|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 October, 2011

நகைச்சுவை உணர்வு ஒரு வரம்!


வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலையளிக்கும் நபரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த வாழ்க்கையானது துன்பங்களால் நிறைந்தது.நாள்தோறும் ஏதேனும் ஒரு சோதனையோ அல்லது கவலையோ ஒவ்வொரு மனிதனுக்குமே ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி உணர்வை அடைய ஒவ்வொருவருமே விரும்புகின்றனர். மகிழ்ச்சியை உடனடியாகவும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக தரக்கூடிய ஒரு அம்சம் என்னவென்றால், நகைச்சுவை உணர்வு. இந்த நகைச்சுவை உணர்வுள்ள மனிதர் அனைவராலும் விரும்பப்படும் ஒருவர். இவர் தனக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் எப்போதுமே சந்தோஷத்தை தருபவராக இருக்கிறார்.எப்போதும் தன்னை துரதிருஷ்டவாதியாகவே நினைத்துக்கொண்டு, தான் உள்ளிட்ட எல்லோரையும் குறைகூறிக் கொண்டிருக்கும் மனிதர்களை யாரும் விரும்புவதில்லை.

உருளுவது தலையா, தலைப்பாகையா?
19ம் நூற்றாண்டில், ஈரான் நாட்டில் பஹாய் சமயத்தைச் சார்ந்த ஒருவருக்கு பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் அந்நாட்டின் ஷியா அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. சிரச்சேதத்தின் மூலம் அந்த மரண தண்டனையை நிறைவேற்றத் திட்டம். களத்திற்கு கொண்டுசென்று அவரது குனிந்த தலையை கொலையாளி வெட்டுகையில் குறி தவறி அவரின் தலைப்பாகையின் மீது கத்திப் பட்டு அந்த தலைப்பாகை உருண்டு ஓடியது. அந்த சூழ்நிலையிலும் அந்த பஹாய் சிரித்துக்கொண்டே கூறியதாவது, "உருண்டு ஓடுவது எனது தலையா அல்லது தலைப்பாகையா?" என்பதுதான். தனது உயிர்போகும் தருவாயில்கூட, தனது நகைச்சுவை உணர்வின் மூலம் அந்த இடத்தில் கலகலப்பைக் கொண்டு வந்தார். இதுபோன்ற ஒரு மனிதர் அநியாயமாக இறக்கிறாரே என்று அங்கிருந்த காவலர்களில் யாரேனும் ஒருவர் நிச்சயம் வருந்தியிருக்கக்கூடும். நகைச்சுவை உணர்வானது ஒரு மனிதனை எந்த சூழலிலும் சந்தோஷமாக வைக்கும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் புலனாகிறது.முகலாய பேரரசர் அக்பர் கூட நகைச்சுவை உணர்வுகொண்ட பீர்பாலை தனது அமைச்சர்களில் ஒருவராக ஆக்கிக் கொண்டார். மிகப்பெரிய பேரரசை பலவித நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆண்ட அக்பருக்கு, பீர்பால் போன்றவர்களின் நகைச்சுவை உணர்வு சந்தோஷத்தையும், நிம்மதியையும் அளித்தது.

வித்தியாசம் அறியுங்கள்
நகைச்சுவை உணர்வு என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் இருப்பது முக்கியம். பிறரை கேலியும், கிண்டலும் செய்வது(பல திரைப்படங்களில் வருவதுபோல்) நகைச்சுவையல்ல. அதெல்லாம் திரைப்படங்களுக்குத்தான் ஒத்துவரும். நிஜ வாழ்வில் நகைச்சுவை என்பது நமது எதிரியைக்கூட நண்பராக மாற்றுவதாய் இருக்க வேண்டும். பிறரை ஏளனம் செய்வதற்கும், நகைச்சுவை உணர்வுக்கும் சமயத்தில் வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக இருப்பதுபோல் தோன்றும். ஆனாலும் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். இதை மட்டும் நீங்கள் அறிந்துவிட்டால், மிகவும் வெற்றிகரமான மனிதராக நீங்கள் இருப்பீர்கள்.நகைச்சுவை உணர்வில் இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில், நமது குறைகளின் மீது நாமே சிரித்துக் கொள்வதாகும். நமது குறைகளை உணர்ந்து நாமே சிரித்துக் கொள்வதன் மூலம் அது நாளடைவில் திருத்தப்படும். இதன்மூலம் மற்றவர்கள் அதைப்பார்த்து சிரிப்பதை தவிர்க்கலாம்.

ஒருவேளையில் ஈடுபட்டிருக்கும்போது சீரியசாக இருக்க வேண்டும் என்று பலரும் பொதுவாக அறிவுரை சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அப்படியென்றால், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, பிறரிடம்கூட எதையும் பேசாமல் இருந்து, நமது வேலையைப் பற்றி மட்டுமே பேசுவது என்று அர்த்தமல்ல. அப்படியெனில், அதுபோன்ற ஆலோசனைகளை உதறித் தள்ளவும். உலகின் பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுள்ளவர்கள்.

சில முக்கிய நன்மைகள்
* நல்ல நகைச்சுவை உணர்வானது, தகவல்தொடர்பில் உள்ள தடைகளைத் தகர்த்து, நீங்கள் ஒரு அணுகக்கூடிய நபர்தான் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கிறது.* தப்பெண்ணங்களைத் தடுத்து, நட்புரீதியான சூழலை உருவாக்குகிறது.
* அகந்தையைக் கலைந்து நம்பிக்கையை அதிகரிக்கிறது.
* மற்றவர்களின் உணர்வுகள் புண்படாமல், சிலவகை செய்திகளைத் தெரிவிக்க, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு உதவுகிறது.
* பகைமை மற்றும் தப்பெண்ணம் போன்றவைகளின் கடும் எதிரியாக நகைச்சுவை உணர்வு விளங்குகிறது.
* பிறரின் மீது நேர்மறை எண்ணத்தையும் வழங்குகிறது.
நகைச்சுவை உணர்வு வாழ்வில் இந்தளவிற்கு நன்மைகளை வழங்குகையில், அதை நாம் ஏன் முயற்சிக்கக்கூடாது? உண்மையில் அது எளிதான விஷயமில்லைதான். சரியான நேரத்தில் சரியான இடத்தில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது உண்மையிலேயே ஒரு மாபெரும் கலை. இது சிலருக்கு இயல்பிலேயே இருக்கும். பலர் இந்தக் கலையை முயற்சி செய்துதான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்வதற்கான சில எளிய வழிமுறைகள்
* ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் அல்லது விழாவில் கலந்துகொள்ளும்போது, நகைச்சுவையான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் உங்களின் மனநிலையை தயார்படுத்திக் கொள்ளவும். முடிந்தளவு நன்றாக உடையணிந்து கொள்ளவும்.
* நகைச்சுவையான உரையாடல்கள் தகவல்தொடர்பு தடைகளை உடைக்கும் என்றிருக்கையில், கடுஞ்சொற்களை உபயோகப்படுத்தாமல் இருக்க முயலவும்.
* உரையாடலின்போது, ஒரு வரி நகைச்சுவைகள் சிலவற்றை தயார்செய்து வைத்துக்கொள்ளவும்.
* உங்களின் நகைச்சுவைக்கு நீங்களே சிரித்துக்கொள்ள வேண்டாம். மற்றவர்கள் சிரிக்கட்டும்.
* ஒரு இடத்தில் நகைச்சுவை உணர்வை உருவாக்க, தேவைப்பட்டால் பழைய ஜோக்குகள், நகைச்சுவை உதாரணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.
* மேலும், நீங்கள் இப்போது ஜோக் சொல்லப் போகிறீர்கள் என்று யாரும் முன்னறிவிப்பு செய்ய வேண்டாம்.
* பன்ச் லைன் கொடுக்கத் தவற வேண்டாம். ஏனெனில் மக்கள் அனைத்திற்குமே சிரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
* ஒரு இடத்தில் ஒரு அவசரமான விவாதம் நடக்கையிலோ, ஒரு கூட்டத்தை  நடத்துபவர், உறுப்பினர்களின் தீவிர கவனத்தைக் கவர விரும்பினாலோ, அந்த இடத்தில் நகைச்சுவையாகப் பேச வேண்டாம்.

குறிப்பு: உங்களின் நகைச்சுவை உணர்வானது, மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்குத்தான் என்றில்லை. எப்போதும் தன்னம்பிக்கையாக இருப்பதற்கும், சுய கவலையிலிருந்து விடுபடவும், கஷ்டங்களை மறக்கவும், கவலையைப் போக்கவும் உங்களுக்கே உங்களின் நகைச்சுவை உணர்வு துணைபுரியும். நீங்கள் மேடையேறி பேசும் நகைச்சுவையாளராக இருக்க வேண்டியதில்லை. உங்களையும், உம்மைச் சுற்றியுள்ள சில நபர்களையும் சந்தோஷப்படுத்தினாலே போதும். வாழ்க்கை என்றும் இனிக்கும். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...