|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 August, 2011

உரமேற்ற உதவும் கம்பங் கஞ்சி!

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பு மிகவும் சத்து நிறைந்த உணவுபொருளாகும். வறட்சி காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு மருத்துவ குணம் கொண்டது. இதயநோயை கட்டுப்படுத்துவதில் கம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள உயிர்சத்துக்கள் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்துக்கும் நரம்புகளின் செயலூக்கத்துக்கும் உடல் பலத்துக்கும் பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: கம்பில் உள்ள கால்சியம், குரோமியம், இஎஃப்ஏ, நார்ச்சத்துகள், ஃப்ளேவனாயிட்ஸ், ஃபோலிக் அமிலம், அயோடின், இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம் போன்றவை எலும்பு வளர்ச்சி, சீரான ரத்த ஓட்ட சுழற்சி, ரத்தத்தில் சர்க்கரையை நிலைநிறுத்துதல், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை முறைப்படுத்துதல், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குதல் போன்ற இன்றியமையாத பணியையும் உடலில் செய்கின்றன.

உடல் சூடு தணிக்கும்: மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் காலை வேளையில் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவோடு சேர்த்து உண்டால் குடல்புண், வயிற்றுப்புண் வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய: உடல் வலுவடைய கம்பு மிகச்சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவைடையும். இது கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுக்கும். சிறுநீரை பெருக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும். அதிகமாக கம்பங்கஞ்சி குடித்தால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...