|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 May, 2011

ரூ.214 கோடி லஞ்சத்தை கடன் போல காட்ட கலைஞர் டிவி முயற்சி-சிபிஐ


டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து குசேகாவ்ன், சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி பணப் பரிமாற்றம் நடந்தது உண்மை. இது லஞ்சப் பணம்தான். ஆனால், அதை கடன் போல காட்ட முயற்சி நடக்கிறது என்று நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.

2ஜி ஸ்பெக்ரம் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான விவாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

இவர்கள் சார்பில் வழக்கறிஞர் அல்தாப் அகமது ஆஜரானார். அவர் கூறுகையில், கனிமொழியும் சரத்குமாரும் விசாரணையின்போது முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்கள். கலைஞர் டி.விக்கு கடனாகத்தான் ரூ. 214 கோடி பெறப்பட்டது. அதற்கான ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை. அது சட்டப்பூர்வமான கடன் தான். இதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

இது தொடர்பான எல்லா ஆவணங்களும் சிபிஐ வசம் தான் உள்ளன. இதனால் கனிமொழியும் சரத்குமாரும் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

அப்போது நீதிபதி அஜித் பரிகோகே குறுக்கிட்டு, பணப் பரிமாற்றத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளீர்கள். ஆனால் அவை அனைத்தும் ஜெராக்ஸ் பிரதிகளாக உள்ளன. அசல் ஆவணங்கள் எங்கே? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த அல்தாப் அகமது, அசல் ஆவணங்களை சரிபார்த்து வருகிறோம் என்றும் விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உள்ளோம் என்றார்.

இதையடுத்து வாதாடிய சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித், டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து குசேகாவ்ன், சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி பணப் பரிமாற்றம் நடந்தது உண்மை. இதற்கு ஷாகித் பல்வாவும், வினோத் கோயங்காவும் உதவியாக இருந்திருக்கின்றனர். கைமாறிய பணம் லஞ்சப் பணம்தான். ஆனால், அதை கடன் போல காட்ட முயற்சி நடக்கிறது.

இந்தப் பணம் கொடுக்கப்பட்டபோது, அதற்கான ஆவணங்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இதிலிருந்தே அது லஞ்சப் பணம் தான் என்பது உறுதியாகிறது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட பிறகுதான், இந்தத் தொகையை திரும்பத் தரத் தொடங்கியது கலைஞர் டிவி.

இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்த பிறகுதான் பணத்தை கடன் போல காட்டவும், அதைத் திருப்பித் தருவது போல காட்டவும் கலைஞர் டிவி சார்பில் அவசர அவசரமாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தொகையை கடனாகப் பெற்றதாகவும் அதைத் திரும்ப செலுத்தியதாகவும் ஆவணங்களை அவர்கள் தயாரித்திருக்கின்றனர்.

கலைஞர் டி.வி.யில் கனிமொழியும், சரத்குமாரும் தலா 20 சதவீதப் பங்குகளை கைவசம் வைத்துள்ளனர். இந்த பணப் பரிமாற்றத்தில் இருவருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்களின் கட்டுப்பாட்டில்தான் கலைஞர் டி.வி. இயங்கி வருகிறது. அவர்களது ஜாமீன் மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது. எனவே அந்த உத்தரவை உறுதி செய்து, அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.

இதையடுத்து கனிமொழியும் சரத்குமாரும் உடனடியாக மீண்டும் திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...