|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 December, 2011

கணவனை மீட்ட புதிய சாவித்திரி ...

மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ. தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 90 பேர் உடல் கருதி பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த நர்சுகள், போலீஸ்காரர், தீயணைப்பு வீரர் ஆகியோரும் நெருப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். இந்தநிலையில் இந்த விபத்தில் 30 வயது இளம் பெண் ஒருவர் துணிச்சலாக போராடி தனது கணவரை நெருப்பில் இருந்து காப்பாற்றி உள்ளார். அவரது பெயர் முன்னா. இவரது கணவர் ஸ்ரீபதா ஆச்சார்யா (வயது 35). இவர்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி ஸ்ரீபதாவுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. இதற்கான மேல்சிகிச்சைக்காகவே ஸ்ரீபதா இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

கணவருக்கு உதவியாக முன்னாவும் மருத்துவமனையில் தங்கியிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஸ்ரீபதா, 4 நாட்களுக்கு முன்பு மூன்றாவது மாடியில் உள்ள சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இரவு நேரத்தில் முன்னா கீழ்தளத்தில் உள்ள பார்வையாளர் பகுதிக்கு சென்று உறங்குவது வழக்கம். இவ்வாறு நேற்று முன்தினம் 08.12.2011 அன்று முன்னா கீழ்தளத்தில் உள்ள பார்வையாளர்கள் பகுதிக்கு சென்று உறங்கினார். இந்நிலையில் 09.12.2011 அன்று அதிகாலை மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.புகைமூட்டம் மற்றும் அலறல் சத்தத்தை கேட்டு விழித்து எழுந்த முன்னாவுக்கு உடனடியாக கணவரின் கதி என்ன? என்ற அச்சம் எழுந்தது. ஒவ்வொருவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடிக்கொண்டிருந்தனர். இதனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இந்த சமயத்தில் தான் முன்னாவுக்கு துணிச்சல் வந்தது. எப்படியாவது கணவரை காப்பாற்றிவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் மாடிப்படிகள் வழியாக 3வது மாடியை நோக்கி ஓடினார். அப்போது நர்சுகள் சிலர் அவரை தடுத்தனர். காரணம் 3வது மாடி முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. 

இருந்தாலும் முன்னா பயப்படவில்லை. 3 மாடிக்கு சென்று கணவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு சென்று புகை மூட்டத்தின் நடுவே கணவரை தேடினார். ஒருவழியாக அவரை கண்டுபிடித்தார். அவரை அப்படியே அலாக்காக தூக்கி கொண்டு வெளியே வந்தார். நெருப்பு ஜூவாலைகளை கடந்து மாடிப் படிகளில் இறங்கினார். ஒருவழியாக இருவரும் வெளியே வந்ததும் முன்னா, அவரது கணவர் ஸ்ரீபதா ஆகிய இருவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் இருந்தன. முன்னாவின் துணிச்சலை அனைவரும் பாராட்டினர். அவர் துணிச்சலாக செயல்பட்டிருக்காவிட்டால் அவரது கணவர் தீயில் கருகி உயிரிழந்திருப்பார்.  தற்போது இவர்கள் இருவரும் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...