|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 July, 2011

நடிகர் ரவிச்சந்திரன் மரணம்!

சிறுநீரகங்கள் முற்றாக செயலிழந்து சிகிச்சைப் பெற்று வந்த பழம்பெரும் கதாநாயகன் ரவிச்சந்திரன் சென்னையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. அவருடைய உடல் தகனம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

காதலிக்கநேரமில்லை என்ற சூப்பர் ஹிட் படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ஸ்ரீதரால் அறிமுகம் ஆனவர் ரவிச்சந்திரன்.

தொடர்ந்து நான், குமரிப்பெண், அதே கண்கள், மூன்றெழுத்து, பாக்தாத்பேரழகி, அன்றுகண்ட முகம் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் சமீபத்தில் வெளியான ஆடுபுலி. அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார்.

வெள்ளிவிழா கதாநாயகன் என்று அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். ஊமை விழிகள் படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.

சிறுநீரகக் கோளாறு

71 வயதான ரவிச்சந்திரனுக்கு நீண்டகாலமாக சர்க்கரை நோய் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. நுரையீரலில் நீர்க் கோர்ப்பு மற்றும் மூச்சுத்திணறல் நோய்களால் பாதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கோமா நிலையை அடைந்தார்.

கடைசி வரை நினைவு திரும்பாமலேயே நேற்று இரவு 8.35 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை தியாகராயநகரில் உள்ள அவருக்கு சொந்தமான சாய் மகால் என்ற திருமண மண்டபத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

ஏராளமான பொது மக்களும், திரை உலக பிரமுகர்களும் ரவிச்சந்திரன் உடலுக்கு மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ரவிச்சந்திரனின் உடல் தகனம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்சார மயானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், பாலாஜி, அம்சவர்தன் என்ற 2 மகன்களும், லாவண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் அம்சவரதன் சில படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவரை நாயகனாக வைத்து ரவிச்சந்திரன் இரு படங்களை இயக்கினார்.

வெள்ளிவிழா நாயகன்

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் சொந்த பெயர் ராமன். அவருடைய சொந்த ஊர் திருச்சி. ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் இயக்குநர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார்.

காதலிக்க நேரமில்லை படத்துக்குப் பின் நிற்க நேரமில்லை என்று சொல்லும் அளவுக்கு பிஸியான நாயகனாகிவிட்டார் ரவிச்சந்திரன்.ஸ்ரீதரின் சொந்த படநிறுவனமான சித்ராலாயாவுக்காக 2 வருடத்திற்கு ரவிச்சந்திரனை மாதம் ரூ.500 சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தார். 2 வருடங்களில் ரவிச்சந்திரன் பிரபலமானதும் சித்ராலாயா நிறுவனத்தில் இருந்து விலகி மற்ற நிறுவன படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு அவர் படிப்படியாக உயர்ந்து வெள்ளிவிழா கதாநாயகன் என புகழப்பட்டார்.

அறுபதுகளின் இறுதி மற்றும் எழுபதுகளின் ஆரம்பத்தில் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் மிகப் பிரபலமான நாயகர்களாகத் திகழ்ந்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...