|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 August, 2011

கொளுந்து விட்டு எரியும் கலவரம்- வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள்

இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் தலைவிரித்தாடும் கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனராம். லண்டனில் தொடங்கிய கலவரம் இப்போது மான்செஸ்ட்ர், நாட்டிங்காம், பிர்மிங்காம், லிவர்பூல், பிரிஸ்டல் என பல நகரங்களுக்கும் பரவியுள்ளது.

இந்தக் கலவரம் வெடிக்க முதலில் ஒரு காரணம் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது காரணமே இல்லாமல் கலவரம் பரவி வருகிறது. கடைகளையும், வர்த்தக நிறுவனங்களையும் சூறையாடி வருகின்றனர் கலவரக்காரர்கள். இந்த வன்முறைக் கலவரத்தில் சிக்கி 3 ஆசியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக சீக்கியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறாத வகையில் இருந்து கொள்கின்றனர். பல இந்தியர்களுடைய வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதனால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பிற நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் மிகவும் முன்ஜாக்கிரதையாக வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கி்க் கிடக்கின்றனர்.

அலு்வலகங்களுக்குச் செல்வதையும் முடிந்தவரை தவிர்த்து வருகின்றனராம். ஈஸ்ட் ஹாம் பகுதியில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஹரீஷ் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் கூறுகையில், எங்களில் பெரும்பாலானவர்கள் அலுவலகம் செல்லாமல் தவிர்த்து வருகிறோம். சிலர் மட்டும் அலுவலகம் சென்றனர். எங்களது குடும்பத்தினருக்கு அவ்வப்போது போன் செய்து பத்திரமாக இருப்பதைத் தெரிவித்து வருகிறோம். இப்போதைக்கு ஆட்களைக் குறி வைத்து லண்டனில் யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை. கடைகளை மட்டுமே சூறையாடி வருகின்றனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இருக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்றார்.

அதேபோல ஈழத் தமிழர்களும் வெளியே நடமாடுவதை முடிந்தவரை தவிர்க்கின்றனர். ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது இங்கிலாந்தில் வசித்து வரும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் லண்டனில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தியதது நினைவிருக்கலாம். அதேபோல ராஜபக்சே லண்டன் வந்தபோதும் அவரை எதிர்த்து விமான நிலையத்தையே கலங்கடித்தனர்.

இந்த நிலையில் தற்போதைய கலவரத்தைப் பயன்படுத்தி சிங்களர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் அல்லது கலவரகக்காரர்களுடன் இணைந்து தாக்கலாம் என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகவும், வனமுறையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். வெளியே போவதாக இருந்தாலும் கூட மிகுந்த பாதுகாப்புடன் போய் வருகின்றனராம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...