|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 October, 2011

10 ஆண்டுகளில், விளை நிலங்களின் பரப்பளவு, ஐந்து லட்சம் எக்டேர் குறைந்துள்ளது விவசாயத் துறை!


தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளில், விளை நிலங்களின் பரப்பளவு, ஐந்து லட்சம் எக்டேர் குறைந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை, விவசாயத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000ல், 53 லட்சம் எக்டேராக இருந்த விவசாய நிலங்களின் பரப்பளவு, தற்போது 48 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது.தொழில் துறை வளர்ச்சியும், நகரமயமாதலும் தான் இதற்கான முக்கிய காரணங்கள். சென்னை, புதுவை, கோவை மற்றும் மதுரை நகரங்களைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலேயே விளை நிலங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.

சென்னை, புதுவை, கோவை, மதுரை: கடந்த 10 ஆண்டுகளில், சென்னை அருகே உள்ள மாவட்டங்களில், காஞ்சிபுரம்- 29,234 எக்டேர், திருவள்ளூர்-14,032 எக்டேர், வேலூர்-36,097 எக்டேர் மற்றும் திருவண்ணாமலை-17,031 எக்டேர், விளை நிலங்களை இழந்துள்ளன.அதே போல், புதுவை அருகே உள்ள கடலூர்-18,816 எக்டேர், விழுப்புரம்-4,029 எக்டேர், விளை நிலங்களின் பரப்பளவு குறைந்துள்ளது.கோவை மற்றும் வடமேற்கு மாவட்டங்கள், அதிக தொழில் வளர்ச்சி கண்டு வருவதால், இங்கு தான் அதிகப்படியான விளைநிலங்கள் அழிக்கப் பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிகமாக, தர்மபுரி-2,51,850 எக்டேர், கோவை-1,37,200 எக்டேர், ஈரோடு-1,08,803 எக்டேர், சேலம்-56,524 எக்டேர், நாமக்கல்-40,653 எக்டேர், கிருஷ்ணகிரி-9,702 எக்டேர் வீதம், விளை நிலங்கள் குறைந்துள்ளன. மதுரை மாவட்டத்தில் 34,443 எக்டேர், திண்டுக்கல்-16,365 எக்டேர், விருதுநகர்-15,749 எக்டேர், சிவகங்கை-6,782 எக்டேர் குறைந்துள்ளது.

தனி சட்டம் தேவை?  விளை நிலங்களின் பரப்பளவு குறைந்தது குறித்து,விவசாயத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதைத் தடுக்க, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், விளை நிலங்களை காப்பாற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒரு ஏக்கர் விளை நிலத்தை தனியார் வாங்கி வீட்டு மனைகளாக பிரிக்க வேண்டுமானால், அந்த மாவட்டத்தில் விவசாயத் துறை இணை இயக்குனரிடம் "இந்த நிலம் விவசாயத்திற்கு லாயக்கற்றது' என, "என்.ஓ.சி' சான்றிதழ் வாங்க வேண்டும்.அந்த உத்தரவினால் விளை நிலங்கள், வீட்டு மனைகளாக்கப்பட்டது தவிர்க்கப்பட்டது. அதன் பின்பு, அந்த உத்தரவு படிப்படியாக கைவிடப்பட்டது. விளை நிலத்தின் பரப்பு குறைவதால், உணவு உற்பத்தி குறைந்து, விலையேற்றம் அதிகரிக்கும். விவசாய நிலம் அழிக்கப்பட்டு வருவதைத் தடுக்க, தனியாக சட்டம் கொண்டு வருவதுடன், அதை கண்காணிக்க தனி ஆணையமும் அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், விவசாய நிலங்கள் மேலும் குறையும் அபாயம் உள்ளது. இவை குறைந்தால், உணவு உற்பத்தி குறைந்து, உணவுப் போருட்களின் விலை மேலும் உயரும் சூழல் உருவாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...