|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 August, 2011

கடன் மதிப்பீடு குறைப்பு பட்டியலில் இந்தியா!

எஸ் அண்டு பி' நிறுவனம், அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறியீட்டைக் குறைத்ததை அடுத்து, இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகளின் கடன் மதிப்பீடு குறியீடுகளையும் குறைக்கப் போவதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறியீடு, உயர்நிலையான "ஏஏஏ'யில் இருந்து, "ஏஏ+' என்ற அடுத்த நிலைக்கு "எஸ் அண்டு பி' நிறுவனத்தால் குறைக்கப்பட்டதை அடுத்து, கடன் மதிப்பீடு நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சந்தேகம் எழுப்பின. இந்நிலையில், "எஸ் அண்டு பி' நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகளின் கடன் மதிப்பீட்டைக் குறைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டிருப்பதாவது: ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள நாடுகளின் பாதுகாப்பான கடன் குறியீடுகள் விரைவில் குறைக்கப்படும். அதைத் தொடர்ந்து, மேலும் பல நாடுகளின் கடன் குறியீடும் குறைக்கப்படும். கடந்த 2008க்கு முந்தைய நிலையோடு இப்போதைய நிலையை ஒப்பிடும் போது, ஜப்பான், இந்தியா, மலேசியா, தைவான், தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் நிதித் திறன் குறைந்துள்ளது. அதோடு, வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க வீதத்தில் இல்லை. மேலும் அவற்றின் ஏற்றுமதியும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் கடைசி பாதிப்பில் இன்னும் இந்தியா, ஜப்பான், மலேசியா, தைவான் மற்றும் நியூசிலாந்து நாடுகள் உள்ளன. வெளிச் சந்தைகளைச் சார்ந்து இயங்கக் கூடிய நிதி அமைப்பைக் கொண்ட நாடுகள் விரைவில், அவற்றின் "லிக்விடிட்டி'யை இழக்க வேண்டி வரும். இது போன்ற பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தால், பாகிஸ்தான், இலங்கை, பிஜி, ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் பாதிக்கப்படக் கூடும். இந்த நாடுகளின் அரசுகளுக்கு, அவற்றின் சொந்த வருமானத்தைப் பெருக்குவதற்கான திட்டங்கள் தேவைப்படுகின்றன.
அவ்விதம் அந்நாடுகளின் கடன் மதிப்பீட்டைக் குறைக்கும் பட்சத்தில், மிக மோசமான, நீண்ட கால விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது தான். தற்போது, அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதால் அதன் தாக்கம், ஆசிய சந்தைகளில் மோசமாகவே இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை பலமாகவே உள்ளது. பிரச்னையை எதிர்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. நாம் உள்ளூர் நுகர்வு சந்தையை ஊக்குவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் துரித கதியில் மேற்கொள்ளப்படும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் எழுந்துள்ள பிரச்னைகள், இந்தியாவில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். ஆனால், அவற்றை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்தியா நல்ல நிலைமையில் தான் உள்ளது' - மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

"உலகளவில் எழுந்துள்ள இப்பிரச்னை கவலைக்குரியது. ஆனால், பீதியடைய வேண்டியதில்லை. அமெரிக்க பொருளாதாரம் பல மாதங்களாகவே தடுமாறிக் கொண்டு தான் இருந்திருக்கிறது. அதன் விளைவு தான், பங்குச் சந்தையில் எதிரொலித்தது. அமெரிக்க பொருளாதாரம் வீழச்சியடைந்தால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படவே செய்யும். இன்னும் அடுத்த மாதங்களில் இந்தியா, முதலீட்டுக்குப் பாதுகாப்பான இடமாக உலகளவில் கருதப்படும்' - மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு.

"இந்தாண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 1.5 சதவீதம். ஆண்டு முழுவதிற்குமான வளர்ச்சி விகிதம், அதை விடவும் அதிகமாக இருக்காது. அமெரிக்க பொருளாதாரம் மிகவும் மந்தமான வளர்ச்சியில் தான் உள்ளது. இதனாலும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளாலும் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும். அன்னிய முதலீடு மிதமான அளவில் குறையும்' - பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன்.

"இந்தியப் பொருளாதார வளர்ச்சி, உள்ளூர் காரணிகளால் தான் இயக்கப்படுகிறது. அதனால், பங்குச் சந்தை குறுகிய காலத்தில் நிலைபெற்று விடும். மிக மோசமான விளைவு ஏற்படாது என்றாலும், என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். உலகளவில் நிதி ஸ்திரத்தன்மை குலைந்தால், அதன் எதிரொலி இந்தியாவிலும் கேட்கும்."எஸ் அண்டு பி'யின் நடடிவடிக்கை, எதிர்பார்த்த ஒன்று தான். அமெரிக்காவின் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்கனவே வெளியுலகுக்குத் தெரிந்த ஒன்று தான். இதே பிரச்னை, ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளது' - திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா.

"இப்பிரச்னையை எதிர்கொள்ளும் விதத்தில் நாட்டின் நிதிக் கொள்கை மற்றும் ஒழுங்கு முறை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அமெரிக்க கடன் பிரச்னை குறித்த உலக நடப்புகளை, ரிசர்வ் வங்கி தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. விரைவில் இது பற்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் விளைவாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக் கூடிய காரணங்கள் இருக்கின்றன என்றாலும், அவற்றின் பாதிப்பு குறைந்த அளவிலேயே இருக்கும்' - மத்திய ரிசர்வ் வங்கி.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...