|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 July, 2011

ராஜா சொன்னதைத் தான் நான் செய்தேன்: சந்தோலியா!

டாடா ஸ்கை டி.டி.எச்., குழுமத்தில், கலைஞர் "டிவி'யை கொண்டு வர முன்னாள் அமைச்சர் ராஜா முயன்றார். இது தொடர்பாக நடந்த ரகசிய ஒப்பந்தத்தில், ராஜாவுக்கும், அரசியல் புரோக்கர் நிரா ராடியாவுக்கும் பங்குள்ளது' என்று, ராஜாவிடம் உதவியாளராக இருந்த சந்தோலியா குற்றம் சாட்டினார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான வாதம், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், முதல் இரண்டு நாட்கள், முன்னாள் அமைச்சர் ராஜா சார்பில் வாதாடப்பட்டது. அப்போது, "மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, சாட்சியாகச் சேர்க்க வேண்டும்' என, ராஜா வழக்கறிஞர் வாதாடினார். மேலும், பிரதமருக்குத் தெரிந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தது என்று கூறியதோடு, வேறு சில குற்றச்சாட்டுகளையும் ராஜா கூறியிருந்தார்.இதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறையின் செயலர் சித்தார்த்த பெகுராவின் வாதம் துவங்கி, இரண்டு நாள் நீடித்தது. "அரசின் திட்டத்தை அமல்படுத்திய ஒரே காரணத்திற்காக, இவ்வழக்கில் தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்' என, தெரிவித்திருந்தார்.இதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவின் உதவியாளர் ஆர்.கே.சந்தோலியா தரப்பு வாதம் நேற்று முன்வைக்கப்பட்டது.

அப்போது, அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறியதாவது:டாடா ஸ்கை டி.டி.எச்., குழுமத்தில் கலைஞர் "டிவி'யைச் சேர்க்க, ராஜா முயன்றார். சந்தோலியா, ராஜாவிடம் உதவியாளராகத் தான் இருந்தார். எஜமானர் எடுக்கும் முடிவுக்கு எதிராக, உதவியாளரால் கேள்வி கேட்க முடியுமா என்ன? முடிவு எடுக்கும் அதிகாரம் சந்தோலியா கையில் இருந்ததில்லை.ஓராண்டு விசாரணைக்கு பின், சந்தோலியாவை சி.பி.ஐ., வழக்கில் சேர்த்தது. "2ஜி' விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் அவர் இல்லை. அவரது எஜமானர் (முன்னாள் அமைச்சர் ராஜா) பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்று செயல்படுத்துவது தான் அவரின் வேலை. ராஜாவின் அன்றாடப் பணிகளுக்கு உதவுவதே சந்தோலியாவின் வேலை.

ராஜா எடுக்கும் முடிவுகள் சரியா, தவறா என்று எவ்வித கவலையும் அவருக்கு இல்லை. சந்தோலியா ஒன்றும் பெரிய ஆளும் இல்லை. மேலும், ராஜா சார்ந்திருந்த தி.மு.க., கட்சியுடனோ, கலைஞர் "டிவி'யுடனோ, வேறு டெலிகாம் கம்பெனிகளுடனோ எவ்வித தொடர்பும் சந்தோலியாவுக்கு இல்லை.டாடா ஸ்கை டி.டி.எச்., குழுமத்தில் கலைஞர் "டிவி'யை கொண்டு வர, ராஜா முயன்றார்.

இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே நடந்த ரகசிய ஒப்பந்தத்தில், ராஜாவுக்கும், அரசியல் தரகர் நிரா ராடியாவுக்கும் பங்கு உள்ளது. இதற்கு பாலமாகச் செயல்பட்டவர் ராஜாவின் உதவியாளராக இருந்த ஆச்சாரியா. நிரா ராடியா, ஆச்சார்யா இடையேயான உரையாடலின் போது, ஆச்சார்யா என்ன பேசுகிறார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை. இதிலிருந்து, கலைஞர் "டிவி', டாடா இடையேயான ஒப்பந்தம் குறித்து ஆச்சார்யாவுக்கு தெரிந்திருப்பது தெளிவாகிறது. இதன் மூலம், டாடா, நிரா ராடியா, ஆச்சார்யா, கலைஞர் "டிவி' உட்பட அனைவரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட வேண்டும். டாடாவும், ராடியாவும் பெரிய மனிதர்கள் என்பதால், சி.பி.ஐ., அவர்களை விட்டுள்ளது. ஆனால், ஆச்சார்யா ஏன் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் சந்தோலியாவை கைது செய்துள்ளனர்.சந்தோலியா கையெழுத்து போட்ட ஒரு ஆவணத்தையாவது சி.பி.ஐ., காட்ட முடியுமா. எத்தனையோ பேர் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களை எல்லாம் சி.பி.ஐ., விட்டுவிட்டது.
டாடா - கலைஞர் "டிவி', ராடியா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த ஆச்சார்யாவுக்கு, கடந்த 12 ஆண்டுகளாக ராஜாவுடன் நெருக்கமான நட்பு இருந்துள்ளது.இவ்வாறு சந்தோலியா வழக்கறிஞர் கூறினார்.முன்னதாக சந்தோலியா வாதம் துவங்குவதற்கு முன், சந்தோலியா தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி சைனி அறிவித்தார். "தன்னிடம் விசாரணை நடத்துவதற்கு, சி.பி.ஐ., சரியான முறையில் அனுமதி பெறவில்லை' என, மனுவில் சந்தோலியா குறிப்பிட்டிருந்தார்.

கலைஞர் "டிவி' சொத்துக்களை பறிமுதல் செய்யநடவடிக்கையில் இறங்கியது அமலாக்கத் துறை:"சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (பி.எம்.எல்.ஏ.,), கலைஞர் "டிவி'யின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை, அமலாக்கத் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது' என, அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:கலைஞர் "டிவி'க்கு, 215 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பது தெரியவந்துள்ளது.அதனால், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், அவற்றைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்காகவும், சிலருக்கு சலுகை காட்டியதற்காகவும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும், பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அந்த லஞ்சப் பணத்தை மீட்கும் வகையில், இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

கலைஞர் "டிவி'யில், கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழிக்கு, 80 சதவீத பங்குகளும், அந்த "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு, 20 சதவீத பங்குகளும் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற "டி.பி' ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்தது என்பது, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறி, 2,100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ஏற்கனவே "டிபி' குரூப், வெர்ஜின் மொபைல், மில்கிவே டெவலப்பர்ஸ் மற்றும் இடிஏ ஸ்டார் குரூப் ஆகிய நிறுவனங்களுக்கு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இவ்வாறு அமலாக்கத் துறை உயர் அதிகாரி கூறினார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...