|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 August, 2011

'தலைக்கு மேலே கழுகுகள்...ஏ.கே.கான்!

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ்சுக்கு சிக்கல் வரலாம் என்று கூறியிருந்தேன்.  இதோ.. அது வந்தேவிட்டது. அமெரிக்காவின் கடன் தர வரிசை குறைக்கப்பட்டதையடுத்து உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக பிரான்ஸ் குறித்த பயமும் சேர்ந்து கொண்டு, உலக பொருளாதாரத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் கடன் வாங்கும் தர வரிசையும் AAAவிலிருந்து AA ஆகக் குறைக்கப்படலாம் என்ற அச்சம் பரவிதாலும், பிரான்ஸ் நாட்டின் 2வது மிகப் பெரிய வங்கியான Société Générale வங்கியின் நிதி நிலைமை மோசமாக உள்ளதாகவும், விரைவிலேயே அந்த வங்கி திவால் ஆகலாம் என்றும் புரளி பரவியுள்ளது.

இதையடுத்து ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க பங்குச் சந்தையிலும் இந்த வங்கியின் பங்குகள் பெருமளவு சரிந்தன. மேலும் பிரான்ஸின் தர வரிசை குறைக்கப்படலாம் என்ற தகவலும் பரவியதால் எல்லா சந்தைகளில் வீழ்ச்சி வேகம் பிடித்துள்ளது. ஏற்கனவே கிரீஸ், போர்சுகல், ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளின் பொருளாதாரம் சரிந்து, அடிப்படை செலவுகளுக்கே மற்ற நாடுகளின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இத்தாலியின் நிதி நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் இந்த நாடுகளின் கடன் சுமை ஐரோப்பாவின் பொது கரன்சியான ஈரோ மீது 'ஏறிவிட்டது'. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் எல்லா சந்தைகளிலுமே நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இந் நிலையில் பிரான்ஸ் குறித்த பயம் நேற்று அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகளை புரட்டி எடுத்துவி்ட்டது. சந்தைகள் சரிந்து, படுத்த பின்னர் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர், மூடிஸ், பிட்ச் ஆகிய உலகின் 3 முன்னணி நிதி நிலை தர நிர்ணய நிறுவனங்களும், பிரான்ஸ் அரசும் விளக்கம் தெரிவித்து அறிக்கை விட்டுள்ளன. அதில், பிரான்ஸின் தர வரிசை தொடர்ந்து AAA நிலையிலேயே இருக்கும்.. அதை தரம் குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அறிவித்துள்ளன.

ஆனால், இந்த விளக்கம் மக்களிடம் (குறிப்பாக, பங்கு சந்தையின் யூக வியாபாரிகள்) போய்ச் சேரும் முன்பாக, அமெரிக்க பங்குச் சந்தையிலும் ஐரோப்பாவிலும் 4% அளவுக்கு பங்குகளின் விலை சரிந்து பல டிரில்லியன் டாலர்கள் காற்றில் கரைந்துவிட்டன. அமெரிக்கா அளவுக்கு இல்லாவிட்டாலும் பிரான்சின் நிதி நிலைமையும் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை. அமெரிக்காவின் தர வரிசையைக் குறைத்த ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. அரசியல் விளையாட்டில் இந்த நிறுவனம் இறங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தான் பிரான்ஸ் விஷயத்தில் அந்த நிறுவனம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் 2015ம் ஆண்டில் பிரான்சின் கடன் சுமை அந் நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் (GDP) 83 சதவீதமாக இருக்கும் என்கிறார்கள். (இப்போது அமெரிக்காவின் கடன் சுமை 95 சதவீதமாக உள்ளது. இதனால் தான் அதன் தரத்தை இறக்கியது ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்). இதை பிரான்ஸ் இப்போதே கட்டுப்படுத்தத் தவறினால், அதுவும் AAAவிலிருந்து AA அல்லது அதற்கும் கீழே தரம் இறக்கப்படலாம். இந்த பயம் தான் ஐரோப்பிய பங்குச் சந்தைகளை அலற வைத்து வருகிறது.

பிரான்சின் Société Générale வங்கியின் முதலீடுகளில் முக்கிய பங்கு வகிப்பது கிரீஸ். இப்போது அந்த நாடு 'திவால் நிலைக்கு' மிக அருகே இருப்பதால், இந்த வங்கியும், இதைச் சார்ந்த மேலும் பல வங்கிகளின் பங்குகளும் சரிந்து கொண்டுள்ளன. இந் நிலையில் தங்கள் வங்கி குறித்து புரளி கிளப்பிவிட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு பிரான்ஸ் உளவுப் பிரிவினரைக் கேட்டுக் கொண்டுள்ளது Société Générale.

அமெரிக்காவின் தரம் இறக்கப்பட்டதையடுத்து எது உண்மை, எது பொய் என்ற கவலையே இல்லாமல் உலகெங்கும் யூகங்கள் தலைவிரித்தாடி உலக பொருளாதாரத்தை சீர்குலைத்து வருகின்றன. (அமெரிக்காவுக்கு) 'அடுத்தது யார்' என்ற கேள்விகளோடு திகிலைப் பரப்பி வருகின்றன. அடுத்தது யாரோ நமக்குத் தெரியாது. ஆனால், பிரான்சின் தலைக்கு மேலே கழுகுகள் பறந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

உலகளவில் பங்குச் சந்தைகளில் தொடரும் இந்த பிரச்சனைகளால், இந்திய அரசு தனது பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று காசு பார்க்கும் திட்டத்துக்கு 'பிரேக்' போடும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ. 40,000 கோடி வரை திரட்ட மத்திய அரசு தனக்குத் தானே இலக்கு நிர்ணயித்திருந்தது.
ஆனால், இப்போது பங்குச் சந்தைகள் உள்ள நிலையில் இதில் பாதி அளவு பணத்தைக் கூட அரசால் திரட்ட முடியாது என்கிறார்கள்.

இப்போது, ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் தர வரிசைப்படி இந்தியாவின் ரேங்க் BBB ஆக (குறைந்த முதலீட்டு தரம் கொண்ட சந்தை-Considered lowest investment grade by market participants) உள்ளது. ஆனால் இந்தியா, ஜப்பான், மலேசியா, தைவான், தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் நிதி நிலைமையும் கடன் விகிதமும் திருப்தி அளிக்கவில்லை என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அவற்றின் தர வரிசையும் குறைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சுத்தம்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...