|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 October, 2011

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்த முடியும்!

புற்றுநோய் பற்றி ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும் என சென்னை அடையாறு புற்றுநோய் மையத் தலைவர் டாக்டர் சாந்தா தெரிவித்தார். சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் 50 ஆண்டு கால தலைவரும், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.ராமன் பேத்தியும், நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர் மருமகளும், பத்மஸ்ரீ, பத்மபூசன் விருது பெற்றவருமான டாக்டர் சாந்தா காயல்பட்டணம் வருகை தந்தார். காயல்பட்டணம் கே.எம்.டி.ஆஸ்பத்திரியில் வைத்து பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு காயல்பட்டணம் கே.எம்.டி.ஆஸ்பத்திரி செயலாளர் முஹம்மது அபூபக்கர் தலைமை வகித்தார். தொழிலதிபர் செய்யத் அஹ்மது, அடையாறு புற்றுநோய் மையத்தின் ரேடியேஷன் துறை தலைவர் டாக்டர் செல்வலெட்சுமி, எபிடமோலஜி பிரிவு துறை தலைவர் டாக்டர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் தர்வேஷ் முஹம்மது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சாலி ஹ் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட டாக்டர் சாந் தா தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் ஒருவர் வயதான காலகட்டத்தில் கேன்சர் வந்து இறந்துவிட்டால் கருமவியாதி என கூறினர். இதனை குணப்படுத்த முடியாது என்றனர். ஆனால் இன்று விஞ்ஞான வளர்ச்சியினால் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. கேன்சர் வந்துவிட்டால் இனி அவ்வளவுதான் என்று நினைத்து விட்டு வெளியில் கூறவதற்கே பயப்படுகின்றனர். இதனை மறைக்கின்றனர். ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது. கேன்சர் ஒரு நோய் அல்ல. ஒவ்வொரு கேன்சரும் ஒவ்வொரு மாதிரி உள்ளது. நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு காரணங்களினால் உண்டாகிறது. இதனை ஆரம்ப காலத்திலேயே கண்டு சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது. புகையிலையினால் ஏற்படும் கேன்சர் ஆண்களுக்கு 40 சதவீதம் ஏற்படுகிறது. கேன்சராக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்து கொள்வதற்கு 7 அடையாளங்கள் உள்ளன. உடலில் தசை தடிப்பு பகுதியில் கட்டிகள் அதிகம் ஆகிக் கொண்டே இருந்தாலோ, உடலில் வாய், மூக்கு, கண் போன்று 7 துவார பகுதி உள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் இருந்து ரத்தமோ, துர்நாற்ற கசிவோ இருந்தாலோ தொடர்ந்து அஜீரண கோளாறு இருந்தாலோ, உரிய மருத்துவ சிகிச்சை பெற்றும், தொடர்ந்து இருமல், தொண்டை கரகரப்பு இருந்தாலோ, மச்சம், மறு போன்றவை பெரிதாகி கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக உரிய டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மொபைல்போன் அதிகமாக பேசக்கூடாது. முற்றிலும் குணப்படுத்தப்பட்ட மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கு 85 சதவீதம் வாய்ப்பு இல்லை. மீண்டும் வந்தால் அது முதலாவது வந்ததனால்தான் என்றில்லை. புதிதாக இருக்கலாம் இவ்வாறு டாக்டர் சாந்தா தெரிவித்தார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...