|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 September, 2011

சவாலாகும் தேமுதிக - கம்யூனிஸ்ட் கூட்டணி!

கோவை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு சவால் விடும் வகையில் தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைந்துள்ளது.

 அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் கோவை மாநகராட்சித் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

 
ஆளும்கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, திமுக சார்பில் துணை மேயர் நா.கார்த்திக், மதிமுக சார்பில் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், மார்க்சிஸ்ட் சார்பில் யு.கே.சிவஞானம், காங்கிரஸ் சார்பில் ஆர்.சின்னையன், போட்டி வேட்பாளராக மாவட்ட துணைத் தலைவர் பச்சமுத்து, கொமுக-பாஜக கூட்டணி சார்பில் ஜி.கே.செல்வகுமார், பாமக சார்பில் கே.ராஜேந்திரன் ஆகியோர் மேயர் வேட்பாளர்களாகக் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 தேமுதிக மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. கோவை மாநகராட்சி மேயர் பதவியை, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு தேமுதிக விட்டுக் கொடுத்துள்ளது.

 கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அநேக இடங்களில் தோல்வி அடைந்தாலும், கோவை மாவட்டத்தில் 9 இடங்களில் வெற்றி பெற்றது.

 ஆனால், தேர்தலுக்கு அடுத்து 2 மாத இடைவெளியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 72 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுக வெறும் 10 இடங்களை மட்டும் பிடித்தது. மாநிலம் முழுவதும் ஒரு மேயர் பதவியில் கூட வெற்றி பெறவில்லை.

 
அமோக வெற்றி பெற்ற அதிமுக: ஆனால், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10-க்கு 10 இடங்களையும் பிடித்து அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் பெற்ற வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி களம் இறக்கப்பட்டுள்ளார். மேயர் மற்றும் வார்டு உறுப்பினர்களில் ஆளும்கட்சியாக உள்ள அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என அக்கட்சியினர் கணக்குப்போட்டு வேலை செய்யத் தொடங்கி விட்டனர்.

 அண்மையில் டாஸ்மாக் கடைகளை ஏலம் எடுத்த பலர், அதிமுகவில் வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 திமுகவை பொறுத்தவரையில் தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ் பாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் நிலப்பறிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் திமுகவினரிடையே சோர்வை உண்டாக்கி இருப்பதும், அதிமுகவுக்கு சாதகமாகவே இருக்கும் என பேசப்படுகிறது.

 
ஏற்கெனவே துணை மேயராக உள்ள நா.கார்த்திக், திமுகவில் மேயர் வேட்பாளராக களம் இறக்கிவிடப்பட்டுள்ளார். திமுகவினர் மீதான நிலப்பறிப்பு வழக்குகள், கோவையில் நிறைவேறாத பாதாள சாக்கடைத் திட்டம், பில்லூர் குடிநீர்த் திட்ட பணிகள் சுணக்கம் ஆகியவை அக்கட்சிக்கு பாதகமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.  மேலும் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறாததும் அக்கட்சிக்கு பலத்த பின்னடைவாக உள்ளது.  2006 உள்ளாட்சித் தேர்தலின்போது கோவை மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளில் திமுக-29, அதிமுக-10, காங்கிரஸ் -8, மார்க்சிஸ்ட்-7, மதிமுக -2, பாஜக-1, கம்யூனிஸ்ட் -4, தேமுதிக -3, சுயேட்சை-8 என உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இப்போது மறுசீரமைப்பில் 100 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளன.

 மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவையில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு உள்ளது. 

 
அக்கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன், கோவை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளதும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்க வாக்குகளும், புத்தெழுச்சி பெற்று வரும் தேமுதிகவின் வாக்குகளும் அக்கட்சிக்கு பலம் சேர்க்கிறது.  தேமுதிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் திமுகவுக்கு அடுத்து அதிமுகவுக்கு சவால் விடும் அணியாக தேமுதிக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது.  காங்கிரஸ் கட்சியில் 2 மேயர் வேட்பாளர்கள்: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.சின்னையன் மேயர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். ஆனால்,

 
கோஷ்டி பூசல் காரணமாக அதிருப்தி வேட்பாளராக அக்கட்சி சார்பில் பச்சமுத்து திடீரென மேயர் வேட்பாளருக்கு மனு செய்துள்ளார். கோஷ்டிபூசல் உள்ளது என்பதை மேயர் வேட்பாளர் வேட்புமனு தாக்கலிலும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.  மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் ஆர்.பிரபு அணி என பிரிந்து நிற்கும் காங்கிரஸ் கட்சியில், இப்போது இரண்டு பேர் மேயர் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.

 
மதிமுகவில் அர்ஜுன்ராஜும், கொமுக-பாஜக கூட்டணி சார்பில் பாஜகவின் மாநிலச் செயலாளர் ஜி.கே.செல்வகுமாரும் போட்டியிடுகின்றனர். கவுண்டர் சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக களத்தில் இறங்கியுள்ளது.  எல்லா உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்று வந்துள்ளது. இந்த முறை வெற்றி பெறப் போவது ஆளும் கட்சியான அதிமுகவா அல்லது திமுகவா அல்லது கழற்றிவிடப்பட்ட கூட்டணிக் கட்சிகளா என்பது உள்ளாட்சித் தேர்தல் முடிவில் தெரியவரும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...