|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 August, 2011

கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை ஜெயலலிதா!


29.8.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110 ன் கீழ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அளிக்கப்பட்ட அறிக்கை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை  ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.  

எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன்.  மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72 ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161 ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1) ன்படி கட்டளையிடுகிறது. 

இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.   எனவே, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.  

குடியரசுத் தலைவர் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...