|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 August, 2011

பல்நோய் தீர்க்கும் மகிழம்பட்டை!

புனித மரமாக போற்றப்படும் மகிழமரம் தென்னிந்திய வனப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. உயரமான இந்த மரம் இந்தியாவின் வெப்பமான பகுதிகளின் வளர்க்கப்படுகிறது. மகிழ மரத்தின் மலர்கள் சக்கர வடிவத்தில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும். பழந்தமிழ் இலக்கியமான சீவகசிந்தாமணியில் “ஓடுதேர்க்கான் வகுளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கனிகள் முட்டை வடிவில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:வகுளத்தின் மருத்துவப் பயன்களுக்கு அடிப்படையாக அமைபவை குர்சிடால், குர்சிடின், அமினோஅமிலங்கள், டி.குளுக்கோஸ், லுபியோல், பெட்டுலினிக் அமிலம் போன்றவை.

இம்மரம் அடர்த்தியான இலைகளையும் மனங்கவரும் இனிய மணமுடைய கொத்தான வெண்மலர்களையும் கொண்டது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது.

காமம் பெருக்கும் மலர்கள்: மணமிக்க மலர்களில் இருந்து வாசனைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. மகிழம்பூவில் இருந்து எண்ணெய் எடுத்து அதில் சந்தனமர எண்ணெய் கலந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கலாம்.

மலர்களின் பொடி மூக்குப்பொடியாக உள்ளிழுக்கப்பட்டு தலைவலி போக்க உதவுகிறது. பூ தாது வெப்பமகற்றும், காமம் பெருக்கும், விதை குளிர்ச்சியூட்டும், தாதுபலம் பெருக்கும், நஞ்சு நீக்கும். மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். பட்டை, சத்து மருந்தாகவும் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அருந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோல்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது.

நறுமணம் மிக்க மகிழமரத்தின் பூக்களை நுகர்ந்தலே சளி வெளியேறும், தலைவலி குணமடையும், உற்சாகம் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். மகிழம்பூவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் காயம் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. காய்ச்சலுக்கு டானிக் போல பயன்படுத்தலாம்.

கருவை பாதுகாக்கும்:பெண்களின் கருத்தரித்தலை ஊக்குவிக்கும். 10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து தினம் 50 மில்லி காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். பழத்தை சாறுபிழிந்து குடிக்க குழந்தை பிறப்பின் போது எளிதாக இருக்கும்.

கனிகள் தொடர் வயிற்றுப் போக்கினை தடுக்கும். விதைகள் வயிற்றுப்போக்கினை தூண்டக்கூடியது. குழந்தைகளின் மலச்சிக்கலை போக்க வல்லது. மலர்கள் கனிகளுடன் சேர்ந்து சதை இருக்கிப் பொருளாக புண்களைக் குணப்படுத்துகிறது.

பல்நோய் குணமடையும்:மகிழம்பூ கசாய நீர் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களில் கொப்பளிப்பாக பயன்படுகிறது. இதனைக் கொண்டு வாய்க்கொப்பளிக்க பற்களும், ஈறுகளும் கெட்டிப்படும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும். மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும். பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.

கண் நோய்க்கான சொட்டுமருந்து தயாரிக்க மகிழமரத்தின் விதைகள் பயன்படுகின்றன. விதையில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து வயிற்று வலியை குணப்படுத்துகிறது. விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மூட்டுவலிக்கு மருந்தாகிறது. விதைகளை பவுடராக்கி அதில் தேன், நெய் கலந்து சாப்பிட உடலுக்கு வலு கிடைக்கும். மகிழமரத்தின் வேரை விழுதுபோல அரைத்து வினிகரில் கலந்து வீக்கத்தில் தடவினால் விரைவில் குணமடையும்.

பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே

ஓட்டுந் திரைவாய் ஒற்றியூரே. என்று மகிழ மரத்தின் பெருமையை சுந்தரர் பாடியுள்ளார். திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர் முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ இறைவழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்துக்களுக்கு மட்டுமின்றி பௌத்தம், சமண சமயத்தவரும் இதனை புனித மரமாக போற்றுகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...