|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 September, 2011

தேசம் எங்களை ஒதுக்கவில்லை திருநங்கைகள்!

அங்கீகாரம்' என்ற கனமான உரிமைக் குரலுக்கு மத்தியில் ஹிமாச்சல் மலைப்பிரதேசத்தில் நடந்த அந்த ஏழு நாள்கள் முகாம், இதமான மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது, திருச்சியைச் சேர்ந்த நான்கு திருநங்கைகளுக்கு.

காந்தி அமைதி அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதுதில்லியைச் சேர்ந்த "தேசிய இளைஞர் திட்டம்' தேசிய இளைஞர் ஒருமைப்பாட்டு முகாமை நடத்தி வருகிறது. 83 வயது நிரம்பிய பழுத்த காந்தியவாதியான எஸ்.என். சுப்பாராவ், இதன் இயக்குநர்.

இந்த முகாமில், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சிகள், வன்முறை, போதை, பாலியல் ஒடுக்குமுறை, ஊழல், குற்றமயமாகிவிட்ட அரசியல் போன்றவற்றுக்கு எதிரான எண்ணங்கள் எதிர்காலத் தலைமுறையிடம் உருவாக்கப்படுகிறது. 


இந்த முறை ஹிமாச்சலப் பிரதேசம், சிம்லாவுக்கு அருகேயுள்ள "சோழன்' என்ற மலைப்பகுதியில் ஜூன் இறுதியில் தொடங்கி 7 நாள்கள் முகாம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த முகாமில் நாடு முழுவதுமிருந்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 800 இளைஞர், இளைஞிகளுடன் திருச்சியிலிருந்து பங்கேற்றவர்கள்தான் இந்த நான்கு திருநங்கைகள். இதுபோன்ற பொது முகாம்களில் திருநங்கைககளும் பங்கேற்பது அநேகமாக இதுதான் முதல் முறை என்கின்றனர். உற்சாகத்தின் எல்லைக்கே சென்றிருக்கும் திருநங்கை பி. கஜோலிடம் பேசினோம்: திருச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் "சேஃப்' அமைப்பின் தலைவிதான் கஜோல். அவர் சொல்கிறார்:

"தமிழ்நாட்டிலிருந்து 26 பேர். அதில் திருச்சியிலிருந்து நான் (கஜோல்), தாமரை, ஆர்த்தி, உமா நால்வர் மட்டுமே திருநங்கைகள். ரயில் பயணத்துக்குப் பாதிக் கட்டணம்தான். முகாம் பதிவுக் கட்டணம் ஒருவருக்கு ரூ. 150.

இதுவரை எங்களது சமூகத்தின் முகாம்கள், கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றுவந்த எங்களுக்கு முதல் முறையாக சிறப்பான அனுபவம். வெவ்வேறு மொழி பேசுபவர்கள்; கலாசாரத்தினருடன் ஏழு நாள்கள் இருந்ததை இனி எக்காலமும் மறக்கவே முடியாது.

"சமூகம் வெறுத்து ஒதுக்கிய எங்களை தேசம் வெறுத்து ஒதுக்கவில்லை. எங்கள் ரத்தத்திலும் தேசப்பற்று இருக்கிறது. இளைஞர்கள், இளைஞிகள் பலர் எங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விட வேண்டும். தேசியப் பாடல் பாட வேண்டும். பிறகு "டீ'. எளிய யோகா, கராத்தே பயிற்சிகள். சிறிது நேரம் சிரிப்பு யோகா(!). பிறகு, தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி.


நம்முடைய மூவண்ணக் கொடியை அத்தனை பவ்யமாக, மரியாதையாக எடுத்துச் சென்று, முறைப்படி கயிற்றில் கட்டி ஏற்றும் முறையை அங்குதான் பார்த்தேன். கொடியேற்றுவதற்கு முன்பு, வரிசையாக நிற்பவர்கள் எல்லோரும் வரிசையாகத்தான் நிற்கிறார்களா? என்று முதலாவதாக இருப்பவர் சற்று முன்வந்து வரிசையைத் திரும்பிப் பார்த்து "ஓகே' சொல்ல வேண்டும்.

கொடிக்குரிய மரியாதை என்ன என்பதை இந்தளவுக்கு யாரும் எங்களுக்குச்  சொல்லித்தரவில்லை. காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை களப்பணி. தங்கியிருந்த விடுதி, கூட்ட அரங்கு, வளாகத்தை சுத்தப்படுத்துவது. அருகிலுள்ள மலைக்கிராமங்கள், ரயில்வே நிலையங்களைச் சுத்தப்படுத்துவது போன்ற பணிகள். எங்கு சென்றாலும் மேடு, பள்ளம் நிறைந்த சில தொலைவை நடந்தே கடக்க வேண்டும். குறிப்பாக தங்கியிருந்த விடுதியிலிருந்து ஒரு நாளில் பல முறை கீழே இறங்கி, ஏறி- அதாவது 66 படிகள் ஏறி, இறங்கிச் செல்ல வேண்டும். 9 மணிக்கு காலைச் சிற்றுண்டி.


பிறகு முற்பகல் 11 மணிக்கு உரை. பெரும்பாலான நாள்களில் சுப்பாராவ் பேசினார். காந்தியடிகளுடன் இருந்தவராம். அவரை "பாய்ஜி' என்றுதான் அழைத்தோம். 83 வயது நிரம்பிய அந்த "இளைஞர்' எங்களுடன் எல்லா பணிகளிலும் பங்கேற்றது எங்களை இன்னும் உற்சாகப்படுத்தியது.

பட்டியலிடப்பட்ட 25 வாக்கியங்களை ஒவ்வொரு மொழியிலும் பெயர்த்து பயிற்றுவிக்க வேண்டும். முகாமில் இதுவொரு பகுதி. இது முடிந்து மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது, "சாப்பிட்டாச்சா' என பஞ்சாபி பெண்களும், ஒரியப் பெண்களும் கொஞ்சும் தமிழில் கேட்டது ஆச்சர்யமாக இருந்தது.


திறமைகளைக் கற்றுக் கொடுக்கும் பகுதியில், நான் சிலருக்கு அழகுக்கலையை சொல்லித் தந்தேன். இப்படியொரு வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்தே திருச்சியில் நிறைய அழகு சாதனப் பொருள்களை வாங்கி வைத்திருந்தேன்.

நிறைவு நாளில் முகாம் பற்றிய கருத்தை பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். 800 பேரில் இருந்து 6 பேர். அந்த 6 பேரில் நானும் ஒருத்தி. மகிழ்ச்சித் திளைப்புக்கு, சொல்லவா வேண்டும்?

"இதுவரை எந்தத் திட்டமும் இல்லாமல் வாழ்ந்தோம். இப்போது தேசத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த முகாமுக்கு நாங்கள் நாற்பது பேர் வருவோம்' என்று சொல்லிவிட்டு இறங்கினேன்' என்றார் கஜோல். சாதி- மதம் கடந்த, மொழி கடந்த, வட்டாரம் கடந்த மனிதத்துவத்தை நோக்கிய பயணம் சாத்தியப்படுமா? அந்த 83 வயது இளைஞர் சுப்பாராவ் தமிழகம் வந்தால் முதல் கேள்வி இதுதான்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...