|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 September, 2011

அடைக்கலம் தேடிய 50 பேரை இலங்கைக்கு அனுப்பியது இங்கிலாந்து!

தனது நாட்டில் அடைக்கலம் தேடிச் சென்ற 50 பேரை இலங்கை நாட்டுக்கே திருப்பி அனுப்பியது இங்கிலாந்து அரசு. அடைக்கலம் தேடி வந்தவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்காது என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்த போதும் அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டு உள்ளனர்.

 நாடுகடத்தப்பட்ட 50 பேரும் வியாழக்கிழமை காலை கொழும்பு வந்துச் சேர்ந்தனர். இதில் பெரும்பான்மையோர் தமிழர்கள் ஆவர். குறைந்த அளவில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் இதில் அடங்குவர்.  இலங்கையில் நான்காம் ஈழப் போர் நடந்த காலகட்டத்தில் பல தமிழர்கள் ராணுவத்துக்கு அஞ்சி பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் சிலர் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடினர். இவ்வாறு சென்ற மக்கள் குழுவில் சிலரை இங்கிலாந்து அரசு இலங்கைக்கே திரும்பி அனுப்பியுள்ளது.

 
2009-ம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போருக்கு பின்பு இலங்கையில் நிலைமை சீரடைந்து விட்டதாக இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து எல்லை அமைப்பு தஞ்சம் கோரியவர்களை திருப்பி அனுப்பி வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இங்கிலாந்தில் தஞ்சம் கோரியவர்கள் திரும்ப அனுப்பப்படுவது இரண்டாவது முறையாகும்.  இலங்கைக்கு அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டால் அவர்கள் இலங்கை அரசால் சித்ரவதைக்கு உள்ளாவார்கள் என்றும் சில நேரங்களில் காணாமல் போய்விடுவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எச்சரித்து இருந்தன. எனினும் இலங்கையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை அவர்கள் உதவிக்கு அணுகலாம் என்று இங்கிலாந்து கூறியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...