|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 February, 2012

ஒரு பல்கலையின்கீழ் 100 கல்லூரிகள் மட்டுமே இயங்கப் பரிந்துரை!


ஒரு பல்கலையின் கீழ், 100 கல்லூரிகள் மட்டும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால், நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என, யு.ஜி.சி -க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் தலைமையிலான நிபுணர் குழு இப்பரிந்துரையை அளித்துள்ளது.நாடு முழுவதும், உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய, தியாகராஜன் தலைமையில், 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை, 2008 ஆகஸ்ட்டில், பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) அமைத்தது. இக்குழு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து, 80 பக்கங்கள் கொண்ட பரிந்துரை அறிக்கையை, சமீபத்தில் யு.ஜி.சி.,யிடம் சமர்ப்பித்தது. இந்த பரிந்துரையை கொள்கை அளவில், யு.ஜி.சி., ஏற்றுக்கொண்டதுடன், 12வது ஐந்தாண்டு திட்ட செயல்பாடுகளில் சேர்த்தும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் எடுத்துக்காட்டு எந்த பல்கலையாக இருந்தாலும், ஒரு பல்கலை கட்டுப்பாட்டின் கீழ், 100 கல்லூரிகள் மட்டுமே இயங்க வேண்டும். இந்த அளவிற்கு இருந்தால்தான், பல்கலையின் நிர்வாகம் சிறப்பாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள், புதிய பல்கலையை ஆரம்பிக்கும்போது, பல்கலைகள் இல்லாத மாவட்டங்களில் ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும், குறைந்தது 10 தன்னாட்சிக் கல்லூரிகளை, தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் நடத்த வேண்டும். இந்த கல்லூரிகளை, தனியார் கல்லூரிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் நடத்த வேண்டும். இவ்வாறு, பல அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. முக்கியத்துவம் இல்லை இதுகுறித்து, தியாகராஜன் கூறியதாவது: பல்கலைக்கழகங்களில், எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அதை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஏற்ப, நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்.
பல்கலைக்கழகங்களில், செனட், சிண்டிகேட் உட்பட பல அமைப்புகள் உள்ளன. இதில், தொழில்துறை பிரதிநிதிகளுக்கோ, கல்வியாளர்களுக்கோ, விஞ்ஞானிகளுக்கோ, உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இவர்களை கட்டாயம் நியமனம் செய்யவும், சட்ட விதிமுறைகளில் இடம் இல்லை. இவர்கள் குழுவில் இருந்தால்தான், காலத்திற்கு ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றுவதிலும், வேலை வாய்ப்பு மிக்க புதிய பாடத் திட்டங்களை கொண்டு வருவதிலும் கவனம் செலுத்த முடியும். எனவே, இவர்கள் உறுப்பினர்களாக இடம் பெறுவதை, சட்ட ரீதியாக உறுதிசெய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளோம். ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு, முறையாக பயிற்சி அளிப்பது, இணையதள நிர்வாக முறையை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட, பல்வேறு கருத்துகளை வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
அண்ணா பல்கலையின் கீழ் 500 கல்லூரிகள்! தமிழகத்தில், 500 பொறியியல் கல்லூரிகள், சென்னை அண்ணா பல்கலையின்கீழ் இருந்து வந்த நிலையை மாற்றி, நிர்வாக வசதிக்காக, முந்தைய தி.மு.க., அரசு, நெல்லை, மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட, ஐந்து இடங்களில் புதிய பல்கலைக்கழகங்களை ஏற்படுத்தியது. புதிய பல்கலைக்கழகங்களில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்றும், கல்வித்தரம் சரியாக இல்லை என்றும் கூறி, 500 கல்லூரிகளையும், மீண்டும் சென்னை அண்ணா பல்கலையின் கீழே, தற்போதைய அரசு கொண்டு வந்துள்ளது. இது, நிர்வாகச் சுமையை ஏற்படுத்தும் என்பது, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...