|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 March, 2012

ஐந்து மாநில தேர்தல் 690 எம்.எல்.ஏ.,க்களில் 252 பேர் கிரிமினல்!

:நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில், தேர்வு செய்யப்பட்டுள்ள 690 எம்.எல்.ஏ.,க்களில் 252 பேர் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள்.உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்து, 690 எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 35 சதவீத எம்.எல்.ஏ.,க்கள், அதாவது 252 பேர் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள். இதே போல, தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களில் 66 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். அதாவது 457 பேர், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து கொண்டவர்கள். தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2007ம் ஆண்டு இதே மாநிலங்களில் தேர்தல் நடந்த போது, 27 சதவீதம் பேர் தான், அதாவது 190 பேர் கிரிமினல் பின்னணியுடன் இருந்தனர். இதே போல, அப்போதைய தேர்தலில் 34 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் அதாவது, 235 பேர் தான் கோடீஸ்வரர்களாக இருந்தனர். உ.பி., நிலவரம்:உத்தர பிரதேசத்தில் புதிதாகத் தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களில் 189 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். கடந்த தேர்தலில், 140 பேர் மீது மட்டும் கிரிமினல் வழக்குகள் இருந்தன. இம்மாநிலத்தில் தற்போது 271 எம்.எல்.ஏ.,க்கள் கோடீஸ்வரர்கள்.
ஆளும் சமாஜ்வாதி கட்சியின் சார்பில், பிகாபூர் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள மித்ர சென் என்பவர் மீது, 36 கிரிமினல்வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் சார்பில், சுவார் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள நவாப் காசிம்  அலிகானுக்கு 56.89 கோடி ரூபாய் சொத்து உள்ளது. முபாரக்பூர் தொகுதியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்வாகியுள்ள, ஷா ஆலம் என்பவருக்கு 54.44 கோடி ரூபாய் சொத்து உள்ளது. மணிப்பூர்:மணிப்பூரில் தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் யார் மீதும் கிரிமினல் வழக்குகள் இல்லை. கடந்த தேர்தலின் போது ஒருவர் மட்டுமே கோடீஸ்வரராக இருந்தார். ஆனால், இந்த முறை 16 கோடீஸ்வரர்கள் தேர்வாகியுள்ளனர். பஞ்சாப்: பஞ்சாபில் 22 பேர் கிரிமினல் பின்னணியுடன் தேர்வாகியுள்ளனர். கடந்த முறை 21 பேர் மட்டுமே கிரிமினல் பின்னணியுடன் இருந்தனர். தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.,க்களில் 86 சதவீதம் பேர் (117 பேர்) கோடீஸ்வரர்கள் தான். கடந்த தேர்தலில் 66 சதவீதமாக இருந்த (77 பேர்) கோடீஸ்வரர்கள் இந்த முறை அதிகரித்துள்ளனர்.கோவா: கோவாவில் 37 கோடீஸ்வரர்கள் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வாகியுள்ளனர். 12 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.கடந்த தேர்தலில் தேர்வானவர்களில் ஒன்பது பேர் மட்டுமே குற்றப் பின்னணியுடன் இருந்தனர். உத்தரகண்ட்:உத்தரகண்டில் தேர்வாகியுள்ள சட்டசபை உறுப்பினர்களில் 19 பேர் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள்; 32 பேர் கோடீஸ்வரர்கள். கடந்த தேர்தலின் போது, 17 பேர் கிரிமினல் பின்னணியுடன் இருந்தனர்; 12 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...