|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 August, 2011

இனிமை பொங்கும் ஈத் பெருநாள்!



பிறையும் ... திருமறையும் ...
மேகத்திரை
பிரிந்தது....
வானில் பிறை
தெரிந்தது....
மனதில் குறை
பறந்தது...
இரவெல்லாம்
பிரார்த்திக்க
விழித்திருந்தோம்...
பகலெல்லாம்
நோன்புக்காகப்
பசித்திருந்தோம்...
இறைவன்
பார்க்கிறான் என்கிற
பயத்தில்....
இந்த பயம்
ஒரு மாதம் மட்டுமின்றி
ஆயுள் வரை
ஆட்டிப் படைக்க
வழிகாட்டு இறைவா....
நல்வழிகாட்டு...

இஸ்லாம் என்ற அரபு வார்த்தைக்கு, அமைதி, சமாதானம் என்ற பொருள்கள் உண்டு. இஸ்லாம் பிறந்து 1389 வருடங்கள் ஆகிவிட்டன. மூடநம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றி பின்பற்றி வந்த ஆதி அரபு மக்களை தனியாக நின்று எதிர்த்து போராடி, இறைவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்ற கொள்கையை வகுத்து இஸ்லாம் என்று பெயரிட்டு இவ்வுலகத்திற்கு தந்தவர் முகமது நபி (ஸல்) ஆவார். இன்று இக்கொள்கையை உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருக்கின்ற 157 கோடி மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். உலகத்தின் மொத்த ஜனத்தொகை 680 கோடியில். 23 சதவீதம் முஸ்லிம்கள். இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் 18 கோடி மக்கள் இஸ்லாமியர் என்று நீதியரசர் சாச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. இஸ்லாம் ஒரு பெரிய மாளிகை. இந்த  மாளிகையை ஐந்து கொள்கைகள், ஐந்து தூண்களாக நின்று தாங்கிக் கொண்டிருக்கின்றன. அவையாவன 1. ஆண்டவன் ஒருவன். அவனை அல்லாஹ் என்று அழைக்கிறோம். அல்லாஹ்வின் திருத்தூதர் முகமது நபி (ஸல்)
2. ஐந்து நேரம் தொழ வேண்டும்.
3. ரம்ஜான் மாதம் 30 நாட்களும் நோன்பு வைக்க வேண்டும்.
4. ஒவ்வொரு முஸ்லிமும் தன் வருமானத்தில் இரண்டரை சதவீதம் ஆண்டுதோறும் கண்டிப்பாக தர்மம் செய்ய வேண்டும்.
5. முஸ்லிம்களில் முடிந்தவர்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மெக்கா சென்று காபாவை தொழுது வரவேண்டும்.

இஸ்லாத்திலும், மற்ற சமயங்களைப் போல 12 மாதங்கள் உண்டு. ஒரு மாதம் 29 இரவுகளைக் கொண்டது. சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்பட்டிருக்கிறது. மேற்சொன்ன சந்திர இயக்க மாதங்களில் 9வது மாதமான ரம்ஜான் மிகச் சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குர்ஆன் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறங்கியது என்பர். ரம்ஜான் என்றால் எரி என்று பொருள்.  ரம்ஜான் மாதம் மிகவும் சூடான (காய்ந்து எரியும்) மாதம். அதுமட்டுமல்லாது மனிதர்கள் அதுவரைக்கும் செய்த பாவங்களை எரித்துவிடும் என்றும் சொல்வர். ரம்ஜான் மாதத்தை ரமலான் என்றும் ரமதான் என்றும் சொல்லலாம். இந்த மாதத்தின் கடைசி 10 நாட்கள் சிறப்புடையதாகக் கருதப்படும். ஏனென்றால் இந்த 10  நாட்களில் ஏதோ ஒரு இரவில் தான் திருக்குர் ஆனை அல்லாஹ் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு இறக்கினான் என்பர்.குர்ஆன் என்ற அரபு வார்த்தைக்கு படி என்று பொருள். ரம்ஜான் நோன்பு முடிந்த அடுத்த பெருநாள் என்றும், ஈத் பெருநாள் என்றும் சொல்வர். புத்தாடை உடுத்தி, பலகாரங்களும், உணவு வகைகளும் செய்து, நண்பர்களுடன் கூடி உண்டு மகிழ்வர். உற்றார் உறவினர், நண்பர்கள் ஒன்று சேர்ந்து கட்டி அணைத்து (முலாக்கத்) மகிழ்வர். ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வர். மாற்று மதத்தினரையும் இனத்தவரையும் வீடுகளுக்கு அழைத்து விருந்து கொடுப்பர். அரபு நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களும் கூட, இன்னொருவரைப் பார்க்கும்போது சலாம் அலைக்கும் என்பர். அதன் பொருள் உங்களிடம் அமைதி உண்டாகட்டும்என்பதாகும். இஸ்லாம் அமைதிக்காகவும்,

சமாதானத்திற்காகவும் சகோதரத்துவத்திற்காகவும் நிற்கின்ற மார்க்கம். இங்கே வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் இடமில்லை. இவ்விதச் செயல்களில் இஸ்லாத்திற்கு உடன்பாடில்லை. மார்க்கத்தில் இஸ்லாமியர், தேசத்தில் இந்தியர், இந்தியா நமது நாடு என்ற உணர்வோடும், குர்ஆனில் வலியுறுத்தி சொல்லப்படுகின்ற லக்கும் தீனுக்கும் வலியதீன் அதாவது அவர்களுக்கு அவரவர் வழி என்ற இலக்கணத்திற்கு உதாரணமாக இஸ்லாமியர்கள் திகழ்கிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...