|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 August, 2011

சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் வந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடக்க நிலையில் இது இருப்பதாகவும், இதற்காகவே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சோனியா காந்தி தற்போது நியூயார்க்கில் உள்ள கேட்டரிங் புற்றுநோய் மையம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரபல பெண்கள் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை நிபுணரான, இந்திய அமெரிக்கரான டாக்டர் தத்தாத்ரேயலு நோரி தலைமையிலான குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும், தற்போது அவர் தனி வார்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் சோனியாவுக்கு என்ன நோய் என்பது இதுவரை தெரிவிக்கப்படாமல் உள்ளது. இது சோனியா காந்தியின் தனிப்பட்ட விவரம் என்பதால் அதுகுறித்து மருத்துவமனை சார்பிலும் சரி, காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் சரி, சோனியா குடும்பத்தினர் சார்பிலும் சரி எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆனால் சோனியா காந்திக்கு வந்திருப்பது கருப்பை வாய் புற்றுநோய் என்று தகவல்கள் கூறுகின்றன. இதற்குத்தான் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்திருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியாவுக்கு நடந்த அறுவைச் சிகிச்சை ஒரு மணி நேரம் நடந்ததாகவும், அவர் ஒரு மாத காலத்திற்கு மருத்துவமனையில் தங்கியிருக்க நேரிடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து அடுத்து சோனியாவுக்கு ரேடியேஷன் தெரப்பி அளிக்கப்படவுள்ளது. அவருடைய கருப்பை வாயில் புற்றுநோயின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறியும் சிஸ்டோகிராபி ரிப்போர்ட் கிடைத்ததும் அதன் அடிப்படையில் ரேடியேஷன் தெரப்பி தரப்படும் என்று தெரிகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் புற்றுநோய் சிகிச்சையில் நீண்ட நெடுங்காலமாக ஈடுபட்டிருப்பது இந்த கேட்டரிங் புற்றுநோய் மையம் ஆகும். உலகிலேயே மிகவும் பழமையான புற்று நோய் மருத்துவமனையும் ஆகும். மேலும் டாக்டர் நோரி, உலகிலேயே மிகச் சிறந்த பெண்கள் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மற்றும் சிகிச்சை நிபுணர் என்று பாராட்டப்படுபவர் ஆவார்.

சோனியாவுக்கு டாக்டர் நோரி மூலம் அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை, மூத்த ஐஏஎஸ் அதிகாரி புலோக் சாட்டர்ஜிதான் செய்து கொடுத்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இவர் தற்போது அமெரிக்காவில் உலக வங்கியின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். விரைவில் இவர் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளராக பணியாற்றவுள்ளார். சோனியா காந்தியின் மிகத் தீவிரமான விசுவாசி சாட்டர்ஜி என்று கூறப்படுகிறது.

தற்போது சோனியாவுடன் ராகுல் காந்தியும், பிரியங்காவும் தங்கியுள்ளனர். கூடவே பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும் இருக்கிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...