|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 January, 2012

செல்வி மீது ரூ 69 லட்சம் மோசடி!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக தன்னிடம் ரூ.69 லட்சம் பணம் மோசடி செய்ததாக கருணாநிதி மகள் செல்வி மீது போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி வக்கீல் நல்லதம்பி இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். மதுரை வண்டியூர் மெயின்ரோடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் நல்லதம்பி. வக்கீலான இவர், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆவார்.

இவர் நேற்று காலை 11 மணியளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் அளித்த புகார் மனுவில், "2006-ல் விருதுநகர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தி.மு.க.வில் இணைந்தேன். சென்னை வேளச்சேரி தி.மு.க. பகுதிச்செயலாளர் ரவி, எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர், என்னிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 5 உறுப்பினர்களின் பதவி காலியாக உள்ளது என்றும், அதில் ஒரு உறுப்பினர் பதவியை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

செல்வியைச் சந்தித்தேன் 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு நான் சென்றேன். அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி இருந்தார். அவரிடம், என்னை வேளச்சேரி ரவி அறிமுகம் செய்துவைத்தார். செல்வியின் மருமகன் டாக்டர் ஜோதிமணியின் அக்காள் உமாமகேஸ்வரியும் அப்போது அங்கு இருந்தார்.

எனது கல்வித்தகுதி பற்றி கேட்டறிந்தனர். முன்பணமாக ரூ.25 லட்சம் வேண்டும் என்றார்கள். நான் அடுத்த 2 நாட்களில் எனது மனைவியின் நகைகளை அடகு வைத்து ரூ.10 லட்சம் பணத்தை அதே ஓட்டலில் உமாமகேஸ்வரியிடம் கொடுத்தேன். 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 23, 24 தேதிகளில் செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக ரூ.50 லட்சமும், மாநாட்டுக்கு பின்பு ரூ.19 லட்சமும், ஆக மொத்தம் ரூ.69 லட்சம் உமாமகேஸ்வரியிடம் வேளச்சேரி ரவி முன்னிலையில் அதே நட்சத்திர ஓட்டலில் கொடுத்தேன்.

பதவி கிடைக்கவில்லை ஆனால், அவர்கள் பேசியபடி தேர்வாணைய உறுப்பினர் பதவி எனக்கு கிடைக்கவில்லை. வேறு 5 பேரை உறுப்பினர்களாக நியமித்தார்கள். உடனே நான் பணத்தை திருப்பி கேட்டேன். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக சொன்னார்கள். அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால், கட்சியின் பெரிய பதவி பெற்றுத்தருவதாக கூறினார்கள். நான் கட்சியை விட்டு ஒதுங்கிவிட்டேன். எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்று தெரிவித்தேன். வேளச்சேரி ரவி பணத்தை திருப்பித்தருவதாக சொல்லி ஏமாற்றினார்.

கடந்த 12-ந் தேதி வேளச்சேரி ரவியை சந்தித்து எனது பணத்தை கொடுக்காவிட்டால், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுப்பேன் என்று தெரிவித்தேன். அதற்கு அவர், 'உன்னை யார் என்றே தெரியாது என சொல்லிவிடுவேன்' என்று பதில் அளித்தார். பின்னர் என்னை மிரட்டினார். அப்போது எனது நண்பர் அழகேசன் மற்றும் முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

என்னை ஏமாற்றி மோசடி செய்து தற்போது மிரட்டி வரும் வேளச்சேரி ரவி, உமாமகேஸ்வரி மற்றும் செல்வி ஆகியோர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்", என்று கூறியுள்ளார். இந்தப் பணத்தை அவர் ரொக்கமாகவே பல தவணைகளில் கொடுத்தேன்.ஆனால் இதற்கு எழுத்துப்பூர்வமான ஆதாரம் எதுவும் என்னிடம் இல்லை, என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.

உமா மகேஸ்வரி மறுப்பு இந்த நிலையில், வக்கீல் நல்லதம்பி கொடுத்துள்ள புகார் மனுவில் இடம்பெற்றுள்ள உமாமகேஸ்வரி நேற்று மாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கூறுகையில், "நான் கோபாலபுரத்தில் வசிக்கிறேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். எனது கணவர் சென்னை துறைமுகத்தில் வேலைபார்க்கிறார். என்மீது புகார் கொடுத்துள்ள நல்லதம்பி என்பவரை ஒரேயொரு முறை மட்டும் நட்சத்திர ஓட்டலில் வைத்து பார்த்துள்ளேன். வேளச்சேரி ரவிதான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இவர்தான் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி என்று அறிமுகப்படுத்தினார். அவ்வளவுதான் எனக்கு தெரியும். அதன்பிறகு நல்லதம்பியை நான் பார்த்ததே இல்லை.

அவர் என்மீது கொடுத்துள்ள புகார் அனைத்தும் அப்பட்டமான பொய் ஆகும். வேளச்சேரி ரவிக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்த பிரச்சினையில் வேண்டுமென்றே என்னை சிக்க வைத்து, எனது பெயருக்கு களங்கம் உண்டாக்கியுள்ளனர். கடந்த வாரம் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நல்லதம்பியின் பிரச்சினை குறித்து என்னிடம் தெரிவித்தார். நான் அப்போதே இந்த பிரச்சினையில் எனக்கு தொடர்பில்லை என்றும், மிரட்டி பணம் பறிப்பதற்காக என்னையும் இந்த பிரச்சினையில் சிக்கவைக்கிறார்கள் என்றும் கூறிவிட்டேன்.

செல்வியை சந்திக்கவில்லை மேலும் நட்சத்திர ஓட்டலில் செல்வியை சந்தித்ததாகவும் நல்லதம்பி கூறியுள்ளார். அதுவும் தவறான தகவல் ஆகும். நல்லதம்பி எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது செல்வி அங்கு இல்லை. என்மீது கொடுத்துள்ள புகாரை சட்டப்பூர்வமாக சந்திப்பேன்," என்றார்.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள் குறித்த விசாரணை, அதிரடி ரெய்டுகள் என பரபரப்பாக உள்ள சூழலில் இந்தப் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...