|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 June, 2011

மரத்துப்போனதா மனிதாபிமானம்!

சென்னை, எக்மோர் ரயில் நிலைய வெளிவாசலில் நெருங்கவே முடியாத அளவிற்கு நெடி வீசிய சகதி கிடங்கில் ஒரு உருவம் அனத்தியபடி நெளிந்தது.
அது ஏதோ ஓரு இரண்டு கால்,நான்கு கால் பிராணி அல்ல உயிரும்,உணர்வும் கொண்ட ஒரு மனிதன்வயது 70ற்கு மேல் இருக்கும். இதற்கு மேல் ஒல்லியாக முடியாத என்ற உடல் வாகு. கண்ணில்மட்டுமே உயிர் தேங்கி நின்றது.
பார்த்த உடனேயே யாருக்கும் பரிதாபம் வரக்கூடிய தோற்றம் ஆனால் யாருக்குமே பரிதாபம் வரவில்லையா அல்லது நின்று பார்க்க,என்னாச்சு என்று கேட்க நேரமில்லையா தெரியவில்லை.ஆளாளுக்கு மூக்கை பிடித்துக்கொண்டு பறந்தனர், ஒரே ஒருவர் மட்டும் நெருங்கிவந்தார்.ஆகா... ஒரு மனித நேயம் உள்ளவர் வந்துவிட்டார் என்று நினைத்த போது இந்த வயதானவரின் காலைபிடித்து இழுத்து சென்று கொஞ்ச தூரத்தில் கொண்டு போய் குப்பையை போடுவது போல போட்டுவிட்டு வந்தார். கேட்டபோது, அவர் ரோட்டோர பழக்கடை போடும் இடம் அதுவாம்.

இருந்த நிழலும்,நிலையும் போய் தன்னை இன்னும் சுருக்கிக்கொண்டு கிடந்த அந்த வயோதிகரின் நிலையை பொறுக்கமுடியாமல் 108 க்கு போன்செய்தபோது விபத்தில் அடிபட்டால் மட்டும் சொல்லுங்கள் "கிழே கிடப்பதை' எல்லாம் எடுத்துச் செல்ல வரமுடியாது என்று சொல்லிவிட்டனர்.தொடர்ந்து பல இடங்களுக்கு போன் போட்டபோதும் முறையான பதில் இல்லை. கடைசியில் காவல் நிலையம் சார்பில் வந்து பார்த்துவிட்டு இதில் நாங்கள் செய்வதற்கு ஏதும் இல்லை என்று கூறியவர்கள் ஒரு லுங்கி மட்டும் உபயமாக வழங்கிவிட்டு சென்றனர்.

பிறகு அக்கம்,பக்கம் உள்ளவர்களை அழைத்து அவரிடம் பேச்சு கொடுத்த போது பேச்சு வரவில்லை. கொஞ்சம் பிஸ்கெட்டும், தண்ணீரும் கொடுத்ததும்,பிஸ்கெட்டை தண்ணீரில் நனைத்து ஆசையுடன் சாப்பிட்டார்.இவரது தேவை உணவுதான் என்பது தெரிந்ததும் இன்னும் கொஞ்சம்பிஸ்கெட்டும், தண்ணீரும் வழங்கப்பட்டது. பெரியவர் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.அவரது பேச்சு யாருக்கும் புரியவில்லை.இவரை சுமையாக கருதியவர்கள் யாரோ இப்படி மனிதாபிமானமில்லாமல் ரோட்டில் வீசிச்சென்று உள்ளனர் என்பது மட்டும் புரிந்ததுபின்னிரவில் போகும் போதும் ஒரு பிஸ்கெட்டை தண்ணீரில் நனைத்து சாப்பிட்டபடி ரோட்டோரமாய் பெரியவர் சாய்ந்து கிடந்தார்.

ஒரு உயிருக்கு கிடைக்கும் மரியாதை அவ்வளவுதானா?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...