|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 August, 2011

உறவுகளை மதித்தால் பிரிவுகள் இல்லை!

அன்பு என்ற வார்த்தைக்கு நிகரேது. அதனால்தான் அன்பின் பெருமையை எடுத்துக்கூறும் விதமாக திருவள்ளுவர் அன்புடைமை பற்றி தனி அதிகாரமே எழுதியுள்ளார். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகின்றன. அதனை அன்பின் மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும். பிறருக்காக இரக்கப்படுவது மட்டும் அன்பாகி விடாது. தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர் அறிஞர்கள்.

தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்க அன்புகாட்டுதல், அக்கறை கொள்ளல், புரிந்து கொள்ளல், மதித்தல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளல், நம்பிக்கை வைத்தல் போன்ற 7 பண்புகள் வேண்டும் என்கிறார் ஜான்கிரே.

அன்பிலும் பல வகை இருக்கிறது. நட்பு, காதல் சார்ந்த அன்பு இருக்கிறது. என்னுடையது விட்டுத்தரமாட்டேன் என்பது வெறித்தனமான அன்பு. அதனை பொஸசிவ்னஸ் என்றும் கூறலாம். ஒரே பின்னணி பார்த்து வருவது செயல்பூர்வமான அன்பு. தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும். அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு.

அன்பின் சிகரம்: அக்கறை செலுத்துவது என்பது அன்பின் மற்றொரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும். எவர் ஒருவர் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது வெறுப்பவர் மீதும் அக்கறையை செலுத்துகின்றனரோ அவரே அன்பின் சிகரமாவார்.

மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்: புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். புரிந்து கொள்ளுதல் இல்லாததால் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.

அன்பெனும் ஆயுள் காப்பீடு: பாராட்டு தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது. புகழ்வதெல்லாம் பாராட்டாகிவிட முடியாது. இயல்பை விளக்கி, முழுமையை அங்கீகரிப்பதே பாராட்டாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். பாராட்டுவதால் மனித மனம் மகிழ்வுறுகிறது. ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை ஊக்குவிப்பது இணக்கம் அதிகமாகும். பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.

நம்பிக்கையே வாழ்க்கை: நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும். நேர்மை, ஒழுக்கம், உண்மையாயிருத்தல் போன்றவை மற்றவர்க்கு நம்மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பண்புகளாகும். கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது.

ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். ஏற்றுக் கொள்ளல் என்பது தவறுகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் அனுமதித்தலை குறிப்பதல்ல. குறைகளை மன்னிப்பதாகும். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

உறவின் முதலீடு: கணவன் மனைவி அன்புறவு நீடிக்கவேண்டு மெனில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். அன்புடன் அணைத்தல் என்பது உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு.

நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள்.

அகந்தையும், மற்றவரின் உதவாத அறிவுரைகளும் தம்பதிகளுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணும். உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...