|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 September, 2011

இந்திய நிறுவனங்களை கையகப்படுத்த அன்னிய நிறுவனங்கள் தீவிரம் !

நடப்பாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலுமான ஒன்பது மாத காலத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவது மற்றும் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிகரித்துள்ளது. இந்த வகையில், அன்னிய நிறுவனங்கள், கடந்த 9 மாதங்களில் 2,750 கோடி டாலர் மதிப்பிற்கு, 281 வர்த்தக ஒப்பந்தங்களை இந்திய நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ளன. அதே சமயம், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் 1,340 கோடி டாலர் மதிப்பிலான 220 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆக, மதிப்பீட்டு காலத்தில், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் அன்னிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவது மற்றும் இணைத்தல் தொடர்பான நடவடிக்கைகளின் மதிப்பு இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டை விட, நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1,410 கோடி டாலர் மதிப்பிலான 61 வர்த்தக ஒப்பந்தங்கள், கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. டியோலாஜிக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு, பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 21 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை 900 கோடி டாலருக்கு கையகப்படுத்துவதாக அறிவித்தது. இது தான், நடப்பாண்டில், கையகப்படுத்துதல் மற்றும் இணத்தல் தொடர்பாக, இதுவரை அன்னிய நிறுவனங்கள் மேற்கொண்ட வர்த்தகத்தில் மிகப் பெரிய மதிப்பைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், இதே காலத்தில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் துறைமுக முனையங்களை, 197 கோடி டாலருக்கு கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது. 


 இதையடுத்து, நடப்பாண்டில் இதுவரை, அன்னிய நிறுவனங்களை கையகப்படுத்துவது மற்றும் இணைத்தல் தொடர்பாக, மிக அதிக மதிப்பிற்கு மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் என்ற சிறப்பை இது பெற்றுள்ளது. அன்னிய நிறுவனங்கள், ஆர்வமுடன் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவது குறித்து ஏ.என்.இசட் வங்கி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸ் தர்ஸ்பை கருத்து கூறும் போது, "சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், அன்னிய நிறுவனங்கள், அதிகளவில் இந்தியாவில் கால் பதிக்க விரும்புவதை இது எடுத்துக் காட்டுவதாக உள்ளது' என்று தெரிவித்தார் உலக நாடுகளில் உள்ளது போன்ற பிரச்னைகள் இந்தியாவிலும் உள்ளன. எனினும், சிறந்த தனியார் நிறுவனக் கட்டமைப்பு, அறிவார்ந்த வல்லுனர்களின் பங்களிப்பு, அதிகரித்து வரும் நடுத்தர வருவாய் பிரிவினர் உள்ளிட்ட அம்சங்கள், அன்னிய நிறுவனங்களை இந்தியாவை நோக்கி ஈர்ப்பவையாக உள்ளன என்று அவர் மேலும் கூறினார். இத்துடன், நாட்டில் ஜனநாயக நெறிமுறை சிறப்பாக உள்ளதும், வெளிநாட்டு நிறுவனங்களை, இந்தியாவில் கால்பதிக்க தூண்டுகின்றன. 


அதே சமயம், உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக, இந்திய நிறுவனங்கள், அயல்நாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துவது மற்றும் இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், கையகப்படுத்துவது மற்றும் இணைத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, அன்னிய நிறுவனங்களுடன் 970 கோடி டாலர் மதிப்பிலான, 142 வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளன. அதே சமயம், சென்ற 2010ம் ஆண்டு இதே காலத்தில்,இந்திய நிறுவனங்கள் 2,390 கோடி டாலர் மதிப்பிலான 175 வர்த்தக ஒப்பந்தங்களை அயல் நாடுகளில் மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்திய நிறுவனங்கள், சிறப்பான வர்த்தக வாய்ப்புள்ள அயல்நாடுகளை சேர்ந்த நிறுவனங்களை கையகப்படுத்துவது அல்லது கூட்டு வைப்பதற்கான சாத்தியக் கூறுகளை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் மின்உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ள நிறுவனங்கள், அவற்றின் நிலக்கரி தேவைக்காக, இந்தோனேஷியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள நிலக்கரி நிறுவனங்களை கையகப்படுத்தவோ அல்லது கூட்டாக இணைந்து செயல்படவோ ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன என ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சந்தா கோச்சார் தெரிவித்தார். 


நடப்பாண்டு நிதிச் சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, எரிசக்தி, தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொலைத் தொடர்பு துறைகளில் கையகப்படுத்தல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, எரிசக்தி மற்றும் இயற்கை வளம் சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ரெலிகேர் கேப்பிடல் மார்கெட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கவுரவ் குங்கர் தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் அசாதாரண ‹ழல் நிலவுகின்ற போதிலும், இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, உள்நாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக செயல்பட அயல்நாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...