|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 February, 2012

இலங்கை அரசை ஆதரிக்காதீர் வைகோ!

இலங்கையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள். ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதம்: இலங்கையின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ  உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த மூன்று உறுப்பினர் விசாரணைக் குழு, சுட்டிக் காட்டி உள்ளது. ஆனால், உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக, இலங்கை அரசு, தனக்குத்தானே ஒரு விசாரணைக்குழுவை நியமித்துக்கொண்டது. அந்தக் குழு, அனைத்து உண்மைகளையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, கோயபெல்ஸ் பாணியில், இலங்கை அரசின் நடவடிக்கைளை நியாயப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.


2009 ஆம் ஆண்டு மே மாதம், இரண்டு மூன்றாவது வாரங்களில் நடைபெற்ற கொடூரமான படுகொலைகளுக்குப் பிறகு, ஜெர்மனியின் முன்னெடுப்பில், பதினாறு நாடுகள், ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தை, ஜெனீவா நகரில் கூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அக்கூட்டம், 2009 மே மாதம் கடைசி வாரம் நடைபெற்றது. ஆனால், அந்தக் கூட்டத்தில், போர்க்காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகின்ற வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற, இந்தியா பெரிதும் உதவியது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழ் இனத்துக்கு எதிராக மேற்கொண்ட, மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இப்போது, உலக நாடுகளின் மனசாட்சி விழித்துக் கொள்ளத் தொடங்கி விட்டது. எனவே, பிப்ரவரி 27 ஆம் நாள், ஜெனீவா நகரில் நடைபெறுகின்ற, ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை, அமெரிக்காவும், மேலும் பல நாடுகளும் கொண்டு வருகின்றன.


இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் இனக்கொலை நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான   அத்தகைய ஒரு தீர்மானத்தை, இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு எவ்வித ஆதரவும் அளிக்கக்கூடாது என்று, நான் தங்களுக்கு ஏற்கனவே எழுதி உள்ள பல கடிதங்களில் கேட்டுக் கொண்டு உள்ளேன். ஆனால், பிப்ரவரி 27 ஆம் நாள், மகிந்த சமரசிங்கே என்ற இலங்கை அரசுப் பிரதிநிதி, ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் நடைபெற இருக்கின்ற மிக முக்கியமான வாக்குப்பதிவில், “இந்தியா இலங்கை அரசை ஆதரிக்கும்” என்று தெரிவித்து இருப்பது, பேரதிர்ச்சியாக உள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. காந்தா, இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த இராஜபக்சேவை பிப்ரவரி 26 ஆம் நாள் நேரில் சந்தித்து, ஜெனீவாவில் நடைபெற இருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், இலங்கையை இந்தியா ஆதரிக்கும் என உறுதி அளித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


இது உண்மையாக இருக்குமானால், இந்த நடவடிக்கை, ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா செய்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழர்களின் படுகொலையால், தமிழகத்திலும், உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களின் இதயத்தில் குருதி வடிந்து கொண்டு இருக்கின்றது.
உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை அரசு நிறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமானால், இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பு; கூட்டுக் குற்றவாளி என்ற நிலைமையே ஏற்படும்.  ஏற்கனவே காயப்பட்டுப் புண்ணாகி இருக்கின்ற தமிழர் நெஞ்சில் மேலும் தீ வைக்கின்ற எந்த நடவடிக்கையையும்  மேற்கொள்ளாதீர்கள் என வேண்டுகிறேன். ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு ஆதரவான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...