|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 February, 2012

நடிப்பு விதேசிகள்!


ஒர் அரசியல்வாதி என்ன தொழில் செய்தார் அல்லது செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரிந்தால்தான், அவருடைய சொத்து மதிப்பு, சென்ற தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் பல கோடியாக உயர்ந்திருப்பதற்கான காரணத்தை ஒரு குடிமகன் புரிந்துகொள்ள முடியும். எந்தத் தொழிலும் செய்யாமல், பதவிக்காக அரசு வழங்கும் சம்பளத்தில் மட்டுமே வாழ்க்கை நடத்திக்கொண்டு, அதேசமயம் சொகுசு கார், பங்களா, மகன் பெயரில் பல கோடி ரூபாய் ஷேர் என்பதெல்லாம் சாத்தியமில்லை.  அவ்வாறு தொழில் செய்ததாகக் கூறினாலும், அந்தத் தொழில் நிறுவனத்தின் பெயர் என்ன? அது எங்கெல்லாம் செயல்பட்டது? அதன் உற்பத்தி அல்லது விற்பனைப் பொருள் என்ன? என்பது தெரிந்தால்தான், அந்த நிறுவனம் உண்மையிலேயே செயல்பட்டதா அல்லது ஊழல் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் "லெட்டர்பேட்' நிறுவனமா என்பதை ஒரு குடிமகன் அறியமுடியும்.  இதை, எனது சொந்த விஷயம், மூன்றாவது நபர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஒரு கட்சியின் தலைவர் சொல்கிறார் என்றால், அவரைப் பற்றி நாம் என்னவென்று சொல்வது? அப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாரும் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திதான்.
 
சென்னையைச் சேர்ந்த வி. கோபாலகிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சோனியா காந்தி கடந்த 10 நிதியாண்டுகளில் வருமானவரித் தாக்கல் செய்த ஆவணங்களைக் கோரினார். முதலில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்முறையீடு செய்தபோது, வருமான வரித் துறையின் தலைமை பொதுத் தகவல் அலுவலர் இதில் சோனியாவின் கருத்தைக் கேட்டு, ஆர்டிஐ சட்டம் பிரிவு 2-ன் கீழ் சோனியா காந்திக்கு இது தொடர்பாக ஜனவரி 23-ம் தேதி கடிதம் எழுதினார்.  வருமான வரித் தாக்கல் விவரங்களை வெளியிடுவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் அளித்துள்ள பதில் இது:  ""....பொதுவாழ்வில் வெளிப்படைத் தன்மை என்ற போர்வையில் (கேட்கப்படும்) இத்தகைய கேள்விகளுக்கு மூன்றாம் நபருக்குப் பதில் சொல்வதன் மூலம், தனிநபர் அந்தரங்கத்தில் மற்றவர்கள் தேவையின்றி நுழைவதாக ஆகிவிடும். வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட வருமானவரித் தாக்கல் தனிப்பட்டது, ரகசியமானது. வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 138-ன் படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது...''
 
அந்தரங்கம் புனிதமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வருமானத்தில் அந்தரங்கம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தனிநபருக்கே, மேற்சொன்ன சட்டத்தின்படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது என்று ஒவ்வொரு நபரும் சொல்வாரேயானால், என்ன ஆகும்? அரசு அலுவலர் தொடங்கி, அமைச்சர்கள் வரை அனைவரும், வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கு வரி செலுத்தத் தவறியவர்களாக மட்டுமே கருதப்படுவார்கள். அவர்கள் முறைகேடாக, லஞ்சத்தால் பதவியின் ஆதாயத்தால் பொருள் சம்பாதித்த குற்றவாளிகளாகக் கருத இடமில்லாமல் போய்விடும்.  பொது வாழ்க்கைக்கு வரும்போது, குறிப்பாக தேர்தலில் போட்டியிடும்போது, ஒரு வேட்பாளர் தனக்குள்ள சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு உருவாக்கப்பட்டதன் காரணமே, பொதுவாழ்க்கையில் வருபவரின் பொருளாதார வசதி என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்ளத்தான்.  சோனியா காந்தி தனிநபர் அல்ல. அவர் ஒரு தேசியக் கட்சியின் தலைவி. ஆண்டுதோறும் வருமான வரித் தாக்கல் செய்கின்றார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவரின் வருமான வரித் தாக்கல் விவரம் தெரிந்தால்தானே, அவர் வளர்ச்சி அவரது வருமானத்துக்குப் பொருந்துவதாக உள்ளதா, அவர் கூடுதல் வருமானத்துக்கு ஆதாரமாகக் காட்டும் நிறுவனங்கள், பங்குகள் எப்படிக் கிடைத்தன, பழையதா, புதிதா என்பதையெல்லாம் கணிக்க முடியும்.
 
நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏ-வும் தனது வருமானவரி, தன் குடும்ப ரத்த உறவுகளின் வருமான வரித் தாக்கல் விவரங்களை அவர்களாகவே ஆண்டுதோறும் வெளியிடும் நடைமுறையை அரசியல் சட்டப்படி கட்டாயமாக்குவதுதான் வெளிப்படைத் தன்மைக்கு வழிவகுக்கும்.  தனிநபர் சுதந்திரம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, பலரும் தவறுகள் செய்து வருவதால்தான் மக்களுக்குப் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்களாட்சித் தத்துவம் செயல்பட வேண்டுமானால் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இருந்தாக வேண்டும். அதேநேரத்தில் அரசியலில் ஈடுபட்டுப் பொது வாழ்க்கையை வரித்துக் கொள்பவர்கள் நேர்மையாளர்களாக இல்லாமல் போனால் அதன் விளைவு மக்களாட்சியையே தடம்புரளச் செய்துவிடும்.
 
வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்படும் கணக்குகள் வெளிப்படைத் தன்மையுடையதாக இருப்பதில் என்ன பிரச்னை? நியாயமாக நேர்மையாகச் சம்பாதித்த வருவாய்க்கு உரிய வரியைச் செலுத்துவதுதானே வருமான வரி. இந்தக் கணக்குகளை யார் வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம் என்கிற நிலைமை ஏற்படும்போதுதான், ஊழல்வாதிகள்,கள்ள மார்க்கெட்டில் தவறாகப் பணம் சம்பாதிப்பவர்கள், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் போன்றவர்களின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ளவும், சந்தேகம் ஏற்படும்போது விசாரணைக்கு வலியுறுத்தவும் முடியும்.  செல்போன் யுகத்தில் தனிமனித உரிமைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கும்போது, பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருவர் பொது வருமானம் பற்றிக் கேட்பதை தனிமனித உரிமை மீறல் என்று சொன்னால் எப்படி ஏற்பது? தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் மூடி மறைக்க ஆசைப்படுகிறார்கள். இவர்களெல்லாம் ஊழலை ஒழிக்கப் போவதாக உத்தரப் பிரதேசத்தில்போய் வாய்ப்பந்தல் போடுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...