|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 July, 2011

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி அரசு புதிய நிபந்தனை!


தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் உத்தரவில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய தகுதிகளை பூர்த்தி செய்யும் படங்களுக்கு மட்டுமே, இனி, கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும்.தமிழில் பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்கு, கேளிக்கை வரியில் இருந்து முழுமையாக வரி விலக்கு அளித்து, முந்தைய, தி.மு.க., அரசு, 2006ல் உத்தரவிட்டது. பின்னர், இந்த வரிவிலக்கு, பழைய திரைப்படங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ் திரைப்படங்களின் காப்புரிமை வைத்திருப்போருக்கும், கேளிக்கை வரிவிலக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கேளிக்கை வரிச் சலுகை பெற, திரையிடப்படும் பழைய மற்றும் புதிய திரைப்படங்களின் தமிழ் பெயர், தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளதா என்று ஆய்வு செய்து பரிந்துரைக்கு, 2007ல் ஒரு குழு அமைக்கப்பட்டது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிட்டால் மட்டும், அத்திரைப்படங்களின் கதைக் கரு, தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாகவும், கண்ணியமானதாகவும் உள்ளது என்று உறுதி செய்ய இயலவில்லை என்றும், சில தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிட்டதால் மட்டும் கேளிக்கை வரிவிலக்கு பெற்றுவிடுவதாகவும், அரசு கருதியது.எனவே, கேளிக்கை வரிச்சலுகை பெற, திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன், சில கூடுதல் தகுதிகளையும் நிர்ணயித்து, தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அவை வருமாறு:

* திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடம் இருந்து, "யு' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

* திரைப்படத்தின் கதையின் கருவானது, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

* திரைப்படத்தின் தேவையை கருதி, பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர, பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.

* திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிகளவில் இடம்பெற்றால், அத்திரைப்படம் வரிவிலக்கு பெறுவதற்கான தகுதியை இழக்கும். இந்த வரையறைகள், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும். மேலும், கேளிக்கை வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்க, புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் திரைப்படங்களை பார்வையிட்டு, வரிவிலக்கு அளிக்க பரிந்துரைப்பதற்காக, ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்பட உள்ளதாக, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...