|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 March, 2012

சுரண்டுவதற்கு தமிழ்நாடு என்ன வேட்டைக்காடா?


வெளிமாநிலத்தவர் சுரண்டுவதற்கு தமிழ்நாடு என்ன வேட்டைக்காடா? என தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர்  நா.வைகறை கேள்வி எழுப்பினார்.வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடாது என வலியுறுத்தி தமிழகமெங்கும் 26.03.2012 அன்று தமிழக இளைஞர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக, தஞ்சை மேரி முனையிலிருந்து காலை 10.30 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு தலைமையில், பேரணியாகத் திரண்ட இளைஞர்கள், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைந்தனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணியின் முடிவில், த.தே.பொ.க. நகரச் செயலாளர் இரா.சு.முனியாண்டி, துணைச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். 

நிறைவில், சிறப்புரையாற்றிய தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, "இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து நம் தமிழ் மக்களை ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்துள்ளது. அதே போன்று, தமிழ்நாட்டிலும் தமிழர்களை அகதிகளாக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்களை திட்டமிட்டுக் குவித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்போக்கு நீடித்தால், தமிழகத்தில் நாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் கிடக்க நேரிடும். வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என வெளி மாநிலத்தவர்களால் நடக்கும் சீர்கெடுகளுக்கு எதிராக  காவல்துறை எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை நாம் வரவேற்கும் அதே வேளையில், வெளியார்களுக்கு இங்கு கட்டுப்பாடுகள் தேவை என்பதை உரத்துக் கூறுகிறோம். வெளியாருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கி அவர்களை இங்கேயே நிரந்தரமாக்க் குடியமர்த்துவது நமக்கு மேலும் சிக்கல்களைத் தான் ஏற்படுத்தும்.  

இந்தியா பல தேசிய இனத் தாயகங்களைக் கொண்டிருப்பதால் தான், 1956ஆம் ஆண்டு மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. அத்தாயகத் தனித்தன்மையை இந்திய அரசு மதிக்காமல், தேசிய இனத் தாயகங்களை அழித்தொழிக்கும் நோக்கில் தான் வெளியாரைத் திட்டமிட்டு இங்கு குவிக்கின்றது. இதே நிலை நீடித்தால் தமிழர்களின் தாயகம் நாளை என்னவாக இருக்கும்? இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 காசுமீரிகளுக்கும், 371 பிரிவு அசாம், மணிப்புரா உள்ளிட்ட வேறு பல மாநிலத்தவர்களுக்கும் சலுகைகள் வழங்குகின்றன. இம்மாநிலங்களில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்கத் தடை விதிக்கப்பட்டு, அத்தாயகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் என்ன நிலை? தமிழர்களின் கையில் தான் இன்று தமிழ்நாடு இருக்கிறதா? வெளி மாநிலத்தவர்கள் சுரண்டிக் கொழுக்கத் தமிழ்நாடென்ன திறந்த வீடா?" என்று பேசினார்.  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...