|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 June, 2011

தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்த கலெக்டர்!

  ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.

""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...