|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 October, 2011

மாயூரத்தில் துலா நீராடுதல்!


ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். இதனாலேயே இது துலா மாதம் என்றழைப்படுகிறது. துலா என்றால் தராசு என்றும் பொருள் படும் ஐப்பசி மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும். இதனாலேயே இது துலா மாதம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி துலாமாதமான ஐப்பசி பிறக்கிறது. இந்த மாதத்தில் தான் கங்கை, யமுனை, நர்மதா, சிந்து போன்ற நதிகள் எல்லாம் நமது காவேரி நதிக்கு வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதாக ஐதீஹம். ஒரு முறை கங்கா நதி பிரம்மாவிடம், எல்லோரும் தன்னிடம் வந்து தமது பாபங்களைத் போக்கிக் கொள்வதுபோல தான் எங்கே போய் தனது பாபங்களைப் போக்குவது என்று கேட்க, பிரம்மாவும், கங்கை முதலான எல்லா நதிகளும் துலா மாதத்தில் காவிரிக்குச் சென்று தமது பாபங்களை களையலாம் என்று கூறினாராம். இந்த ஐப்பசி மாதத்தில் மஹா நதிகளுக்கெல்லாம் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பாப-விமோசனம் அருளுகிறாள் காவிரி. இந்த மாதத்தில் காவிரி நதியில் குறைந்த பக்ஷமாக மூன்று நாட்களாவது ஸ்நானம் செய்வது மிகுந்த நற்பலனைத் தரும் என்று கூறியுள்ளனர் ஆன்றோர். காவேரி மஹாத்மியத்திலும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்பென்றாலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச் சிறப்பு.


மாயூரத்தில் துலா நீராடுதல்: ஐப்பசி மாதத்தில் மாயூரம் என்றழைக்கப்படும் மயிலாடுதுறையில் காவிரி நதிக்கரையோரம் உள்ள நந்திக்கட்டத்தில் கங்கையானவள் நீராடுகிறாள். மேலும் பாரதத்தில் உள்ள அனைத்து நதிகளும் அங்கு நீராடி, தங்களிடம் மக்கள் தொலைத்துச் சென்ற பாவங்களைப் போக்கிக் கொள்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, ""ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமோ?'' என்றொரு பேச்சு வழக்கு உள்ளது. இத்திருத் தலத்தில் ஐப்பசி இறுதியில் நடைபெறும் "கடைமுக தீர்த்தவாரி' மிகவும் சிறப்புடையது.


கடைமுழுக்கு தீர்த்தவாரி: ஐப்பசி மாத அமாவாசை அன்று காவிரி நதியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். அன்று "காவிரியானவள் கங்கையாக மாறுகிறாள்' என்று காவிரி புராணம் உரைக்கின்றது. அன்று மறைந்த முன்னோர்களுக்கு காவிரி நதிக்கரையில் நீர்க்கடன், தர்ப்பணம், வழிபாடுகள் செய்ய உகந்த நாள் என்பர்.ஐப்பசி 30 நாட்களும் காவேரியில் நீராடுவது சிறப்பென்றாலும், அமாவாசை போன்ற நாட்களில் மிகச் சிறப்பு. தென் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் கூட, காவேரிக்கரை சார்ந்த க்ஷேத்திரங்களுக்குச் சென்று சில தினங்கள் தங்கி இந்த ஸ்நானத்தை சங்கல்பத்துடன் செய்வது வழக்கம். பிரயாணிக்க இயலாத பெரியோர்கள் தங்கள் தினமும் நீராடும் நீர்நிலைகளில் காவிரியை பிரார்த்தித்து எழுந்தருளச் செய்து நீராடுகின்றனர். ஐப்பசி கடைசி நாளில் ஸ்நானம் செய்வதை "கடைமுழுக்கு” என்கிறார்கள். மயிலாடுதுறையில் இருக்கும் சைவ-வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள மூர்த்திகளும் கடைமுகத்தன்று தீர்த்தவாரி செய்தருளுகிறார்கள்.


முடவன் முழுக்கு: ஒருசமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மாயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஒர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான். அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக நிதானமாக வந்து மாயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடம் வருந்தி பிரார்த்திக்கிறான்.அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிரங்கி, "இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என்று அசரீரியாக அருளுகிறார். அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" என்ற பெயர் பெற்றது.


ஸ்ரீ ரங்கநாதருக்கு திருமஞ்சனம்: ஒவ்வொரு ஆண்டும் துலாம் மாதத்தில் பூலோக வைகுண்டம், பெரிய கோவில் என்றழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் துலாம் மாதம் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படுகின்றது. இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வதற்காக கோயில் யானை ஆண்டாள் காவிரியில் இருந்து தங்கக்குடத்தில் புனித நீர் எடுத்து வருவது சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...