|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 January, 2012

டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்க வேண்டும்!

டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இதேபோல் ராகுல் திராவிட், லட்சுமண் ஆகியோரும் ஓய்வுபெறுவதை பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், முன்னாள் வீரர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது, தோனி உள்ளிட்டோருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் மதன்லால், டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "தோனி மகிழ்ச்சியோடு விளையாடவில்லை. அதனால் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன். அவருக்குப் பதிலாக புதிய சிந்தனையுள்ள ஒருவரை கேப்டனாக கொண்டுவர வேண்டிய நேரம் இது' என்றார்.  

முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈடன் கார்டனில் லட்சுமணும், திராவிடும் சிறப்பாக விளையாடியதைப் போன்று இப்போதும் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் அப்போது இளமையாக இருந்தார்கள். இப்போது 40 வயதை நெருங்கிவிட்டனர். மூத்த வீரர்கள் சரியான நேரத்தில் அவர்களாகவே ஓய்வுபெற்றுவிட வேண்டும் என்று நான் எப்பொழுதுமே கூறி வருகிறேன். வெளிநாட்டில் நடைபெறவுள்ள அடுத்த டெஸ்ட் தொடரில் அவர்களுக்குப் பதிலாக மாற்றுவீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். திராவிட், லட்சுமண் இருவரும் இந்திய ஆடுகளங்களில் தொடர்ந்து ரன் குவிப்பார்கள். அடுத்த டெஸ்ட் தொடர் 2013-ல் தான் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு திராவிட், லட்சுமண் இருவரும் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும். பெர்த் டெஸ்டில் இந்தியாவின் தோல்வியைத் தவிர்க்க முடியாது. அடிலெய்டில் நடைபெறவுள்ள 4-வது டெஸ்டிலும் இந்தியா தோல்வியடையலாம். இந்த டெஸ்ட் தொடருக்குப் பின் இந்திய அணியில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும். அவ்வாறு செய்தால்தான் இந்திய கிரிக்கெட் நன்றாக இருக்கும். அடுத்த 3 இன்னிங்ஸ்களில் தோனி சிறப்பாக ஆடி தன்னை ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் ஆடும் லெவனில் அவர் விளையாடுவது சந்தேகமாகிவிடும் என்றார்.

முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய அணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை போதிய அளவு மேற்கொள்ளவில்லை. பிசிசிஐ கிரிக்கெட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதிலும், பணம் சம்பாதிப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் என்ன பயன்? இந்திய அணி, வெளிநாடுகளில் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறதே. அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது போன்ற நிலையே காணப்படுகிறது. தோனி தொடர்ந்து இதுபோன்று மோசமாகவும், டெஸ்ட் போட்டியில் வேண்டா வெறுப்பாகவும் விளையாடினால், அவர் தனது கேப்டன் பதவியை இழக்கக்கூடிய நாள் வெகுவிரைவில் இருக்கும் என்றார். அணியில் உள்ள சில வீரர்கள், சேவாக் கேப்டனாக வரவேண்டும் என்று கூறியதாக சில நாள்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தோனிக்கு இப்போது மூத்த வீரர்கள் மூலம் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...