|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 December, 2011

இனிமேல் விருப்பப்பாடத்தில் சமாளிக்க முடியாது...


விருப்பப் பாடத்தை கேடயமாக வைத்து, சிவில்சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் தேறிவிட முடியாது. கடினமான திறனறி தேர்வுமுறையை முதல்நிலைத் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்தாண்டு முதல்(2011), சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி, ஏற்கனவே மாணவர் சமூகம் அறிந்த ஒன்றுதான். கடந்த 2010ம் ஆண்டுவரை, ஒருவர், பொதுப்பாடத்திலும், விருப்பப் பாடத்திலும் தேர்ச்சிப்பெற வேண்டும். புதிய விதிமுறையின்படி, முதல்நிலைத் தேர்வானது(Preliminary exam), 2 தாள்களைக் கொண்டதாக இருக்கிறது மற்றும் ஒவ்வொரு தாளுக்கும் 2 மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு தாள்களிலும் அதிகபட்ச மதிப்பெண்கள் 200.
புதிய முறையின்படி, பொதுப்பாடத்தின் முதல் தாளானது, பழைய பாடத்திட்டத்தின், பொதுப்பாடப் பிரிவைப் போன்றே இருக்கும். அதேசமயம், General mental ability என்ற பிரிவு மட்டும் நீக்கப்பட்டு, இரண்டாம் தாளில் சேர்க்கப்பட்டுள்ளது. உண்மையான மாறுதல் என்பது இரண்டாம் தாளில் உள்ளது. இந்த தாளானது, ஒருவரின் விளக்கமளிக்கும் திறனை சோதித்தல், புரிந்துகொள்ளும் திறன், தர்க்கரீதியிலான பகுப்பாய்வு, பொது மன ஆற்றல், அடிப்படை கணித அறிவு, முடிவெடுக்கும் திறன் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறன் போன்றவைகளை சோதிக்கும்.
முதல் தாளானது பொதுப்பாடத்திற்கானது என்று அறியப்படும் அதேவேளையில், இரண்டாம் தாளானது, சிவில் சர்வீஸ் திறனறி தேர்வு(Civil service aptitude test - CSAT) என்று அறியப்படுகிறது. அதேசமயம், தேர்வானது ஆப்ஜெக்டிவ் கேள்விகள் அடிப்படையிலேயே நடைபெறும். பழைய பாடத்திட்டத்தின்படி, பொதுப்பாடத்திட்டம் மற்றும் விருப்பப் பாடத்தை எழுதும் மாணவர்கள், விருப்பப்பாடம் என்பதை, தாங்கள் கல்லூரியில் படித்ததையே தேர்ந்தெடுக்கின்றனர். இதன்மூலம், சிலர், மொத்தம் கேட்கப்படும் 120 கேள்விகளில், 100 கேள்விகளுக்கும் மேலாக சரியான பதிலை அளிக்கின்றனர்.
பொதுப்பாடத் தாள் என்பது, குறிப்பிட்ட பாடம் தவிர்த்து, அனைத்து வகையான மாணவர்களின் பொதுத்திறனை சோதிப்பதாகும். ஆனால், விருப்பப் பாடத்தில் சோபிக்கும் பலர், இந்த பொதுப்பாடத்தில் மிகவும் குறைவான மதிப்பெண்களையே பெறுகின்றனர். பழைய பாடத்திட்டத்தின்படி, பொதுப்பாடத்திற்கான மொத்த மதிப்பெண்கள் 150 என்றும், விருப்பப் பாடத்திற்கான மொத்த மதிப்பெண்கள் 300 என்றும் வகுக்கப்பட்டிருந்தன. எனவே, விருப்பப் பாடத்தில் ஒருவர் ஒரு கேள்விக்கு சரியான விடையளிக்கும்பட்சத்தில், அவர் 2.5 மதிப்பெண்களைப் பெறுவார். அதேசமயத்தில், பொதுப்பாடத்தில் 1 கேள்விக்கு(மொத்தம் 150 கேள்விகள்) 1 மதிப்பெண் மட்டுமே வழங்கப்படும். இதனால் ஒருவர் பொதுப்பாடத்தில் சோபிக்காமலேயே, தனது விருப்பப்பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் மூலம் தேர்வில் வெற்றிபெற்று விடலாம் என்ற நிலை இருந்தது.
எனவே, இந்த ஒரு சார்பான நிலையைப் போக்கி, அனைவருமே, பொதுப்படையான மற்றும் தேவையான திறமைகளை நிரூபிக்கும் பொருட்டு, விருப்பப் பாடம் முதல்நிலைப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சமூக அறிவியல் படித்தோருக்கு இதுஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன்மூலம் ஒருவர் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டுமெனில், மிகவும் விரிவான நிலையில் படித்தாக வேண்டும். தான் கல்லூரியில் படித்ததை வைத்து, சமாளித்துவிட முடியாது. இந்த தேர்வு மாற்றத்தின் நோக்கம், ஒரு சிவில் சர்வீஸ் பணிக்கு வருபவர், ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணராக இருப்பதைவிட, பரவலான நிலையில் திறமையானவராக இருக்க வேண்டும் என்பதே.
எனவே, முதல்நிலைத் தேர்வுக்கு படிப்பவர் ஒரு சிறப்பு நிபுணர் என்ற நிலையில் படிக்க வேண்டும். ஏனெனில், இந்தப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள், சாதாரண நிலையில் பதிலளிப்பதாக இருக்காது. எனவே, இந்த முதல்நிலையில் தேர்ச்சிபெற, ஒருவர் மிகவும் சிறப்பான மூலத்தரவுகளைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியிருக்கும்.அடுத்த ஆண்டிற்கான சிவில்சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான விபரங்கள்
* 2012ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு 04.02.2012 அன்று வெளியிடப்படும்.
பூர்த்திசெய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதி 05.03.2012(திங்கட்கிழமை).
* தேர்வு நடைபெறும் நாள் 20.05.2012(ஞாயிற்றுக்கிழமை).
* இந்தத் தேர்வின் காலஅளவு ஒருநாள் மட்டுமே.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...