|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 July, 2011

சுவிஸ் வங்கிகளில், பணம் சேமித்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்கள் அந்நாட்டுக்கு அளிக்கப்படும்' என, இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார்!


சுவிஸ் வங்கிகளில், பணம் சேமித்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்கள் அந்நாட்டுக்கு அளிக்கப்படும்' என, இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார்.இந்தியா - சுவிட்சர்லாந்து இடையேயான இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (டி.டி.ஏ.ஏ.,), கடந்தாண்டு ஆகஸ்ட்டில் திருத்தம் செய்யப்பட்டது. முந்தைய ஒப்பந்தப்படி, வரி ஏய்ப்பு செய்தவர்கள் பற்றிய விவரங்களை மட்டுமே சுவிஸ் நாட்டில் இருந்து இந்தியா பெற முடியும். திருத்தப்பட்ட ஒப்பந்தப்படி, யார் யார் பணம் சேமித்துள்ளனர் என்ற முழு விவரத்தைப் பெற வழி பிறந்துள்ளது.

அதன்படி, சுவிஸ் வங்கிகளில் பணம் சேமித்துள்ள இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் பற்றிய விவரங்களை, இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தியா பெற முடியும்.இந்த ஒப்பந்தம், சுவிஸ் பார்லிமென்ட்டில், கடந்த ஜூன் 17ம் தேதி ஒப்புதல் பெற்றது. சுவிஸ் சட்டப்படி, பார்லிமென்ட்டில் ஒப்புதல் ஆன மசோதா மீது, பொதுமக்கள் அடுத்த 100 நாட்களுக்குள் கருத்து தெரிவிப்பர். அதில் வேறுபாடுகள் இருக்கும் பட்சத்தில், மசோதா குறித்து பொது ஓட்டெடுப்பு நடக்கும்.அதன்படி, ஜூன் 17ம் தேதி சுவிஸ் பார்லிமென்ட்டில் ஒப்புதல் பெற்ற இருதரப்பு டி.டி.ஏ.ஏ., ஒப்பந்தம் மீது, அக்டோபர் 6ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து கேட்கப்படும். அதில் வேறுபாடுகள் இருந்தால், பொது ஓட்டெடுப்புக்கு விடப்படும்.

இதுகுறித்து இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் பிலிப்பி வெல்டி கூறியதாவது:அக்டோபர் மாதம், இதில் பொது ஓட்டெடுப்பு தேவையா? வேண்டாமா என்பது தெரிந்து விடும். இருந்தாலும், பொது ஓட்டெடுப்பு இதற்குத் தேவைப்படாது என்றே நான் நம்புகிறேன்.நான் சொல்வது சரியாக இருக்கும் பட்சத்தில், அக்டோபர் 7ம் தேதியே, வங்கிகளில் சேமித்து வைத்துள்ளோர் பற்றிய விவரங்களைத் தர நாங்கள் தயாராக இருப்பதாக, இந்திய அரசிடம் தெரிவிப்போம்.அப்போது, இதுபற்றி இந்திய அரசு எங்களிடம் கோரிக்கை விடுக்கலாம். இந்தாண்டின் துவக்கத்தில் இருந்து, யார் யார் சுவிஸ் வங்கிகளில் பணம் சேமித்துள்ளனர் என்ற விவரங்கள் அவர்களுக்கு கிடைக்கும்.இவ்வாறு வெல்டி தெரிவித்தார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "சுவிஸ் சட்டப்படி, சர்வதேச நாடுகளுடன் அந்நாடு செய்து கொள்ளும் ஒப்பந்தம், அந்நாட்டு பார்லிமென்டில் ஒப்புதல் பெறப்பட்டு பின், உள்ளூர் அதிகாரிகளிடமும் ஒப்புதல் பெறப்படும். அவ்வகையில் நமது ஒப்பந்தம், இந்தாண்டின் இறுதியில் ஒப்புதல் பெற்று விடும்' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...