாக்கு தானே! தேர்தல் முடிவதற்குள், இன்னும் பல சுவாரஸ்யமான நாடகங்கள் அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.விரல்விட்டு எண்ணக் கூடிய அரசியல் தலைவர்கள், கோடிக்கணக்கான மக்களை முட்டாள்களாக நினைத்து, அவர்களுடைய, "வியாபாரத்தை' சிறப்பாக நடத்துகின்றனர்.

மக்களாகிய நாம், இந்த கபட நாடகங்களையும், பேரங்களையும் மவுன சாட்சிகளாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
"வியாபாரமா?' என புருவத்தை உயர்த்துபவர்கள், கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கவும்...தி.மு.க.,வில், 15 ஆயிரம் பேர், அ.தி.மு.க.,வில், 12 ஆயிரம் பேர், தே.மு.தி.க., வில், 7,500 பேர் என, மூன்று கட்சிகளில் மட்டும், 34 ஆயிரத்து 500 பேர், டிக்கட் கேட்டு மனு செய்துள்ளனர். இது தவிர, காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., - ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில், "சீட்' பிடிக்க மோதுபவர்கள் கணக்கு தனி. ஒவ்வொருவரும் சீட்டுக்கும், 5,000, 10,000 ரூபாய் என, கட்சி தலைமைக்கு பணம் கட்டி உள்ளனர்; ஒவ்வொரு கட்சி தலைமைக்கும் இதன் மூலமே பல கோடிகள் வசூல் ஆகி இருக்கும்!இத்தனை பேர் டிக்கட் கேட்டாலும், பங்கிட்டு கொள்ளப் போவது, 234 தொகுதிகளைத் தான். நேர்காணலை சந்தித்து விட்ட கரை வேட்டிகள், "நமக்கு வேண்டிய கட்சிக்காரரு; 2 சி வரைக்கும் செலவு பண்ண தயாரா இருக்காரு. சரியான ரூட் இருந்தா சொல்லுங்க...' என, "சீட்' பிடிக்க தோதான ஆள் பிடிக்கும் வேலையில், தீவிரமாக இறங்குகின்றனர்.
ஆக, "2 சி' என்றால் என்ன என்று அறியாத அப்பாவி, நேர்மையாளர்களும் உள்ளனர். 2 சி என்றால் இரண்டு கோடி. அனைத்து கட்சிகளும் நேர்காணலில் தவறாமல் கேட்கும் கேள்வி, தேர்தல் பணிக்கு செலவு செய்ய தயாராகவுள்ள தொகையின் மதிப்பு என்ன?

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன், ஒரு கட்சி, ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டுமெனில், அவர் அக்கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவராக இருக்க வேண்டும்; பல போராட்டங்களை சந்தித்தவராக இருக்க வேண்டும்; மக்களிடையே மதிப்பும், மரியாதையும் உள்ளவராக இருக்க வேண்டும்; வம்பு, வழக்குகள் இல்லாதவராக இருக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட தொகுதி மக்களுக்கு, நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும்.ஆனால், இன்றோ, "டப்பு' மட்டும் இருந்தால் போதும். நேற்று வரை கட்சி உறுப்பினராக கூட இல்லாத ஒருவரை, தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை, பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவரை, வேட்பாளராக நிறுத்தி, அவரும் வெற்றி வாகை சூடி விடுகிறார். 2 சி, 3 சி என, பணத்தை வாரியிறைத்து, சட்டசபை உறுப்பினராக என்ன காரணம்? மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற அக்கறையிலா?

"டிவி' ஊடகங்களுக்கு அடிமைப்பட்டு மக்கள், நாட்டில் என்ன கொள்ளை போனாலும் கவலைப்படாமல், நம் வீட்டில் கொள்ளைப் போகாமல் இருந்தால் போதும் என்ற எண்ணத்திற்கு தள்ளப்பட்டுவிட்டனர்.இந்த மனப்பாங்கிலிருந்து மக்கள் வெளி வர வேண்டும். சட்டசபை தேர்தல் என்பது தேர்திருவிழாப் போல, ஒரு நாள் கொண்டாடும் வேடிக்கை விழா அல்ல.நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர், தொகுதி பிரச்னைகளை தீர்த்து வைக்க பாடுபடுபவராக, சட்டசபையிலும், எடுத்துரைக்க தயங்காதவராக, மக்கள் எளிதில் அணுகக் கூடியவராக, மக்கள் தொண்டில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால், உங்கள் வீட்டு பெண்ணிற்கு மாப்பிள்ளை தேர்ந்தெடுக்க அலசி ஆராய்வது போல், சிரத்தையுடன் சிந்தித்து, வேட்பாளரை தேர்வு செய்து, ஓட்டளிக்க வேண்டும்.மக்களை மடையர்களாக நினைத்து நாடகமாடும் தலைவர்களுக்கு, தக்க பாடம் புகட்ட மக்களிடம் இருக்கும் ஒரே மார்க்கம், ஓட்டுச் சீட்டு தான். விலை மதிப்பில்லாத ஓட்டுகளை, விளையாட்டு போல் வீணடிக்காமல், மவுன சாட்சிகளின் சக்தியை, அரசியல் வியாபாரிகளுக்கு உணர்த்துதல் நம் கடமை.நாட்டின் எதிர்காலம் மட்டுமல்லாமல், நம் சந்ததிகளின் எதிர் காலமும், நம் ஓட்டுச்சீட்டில் தான் உள்ளது என்பதை உணர்ந்து, சிந்தித்து, சீர்தூக்கி பார்த்து, தவறாமல் எல்லாரும் ஓட்டளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...