|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 September, 2011

தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் 17 மற்றும் 19 ல்!

தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக நடக்கிறது. திருச்சி மாநகராட்சியை தவிர, ஒன்பது மாநகராட்சிகளுக்கு முதல் கட்டமாக அக்டோபர் 17ம் தேதியும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 19ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது.

இதுகுறித்து, தமிழக தேர்தல் கமிஷனர் அய்யர், நிருபர்களிடம் நேற்றிரவு கூறியதாவது: தமிழகத்தில், ஒன்பது மேயர், 755 மாநகராட்சி வார்டுகள், 125 நகராட்சி தலைவர்கள், 3,697 நகராட்சி வார்டுகள், 529 பேரூராட்சி தலைவர்கள், 8,303 பேரூராட்சி வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 6,470 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 99 ஆயிரத்து 333 கிராம ஊராட்சி வார்டுகள் என, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 983பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. நகர் பகுதிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, வாக்காளர்கள் இரண்டு ஓட்டளிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் நகர்ப்புற வாக்காளர்களுக்காக முதல்முறையாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிராமப்புற வாக்காளர்கள், மாவட்ட வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என, நான்கு பேரை தேர்வு செய்யவேண்டும். இதற்கு, ஓட்டுச் சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு தேர்தல் கமிஷனர் கூறினார்.

100 சதவீதம் நேர்மையாக தேர்தல் நடக்கும்: ""உள்ளாட்சி தேர்தல் 100 சதவீதம் நேர்மையாக நடத்தப்படும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என, மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் இந்த நிமிடத்திலிருந்து (நேற்றிரவு 8 மணி) தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது. வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, "பூத் சிலிப்' அச்சடிக்கப்பட்டு ஓட்டுப்பதிவு தேதிக்கு, ஒரு வாரத்திற்கு முன்னரே, கொடுக்கப்படும். பூத் சிலிப் கிடைக்காதவர்களுக்கு, ஓட்டுப்பதிவு தினத்தன்று, ஓட்டுச்சாவடிக்கு அருகே வழங்கப்படும். " பூத் சிலிப்'பை அரசு ஊழியர்கள் தவிர மற்றவர்கள் வழங்க அனுமதி இல்லை. பூத் சிலிப்பை வாக்காளர்கள் பெற்றுக் கொண்டதற்கு கையொப்பம் பெற்று, தனி பதிவேடு பராமரிக்கப்படும். பூத் சிலிப்பில், வாக்காளரின் புகைப்படம் இருப்பதால், ஓட்டுப்பதிவுக்காக, பிற ஆவணங்களை வாக்காளர்கள் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மாவட்ட அளவில், மாவட்ட கலெக்டர்களோடு, துணை கலெக்டர் அந்தஸ்தில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கான வார்டு ஒதுக்கீடு, அரசால் அறிவிக்கப்பட்டது. இதில், தேர்தல் கமிஷனுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மட்டுமே தேர்தல் கமிஷனின் பொறுப்பு. உள்ளாட்சி தேர்தலை 100 சதவீதம் நேர்மையாக நடத்த தேர்தல் கமிஷன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், பிற அமைப்புகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். 2006 உள்ளாட்சி தேர்தலை போல் அல்லாமல், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் இந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். இவ்வாறு மாநில தேர்தல் கமிஷனர் கூறினார்.
திருச்சிக்கு தேர்தல் இல்லை! தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டபோது, திருவெறும்பூர் பேரூராட்சி அதோடு இணைக்கப்பட்டது. "மக்களின் கருத்தை அறியாமல், தன்னிச்சையாக அரசே இந்த முடிவை எடுத்துள்ளது' எனக் கூறி, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், "திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது தவறு' என, ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இதனால், திருச்சி மாநகராட்சிக்கு தற்போது தேர்தல் நடக்கவில்லை.
வேட்பு மனு தாக்கல் துவக்கம்: செப்., 22ம் தேதி
மனு தாக்கல் கடைசி நாள்: செப்., 29
மனு பரிசீலனை: செப்., 30
திரும்பப் பெற கடைசி நாள் : அக்., 3
ஓட்டுப் பதிவு: அக்., 17 மற்றும் 19
ஓட்டு எண்ணிக்கை: அக்., 21ம் தேதி

நான்கு நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர்களுக்கான நான்கு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இதனால், நான்கு விதமான ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன. சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், சிற்றூராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் ஓட்டுச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டிற்கு இள நீல நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

மொத்த ஓட்டுச் சாவடிகள் மற்றும் வாக்காளர்கள்: 
உள்ளாட்சித் தேர்தலில், 4 கோடியே, 63 லட்சத்து, 37 ஆயிரத்து, 379 வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக, 86 ஆயிரத்து, 104 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், ஓட்டுப் பதிவு, 86 ஆயிரத்து, 104 ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது. இதில், 60 ஆயிரத்து, 518 ஓட்டுச் சாவடிகள், ஊரக பகுதிகளிலும், 25 ஆயிரத்து, 590 ஓட்டுச் சாவடிகள், நகர்ப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும், 4,876 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படை விவரங்களை, இந்திய தேர்தல் கமிஷனிடம் பெற்று உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழக தேர்தல் கமிஷன் தேசிய தகவல் தொடர்பு மையத்துடன் இணைந்து இந்தியாவிலேயே முதன் முதலாக ஆன்-லைன் முறையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

* மொத்தம், 4 கோடியே, 63 லட்சத்து, 37 ஆயிரத்து, 379 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
* இவர்களில், 2 கோடியே, 32 லட்சத்து, 98 ஆயிரத்து, 838 பேர் ஆண் வாக்காளர்கள். 2 கோடியே, 30 லட்சத்து, 37 ஆயிரத்துல 930 பேர் பெண் வாக்காளர்கள். இதர வாக்காளர்கள், 611
*'ஊரக பகுதிகளில், 1 கோடியே, 33 லட்சத்து, 18 ஆயிரத்து, 643 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே, 31 லட்சத்து, 24 ஆயிரத்து, 227 பெண் வாக்காளர்களும், 158 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 2 கோடியே, 64 லட்சத்து, 43 ஆயிரத்து, 28 வாக்காளர்கள் உள்ளனர்.
* நகர்ப்புறங்களில், 1 கோடியே, 80 ஆயிரத்து, 195 ஆண் வாக்காளர்களும், 99 லட்சத்து, 13 ஆயிரத்து, 703 பெண் வாக்காளர்களும், 453 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 1 கோடியே, 99 லட்சத்து, 94 ஆயிரத்து, 351 வாக்காளர்கள் உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான, "டெபாசிட்' தொகையை மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன் விவரம்:

பதவி பொது எஸ்.சி., - எஸ்.டி.,
ஊராட்சி உறுப்பினர் 200 100
ஊராட்சித் தலைவர் 600 300
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 600 300
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 1,000 500
பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சித் தலைவர் 1,000 500
நகராட்சித் தலைவர் 2,000 1,000
மாநகராட்சி மேயர் 4,000 2,000
பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் 500 250
நகராட்சி வார்டு உறுப்பினர் 1,000 500
மாநகராட்சி உறுப்பினர் 2,000 1,000

தேர்தல் நடத்தும் அலுவலர்களின் எண்ணிக்கை விவரம்: நகர்புற உள்ளாட்சிகளில் 663 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 2,046 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 915 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 17 ஆயிரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்புறங்களில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஐந்து அலுவலர்கள் வீதமும், கிராமப்புறங்களில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஏழு அல்லது எட்டு அலுவலர்கள் வீதமும், 6 லட்சத்து 30 ஆயிரம் அலுவலர்கள் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஓட்டுப்பெட்டிகளும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும்: இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவிற்கு ஊரகப் பகுதிகளில் ஓட்டுப்பெட்டிகளும், நகர்புற பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தேர்தலுக்கு, 2 லட்சத்து 39 ஆயிரம் ஓட்டுப்பெட்டிகளும், 80 ஆயிரத்து 500 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

வேட்பாளர்கள் செலவு எவ்வளவு? வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை, மாநிலத் தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. "தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், தேர்தல் அலுவலரிடம் தேர்தல் செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்க தவறுபவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

பதவி செலவு(ரூபாயில்)
ஊராட்சி வார்டு உறுப்பினர் 3,750
ஊராட்சி தலைவர் 15,000
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் 37,500
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 75,000
பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி தலைவர் 56,250
முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி தலைவர் 1,12, 500
தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சி தலைவர் 2,25,000
மாநகராட்சி மேயர் 5,62,500
சென்னை மாநகராட்சி மேயர் 11,25,000

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...