|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 July, 2011

இலங்கைத் தமிழர் சம உரிமை கோரி மார்க்சிஸ்ட் தீர்மானம் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுவில், இலங்கைத் தமிழர் சம உரிமை, அரசியல்தீர்வு சிறப்பு மாநாட்டில் தமிழர் சம உரிமை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இது குறித்த செய்திக் குறிப்பு:


* இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம் வசதிகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
* தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.

உடனடியாக செய்யப்பட வேண்டியவை:
♦ இலங்கையில் இறுதிகட்ட போரின்போது ராஜபக்சே தலைமையிலான அரசினுடைய ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும், சர்வதேச தரமுள்ள, மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய ஒரு சுயேச்சையான நேர்மையான விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட வேண்டும். ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடு என்ற முறையிலும், ஐ.நா.வின் மனித உரிமை சாசனத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும் இந்த விசாரணை அமைய வேண்டும்.
♦ சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
♦ இலங்கையில் தமிழ் மக்கள் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்கான அனைத்து முன்முயற்சிகளும் உடனடியாகத் துவக்கப்பட வேண்டும்.
♦ மாகாண அரசுகளுக்கு காவல்துறை,நிலம் போன்ற அம்சங்களில் நிர்வாக அதிகாரம் வழங்க வேண்டும். தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்.
♦ ஆயுத மோதலினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களது சொந்த வாழ்விடங்களில் முழுமையாக மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.
♦ அனைத்து நிலைகளிலும் தமிழ் மக்களும் தமிழ் மொழியும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவர்களது மத உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பேணப்பட வேண்டும்.
♦ அவசர கால சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டு, ராணுவ நடமாட்டம் விலக்கப்பட்டு ஜனநாயகபூர்வ சகஜ வாழ்வு திரும்ப வேண்டும். அச்சம் அகன்று அமைதி திரும்ப வேண்டும்.
♦ இலங்கையில் இருந்து வந்த நாடாளுமன்ற ஜனநாயக முறை மாற்றப்பட்டு அதிபராட்சி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கூட்டாட்சியில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. உண்மையான கூட்டாட்சி முறை செயல்படுத்தப்பட வேண்டும்.
♦ அரசு, நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழர்களையும் பணியில் அமர்த்த வேண்டும் அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் அனைத்து அம்சங்களும் நீக்கப்பட வேண்டும். இந்திய அரசின் கடமை இலங்கையின் அண்டை நாடு என்ற முறையிலும் சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடு என்ற முறையிலும், இலங்கைத் தமிழ் மக்களின் துயரம் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு மக்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற முறையில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தகுந்த அரசியல் தீர்வு காண உதவ வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. எனவே, இந்தியா தனது ராஜீய உறவைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களின் நிவாரணப் பணிகளுக்காக இந்தியா அளிக்கும் உதவி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா?, பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு கிடைக்கிறதா? என்று கண்காணிக்கும் பொறுப்பும் இந்தியாவிற்கு உண்டு. இதனை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.


இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வந்துள்ளது, வருகிறது. ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளை இணைத்து மாநில சுயாட்சி வழங்க வேண்டுமென்ற அரசியல் தீர்வே சரியான வழி என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறி வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தம் 27.7.2011 அன்று கூறிய கருத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.



“ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் பொருளாதார, பண்பாட்டு செயல்பாடுகள் பேணப்பட வேண்டும் எனற செய்தியையே இந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.” 



இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பிட தமிழகமெங்கும் ஆகஸ்ட் 9, 2011 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுவது என இலங்கைத் தமிழர் சமஉரிமை-அரசியல் தீர்வு-சிறப்பு மாநாடு தீர்மானிக்கிறது. இலங்கைத் தமிழர்களை காக்க

அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு குரல் எழுப்ப இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...