|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 February, 2012

சி அறையில் 420 தங்க குடங்கள்!


திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் சி அறையில் 3 கிலோ எடை கொண்ட 30 தங்க குடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த அறையில் மேலும் 420 தங்க குடங்கள் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள சி பாதாள அறையைத் திறக்க மதிப்பீட்டுக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 27ம் தேதி அந்த அறை திறக்கப்பட்டது. மதிப்பீட்டுக் குழுவினர் அங்கிருந்த தங்கம், வெள்ளி மற்றும் வைர ஆபரணங்களை பிரித்து எடுத்தனர். அதன் பிறகு அவற்றிற்கு வரிசைப்படி எண்கள் கொடுத்து அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்தனர்.

அப்போது சி அறையில் வைக்கப்பட்டிருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்மநாப சுவாமியின் முகக்கவசம், தங்க அங்கி மற்றும் சிறப்பு பூஜைகளின்போது பயன்படுத்தப்படும் தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டன. இது தவிர 3 கிலோ எடை கொண்ட 30 தங்க குடங்களுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. அந்த அறையில் மட்டும் 450 தங்க குடங்கள் இருப்பதாக கோவில் நிர்வாகம் மதிப்பீட்டுக் குழுவிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அத்தனை குடங்களையும் கணக்கிட்டு மதிப்பீடு செய்ய மும்பையில் இருந்து நிபுணர் குழு வரவழைக்கப்படுகிறது. இந்த சி அறையில் இருக்கும் பொருட்களை மட்டும் மதிப்பீடு செய்ய 3 மாதங்களாவது ஆகும் என்று கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...