|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 November, 2011

வன வளம் காக்கும் வளைக்கரங்கள்!


நாம் வாழும் சுற்றுச்சூழலை நேசிக்க வேண்டும், என யோசிக்க மறந்தவர்களால், அழிக்கப்பட்ட வளங்களை எத்தனை நூற்றாண்டுகளானாலும் மீட்டெடுக்க முடியாது. இதை ஆக்கப்பூர்வமாக உணர்ந்து, இந்த நாட்டின் காட்டு வளத்தை காக்க வனத்திற்குள் புறப்பட்ட ஒரு பெண் படையின் கூட்டு முயற்சி பெரும் வியப்பை அளிக்கிறது. கேரளாவின் பசுமைக் கிரீடம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள். பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வனப்பகுதியில் தான், பெரியாறு புலிகள் காப்பகம் அடங்கியுள்ளது. 881 சதுர கி.மீ., பரப்பில் பல்வகை மரங்கள், தாவரங்கள், உயிரினங்கள் என இயற்கையின் அரணாகவும், அருட்கொடையாகவும் இப்பகுதிகள் சாட்சியமளிக்கின்றன.கேரள வனத்துறை, பொதுமக்களின் பங்களிப்புடன், "பெரியாறு பவுண்டேஷன்' மூலம் இந்த வனப்பகுதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுவின் பல நடவடிக்கைகளால், வனப்பகுதிகள் சமூக விரோதிகளிடம் இருந்து காக்கப்படுகின்றன.வனங்கள் அழிப்பில் ஈடுபட்டோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களாலே அந்த வனத்தை பாதுகாக்கும் முயற்சியில் 
பெரும் வெற்றி பெற்றுள்ளது. விறகிற்காக சிறு மரங்கள், கன்றுகளை வெட்டி, வனஅழிப்பில் ஈடுபட்டிருந்த தேக்கடியை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள 101 பெண் உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, "வசந்த சேனா!'மீசை வைத்த தைரியசாலிகளே நடுங்கும் அடர்ந்த காட்டிற்குள், பச்சை கலர் சட்டை, மழை கோட், கையில் ஒரு தடி என இந்த பெண்கள் படை, 12 சதுர கி.மீ., பரப்பில் உள்ள சந்தன மரங்களின் பாதுகாவலர்களாக வலம் வருகின்றனர். இவர்களை மீறி இங்கிருந்து ஒரு இலையை கூட யாரும் கிள்ளி எடுத்துச் செல்ல முடியாது.

கூட்டமைப்பின் தலைவி கிரேசி குட்டி, 40, கூறியதாவது:நாங்கள் திருந்தியது மட்டுமல்ல. மற்றவர்களிடமும் இது போல் விறகிற்காக மரக்கன்றுகளை வெட்டக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பகலில் 5 பேர் கொண்ட குழுக்களாக வனத்திற்கு சென்று சந்தனமரங்களை கண்காணிப்போம். சந்தேகத்திற்குரிய நபர்கள் இப்பகுதியை நோட்டமிட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து, அவர்களை பிடித்து விடுவோம்.நாங்கள் மரக்கன்றுகளை வெட்டிய காலங்களில் இப்பகுதி வறட்சியாக இருந்தது. இப்போது பயங்கர காடுகளாக இருப்பதை பார்க்கும் போது சந்தோஷம்.


விஜியம்மா, 48, கூறியதாவது: புலிகள் தவிர அனைத்து வகையான விலங்குகளை நாங்கள் பார்த்துள்ளோம். வனப்பகுதியில் விலங்குகள் இறந்து கிடந்தாலும், வனத்துறைக்கு தகவல்களை தெரிவிப்போம். நாங்கள் வனத்திற்குள் வந்த பின், பகல் நேரத்தில், இது வரையிலும், மரங்கள் வெட்டியதாக ஒரு சம்பவம் கூட நடந்தது இல்லை. மரம் வெட்டும் சமூகவிரோதிகளுக்கு எங்களை பார்த்து தான் பயம்,'' என்றார்.

சீனியம்மா, 45, கூறியதாவது:ஆரம்பத்தில் உங்களுக்கு வேறு வேலை இல்லையா என கேலி செய்தவர்கள் உண்டு. ஆனால், இப்போது எங்கள் பணி, வரவேற்பை பெற்றுள்ளது. குழுத்தலைவி கிரேசி குட்டி இப்போது, குமுளி 13வது வார்டு உறுப்பினராகி விட்டார். வனத்திற்குள் செல்ல வீட்டில் தடைகள் இல்லை. நாங்கள் மரங்களை பாதுகாப்பதால், எங்கள் குழந்தைகளுக்கும் மரங்கள், வனஉயிர்கள் மீது பாசம் ஏற்படுகிறது,'' என்றார்.

மொபசிரா, 38, கூறியதாவது:வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்தாலும், இவற்றை அப்புறப்படுத்துகிறோம். கேரள வனத்துறை, எங்களை பிற பகுதி காடுகளுக்கும் அழைத்து சென்றது. களக்காடு- முண்டந்துறை, தட்டைக்காடு, இரவிகுளம், சின்னாறு வனப்பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். இந்த இடங்களை விட பெரியாறு வனப்பகுதி நன்றாக பாதுகாக்கப்படுகிறது என்பது எங்கள் கருத்து.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...