|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 April, 2012

“விதைத்தவன் உறங்கலாம்; விதைகள் உறங்குவதில்லை”

போர்க்குற்றம் செய்த இலங்கைக்கு எதிராக, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்து வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கும் தீர்மானம், போர்க்குற்றவாளி இராசபட்சேவிற்கு எதிராக சர்வதேச சமூகமே ஒரேதிசையை நோக்கி நகர ஆரம்பித்ததற்கு அடையாளமாகும். அரை நூற்றாண்டு ஈழ மக்களின் நெடிய விடுதலைப் போராட்டத்தின் படிப்பினைகளை மையமாகக் கொண்டு, ஆராய்ந்து, ஈழ மக்களின் நிரந்தர விடுதலைக்கு வழிகோலும் மார்க்கத்தை, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறையைக் கண்டறிவது இக்கட்டுரையின் நோக்கம். 2008 தொடங்கி 2009 மே 19 வரை ஈழத்தில் நடந்த இறுதி யுத்தம், ’புலிகளின் மீது தொடுக்கப்படும் போர்’ என்ற போர்வையில், சிங்கல இனவெறி நடத்திய இன அழிப்பு யுத்தமாகும். எட்டுத் திசைகளிலும் காற்று அடித்தால், எந்த மெழுகுவர்த்தி எரியும்? போராளிகள் நிலைமை அதுதான். அதனால்தான், மெளனித்துப் போயின அவர்களுடைய துப்பாக்கிகள். இராஜதந்திர ரீதியில், இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கிக்கொண்ட சிங்கள இனவெறி அரசு, தனது இன அழிப்புப் போரை நடத்தி முடித்திருக்கிறது முள்ளிவாய்க்கால் வரை. இரசபட்சே ந்டத்திய இனவெறி யுத்த நடவடிக்கைகளை. அதன் பாரிய பாதிப்புகளை அவதானித்தால், அதன் இரண்டு பயங்கரவாத நோக்கங்கள் அம்பலப்படும். (1) இன அழிவைச் செய்வது. (2) இன இழிவைச் செய்வது. அரை நூற்றாண்டாய் அவதிப்படும் ஈழத் தமிழ்மக்கள், கடைசியாக்க் கரையேற கைநீட்டுகிறார்கள். இபோது கூட தாய்த் தமிழகமும் தந்தை நாடான இந்தியாவும் நம்மைக் கைவிடாது என்று உறுதியாக நம்புகிறார்கள். என்வே நாம் மனமிரங்கினால்தான் மனிதன். இல்லையென்றால் பிறகு எதற்கு தமிழன், திராவிடன், இந்தியன் என்ற அடையாளங்கள்?
சரி, இனி அடிநாள் தொட்டு இன்றுவரை ஈழச் சிக்கலில் உள்ள ஆராய்ந்தபோது, விடிந்த முடிபை, தொடக்கமாகக் கொண்டு பார்ப்போம். ஈழம் நோக்கி வந்து கொண்டிருந்தான் புத்தன். வழியில் இறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு, ஓடோடி வந்த தாய், புத்தனை மறித்தாள்.  “புத்தனே! இறந்த என் குழந்தையை உயிர்ப்பித்துக் கொடு!” என்றாள் அழுதபடி. புத்தன் சிரித்தான். யோசித்தான். சொன்னான்.  “அம்மா அதோ தென்படும் தெருவில் சாவே நிகழாத வீட்டில், கொஞ்சம் கடுகு வாங்கிவா”  குழந்தையை சுமந்தவள் சட்டென்று சொன்னாள்.  “புத்தனே! உன் நிபந்தனையை மாற்று”  “ஏன்?” ஏன்றான் புத்தன். தாய் சொன்னாள்,  ”அந்தத் தெருவில், வீடுகளே இறந்து கிடக்கின்றன. பிறகு மக்கள் எங்கே இருப்பார்கள்?” புத்தனுக்குப் புரிந்தது. போதி மரத்திற்கு திரும்பினான்.  இதுதான் ஈழத்தின் இன்றைய அப்பட்டமான யதார்த்தம்.  “வெளியரங்கத்திற்கு வராத ரகசியமில்லை” என்பது விவிலியத்தின் வாக்கு, ஈழத்தில் கடந்த அரை நூற்றாண்டாக அரங்கேறிவரும் இனப்படுகொலையின் உச்சக்கட்ட நிகழ்வுகள், ஐ.நா. பெருமன்றத்தின் அறிக்கையாய் சமீபத்தில் வெளிவந்திருந்தது.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல அரை நூற்றாண்டு ஈழத் தமிழனின் அவல வாழ்க்கை, அழிக்கப்பட்ட மனித உயிர்கள், கொடூர நடவடிக்கைகள் இவற்றின் டிரைலர் அது, தந்தை செல்வா தலைமையில் நடந்த கால் நூற்றாண்டு, அறவழிப் போராட்டம், ’ஜெயவர்த்தனே உண்மையான பௌத்தனாக இருந்தால், நாங்கள் ஆயதம் ஏந்த வேண்டிய அவசியம. இருந்திருக்காது” என்று போர்க்களம் புகுந்த போராளிகளின், கால் நூற்றாண்டு ஆயுதப் போராட்டம், எத்தகைய நியாயங்களை பின்புலமாகக் கொண்டது என்பதற்கான சாட்சியமாய் ஐ.நா. பெருமன்ற அறிக்கை அமைந்திருக்கிறது. பிரச்சனையை பேசிக்கொண்டே இருப்பது தீர்வா? பிரச்சனைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்பது தீர்வா? எது தீர்வு? ஆய்வு செய்வோம். இலங்கை பிரச்சனையை திறந்த மனத்தோடு, முழுமையாக புரிந்துகொண்டால், தீர்வு தானாக புலப்பட்டுவிடும்.
இலங்கையில் வாழ்கிற தமிழ்மக்களை, இனி இராசபட்சேவோ, சிங்கள அரசோ, இனி தங்கள் சொந்த நாட்டு மக்கள் என்று சொன்னால், எதை வைத்து நாம் நம்புவது? அப்படி அவர்களை அழைக்கிற தகுதி யோக்கியதை, இராசபட்சேக்களுக்கு உண்டா? எனவே இன்றைய சூழலில், தமிழ்மக்கள் இனியொரு அறவழிப் போராட்டமோ, ஆயத வழிப்போராட்டமோ நடத்துவதற்கு சாத்தியக் கூறுகள் நிச்சயம் இல்லை. எனவே தமிழ் மக்கள், தங்களது நிலை குறித்து முடிவெடுக்கு அதிகாரத்தை, அவர்களுக்கே தருவது ஒன்றுதான், மனசாட்சிப்படி இறுதித் தீர்வாக இருக்க முடியும். தமிழ்மக்களின் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கும் தகுதியை சிங்கள அரசு அறவே இழந்துவிட்டது. எனவே சர்வதேச சமூகம், ஜனநாயக வழியில் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி, ஈழத்தில் நிரந்தர தீர்வு காணவேண்டும். இதில் யாருக்காவது மாறுபட்ட கருத்து இருந்தால் அல்லது ஏன் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்? என்ற வினாவாக கேட்கப்பட்டால், அதற்கு விடைதரு முயற்சியும்தான் இந்தக் கட்டுரை.  “உண்மையில் மனித குலத்தின் பேரவலம என்பது ஒரு சில கொடுங்கோலர்களின் கொடுஞ்செயல்கள் அல்ல: அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களின் மௌனம்” என்றார் மார்டின் லூதர் கிங்.
ஈழப் பிரச்சனையில் இன்றுகூட இது நிஜம்தான், “யாதும் ஊரெ யாவரும் கேளீர்” என்றவனுக்கு இன்று உதவுவதற்கு ஒரு நாடும் இல்லை. உறவுக்கு ஒரு நாதியும் இல்லை. பூகோள ரீதியாக மட்டுமல்ல. சமூக ரீதியிலும் தனித்துவிடப்பட்ட தீவாக இருக்கிறான் ஈழத்தமிழன்.என்றாலே காந்தி தேசத்திற்குக் கசக்கிறது. புத்த தேசமோ பொசுக்கிறது. “இழப்பதற்கு என்ன இருக்கிறது? கை விலங்குகளைத் தவிர” என்று மார்க்சீயம் பேசுகிற நாடுகள் கூட ஈழத் தமிழர் சிக்கலில் மாறுபட்டு நிற்கிறது, என்ன கொடுமை இது! காந்தியம், பௌத்தம், மார்க்சீயம் போன்ற மனித நேய தத்துவங்கள் இந்த மண்ணில் ஏற்படுத்திய தாக்கம் இவ்வளவு தானா? “தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதிகள் எங்கே போனார்கள்? இருக்கட்டும். ஈழத்தமிழர் பிரச்சனையில் இனியும் நாம் மௌனித்து இருந்தால், மிச்சமிருக்கும் தமிழனையும் மென்று தின்றுவிடும் சிங்கள பேரினவாதம். எனவே காலதாமதமின்றி ஈழச்சிக்கலை நிரந்தரமாக தீர்க்கக்கூடிய, பொது மக்கள் வாக்கெடுப்பினை முன்னெடுப்பது, அதை நடைமுறைப்படுத்த செயல் திட்டமிடுவது அதி அவசரத் தேவைகளாகும்.  இல்லையெனில் நாம் வாழ்வோம் நமது வரலாறு செத்துப் போகும்.  இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்து அவர்களது இன அடையாளங்களைத் திட்டமிட்டு அழித்து, சிங்களக் குடியேற்றம் மூலம் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை சிதைத்து இறுதியில் ஒரு புதிய நாசகாரத் தொடக்கமாக பொதுமக்களை போர் இலக்குகளாக்கி, ஈழத்தை இடுகாடாய் ஆக்கிவிட்ட ஸ்ரீலங்கா இனி சிங்களர், தமிழர் இருவருக்கும் பொதுவான தாயகம் என்பதை இனிமேல் ஏற்கமுடியுமா? சொல்லுங்கள். கடந்தகால ஈழத்தின் ஈர வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தமிழ் மக்களுக்கு சிங்கள தேசம் எப்போதும் பலிபீடமாக இருத்ததே தவிர, ஒரு போதும் பாதுகாப்புக் கூடமாக இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை.  ஈழப் பிரச்சனை மூன்று கட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. முதலாவது கட்டம் (1956-1984) ஒன்றுபட்ட இலங்கையில்., சிறுபான்மைத் தமிழ் மக்கள், தங்களுக்கும் சிங்கள மக்களுக்கு இணையாக சம அந்தஸ்து, சம வாய்ப்பு, சம உரிமை கேட்டு செல்வநாயகம் (செல்வா) தலைமையில் நடந்த அறவழிப் போராட்டம். இரண்டாவது கட்டம் (1985-2009) தனி ஈழமே தீர்வு என வட்டுக்கோட்டை தீர்மானத்தை (1976-மே 14) அறவழி தோற்றுப் போனதால், காந்தியவாதிகள்தான் நிறைவேற்றினார்கள். அதைப் பின்பற்றி ஈழ இளைஞர்கள், ஆயுதம் தாங்கி களமாடி, போராளிகளாக பரிணாமம் பெற்ற ஆயுதப் போராட்டக் காலம் அது. மூன்றாவது கட்டம் (2008-க்கு பிறகு) நாசிச ஹிட்லருக்கும் தோன்றாத, விஞ்ஞானப் பூர்வமான இன அழிப்புக் கொள்கையும், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தை இழிவு செய்யும் உள்நோக்கம் கொண்ட யுத்த நடவடிக்கைகளும், மகிந்த ராசபட்சேவின் கொடிய அணுகுமுறைகளாகும். சமீபத்தில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மேரி கால்வின், ஈழக் களத்தில் தான் கண்ட போர்க்குற்ற காட்சிகளைக் குறிப்பிடுகிறார். “ஈழப் போரின் உச்சக்கட்டத்தில் சரணடைய வந்த அரசியல் பிரிவு தலைவரும், மிகப்பெரும் புத்தி ஜீவியுமான நடேசன் உள்ளிட்டோரை, வெள்ளைக் கொடி பிடித்து வந்தவர்களை காட்டு மிராண்டித்தனமாக சுட்டுக்கொன்று சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேயத்தைக் காலில் போட்டு மிதித்தது சிங்கள பயங்கரவாதம்’
மனித குலத்திற்கு எதிரான போரை இராசபட்சே நடத்தியதாக ஐ.நா. அறிக்கையே ஏற்றுக் கொண்டது. இதன் விளைவு மனித குல விரோதி இராசபட்சேவிற்கு எதிராக சர்வதேச தமிழினமும் முற்போக்கு சிந்தனையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மனிதநேயம் கொண்டோரும் மத, இன, தேச எல்லைகளைக் கடந்து களமிறங்கி இருக்கிறார்கள். காட்சிகள் மாறுகின்றன. இலங்கையின் இனப் பிரச்சனையில் முதல் அதிபர் டட்லி சேன நாயக முதல், மகிந்த இராசபட்சே வரை இன அழிப்பு என்ற ஒரே நோர்க்கோட்டில் சிந்திப்பவர்கள்தான், “எதிர்காலத்தில் இலங்கையில் இரண்டு இனம்தான் இருக்கும். ஒன்று சுத்தமான சிங்கள இனம், மற்றொன்று சிங்கள தமிழ்க் கலப்பினம், தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுவார்கள் தமிழ் பெண்கள், சிங்கள இராணுவத்திற்கு பாலியல் சேவைக்கும் அனுப்பப்படுவார்கள்“ என்ற இனவெறி பரப்புரைகள், இலங்கைத் தீவைக் சிங்களமயமாக்கும். அடிப்படைக் கட்டுமானங்களாக சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி, பௌத்தம் அரச மதம் என்ற வகையில் அரசியலமைப்பு திருத்தப்படும். வடக்கு கிழக்கு இணைப்பு மறுப்பு 1981 யாழ் நூலக எரிப்பு, குட்டிமணி ஜெகனின் விழிகளை பிடுங்கி எறிந்த வெளிக்கடை சிறைச்சாலை படுக்கொலை 1983-ல் ஜெயவர்த்தனே முன்னின்று நடத்திய இனப்படுகொலை. கூட்டாட்சி முறைக்கு மறுப்பு என்று சட்டத்தையும், அரசு எந்திரத்தையும் இனவெறிக்கு ஆதரவாக திருப்பியதன் விளைவு அரச பயங்கரவாதமாக இன்று உருவெடுத்துவிட்டது. அதன் கொடுமையான பாதிப்புதான் 25 லட்சம் தமிழ் மக்களை நேரடியாவும், மறைமுகமாகவும் இல்லாமல் செய்திருக்கிறது இலங்கை அரசு. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதுகிறார் ’1949-ல் தமிழரசு கட்சிக் கூட்டங்களில் ஈழத் தந்தை செல்வா திரும்பத் திரும்பக் கூறுவார், இலங்கையில் 65 இலட்சம் சிங்களர்கள் வாழ்ந்தார்கள் 35 இலட்சம் தமிழர்கள் நாம் வாழ்கிறோம். என்றாவது ஒரு நாள் சிங்களர்களுக்கு இணையாக சம உரிமை பெற்று தலை நிமிர்ந்து நாம் வாழ்வோம்.’ஆக கணக்கிட்டுப் பார்த்தால் 2011-ல் சிங்கள மக்கள் தொகை ஒன்றரை கோடி. ஆனால் சிறுபான்மை தமிழ் மக்கள். அதே 35 லட்சம் இலங்கை மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பார்த்தால் 2011-ல் சிங்கள மக்கள் தொகை ஏறத்தாழ 2 மடங்குக்கு மேல் பெருகிகிட்டது. ஆனால் 70 லட்சமாகப் பெருக வேண்டிய தமிழ் மக்கள், சிங்கள இனவெறி காரணமாக 25 லட்சம் மக்களை இல்லாமல் ஆக்கியது போக 10 இலட்சம் மக்களை ஐரோப்பிய வீடுகளில் அகதிகளாக விரட்டிவிட்டு எஞ்சியுள்ள 35 இலட்சம் தமிழர்களை விட்டு வைத்திருக்கிறது. அடுத்த கால் நூற்றாண்டில் தமிழினம் முற்றாக அழித்தொழிக்கப்படலாம். இந்த உண்மை வெளியுலகத்திற்கு தெரியாமல் மறைக்கதான், ஈழத்தில் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. வெள்ளை ஏகாதிபத்தியத்தை இலங்கை மண்ணிலிருந்து விரட்ட சிங்கள மக்களோடு தோளோடு தோள் நின்று இரத்தம் சிந்தி, உயிர்ப்பலி கொடுத்த தமிழ் மக்களுக்கு சிங்களதேசம் காட்டும் விசுவாசம் இதுதானா? வெள்ளையனை விரட்ட மட்டும்தான் தமிழன் தேவையா? வாழ்வதற்கு அவனுக்கு உரிமையில்லையா? மலையகத்தில் செழிந்திருக்கும் தேயிலைச் செடி, தமிழனின் வியர்வையில்தானே இன்றுவரை வளர்கிறது. அந்த வம்சாவழித் தமிழனையாவது இலங்கை அரசு வாழவைத்ததுண்டா? இலங்கையின் பொருளாதாரமே தேயிலைத் தோட்ட வருமானம்தானே, அதை ஈட்டித்தருகிற இனத்தை இழிவு படுத்துவதா? மலையகத் தமிழனோ இன்றுவரை மண்டியிட்டுக் கிடக்கிறான். பூர்வீகத் தமிழனோ உயிரோடு புதையுண்டு போகிறான். இப்படி தமிழர் விரோத சிங்கள இன வெறியர்களும், தமிழ் மக்களும் ஓரே அரசியலமைக்குள் ஒத்து வாழ்வது எப்படி? இது எப்படி சத்தியமாக இருக்க முடியும்? சிங்கத்தின் வாயிற்குள்ளே தலையை விடுவதா?  இராசபட்சே அவரது சகோதரர்கள் பாசில், கோத்த பயே ராசபட்சேக்கள், கொலைமுகாம் நடத்திய ஹிட்லரை விட கொடியவர்களாக இருப்பதை அவர்களது இன அழிப்பு நடவடிக்கைகள் மெய்ப்பிக்கின்றன. உலக வரலாற்றில் முதல் முறையாக விஞ்ஞான பூர்வமான இன அழிப்பை செய்தவர்கள் இவர்கள்தான். இதோ சத்தியம் அடிக்கும் சான்றுகள்.; மனித நாகரிகத்தின்  பின்னடைவுகள். ருவாண்டாவில் டுட்சி இனத்தவர்; செர்பேனிக்காவில் 8000 போஸ்னியர்; இனவெறிக்குப் பலியாயினர். இதை இனப் படுகொலையாக உலகம் ஒத்துக் கொண்டது. ஆனால் தமிழ் ஈழத்தில் எத்தனையோ இலட்சம் பேர் படுகொலைக்கு ஆளாகியும், வெளி உலகிற்கு தெரியவில்லை. காரணம் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவற்றை முதலில் வெளியேற்றிவிட்டு, சாட்சியங்களே இல்லாத சூழலை உருவாக்கி பின்னர் இன அழிப்பைத் தொடர்ந்தான் இராசபட்சே.
இராசபட்சே இனவெறிப் போரில் இறந்து போனவர்களின் படங்களை ஆய்வ செய்தால், அதில் பெரும்பாலும் பெண் குழந்தைகளையே குறிவைத்து கொலைசெய்தது புலனாகும். அடுத்த தமிழ் தலைமுறைக்கான வித்துக்களை பிஞ்சிலேயே அழித்து ஒழிக்கும் கொடூரம், இராசபட்சேவின் இனஅழிப்பு வியூகம் இதுதான். வெள்ளை வேனில் முகாமில் இருந்து கடத்தப்படும் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யும் காட்டுமிராண்டிதனமான இனஅழிப்பு முறையும் இராசபட்சேவின் சதித்திட்டம் தான். தமிழ் ஈழத்தில் ஏறத்தாழ 80,000 விதவைகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஈழமா? அல்லது விதவைளின் தேசமா? இதைவிடக் கொடுமை அந்த விதவைகளை கண்ணி வெடிகளை அகற்ற சிங்கள இராணுவம் பயன்படுத்துவதுதான்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் செஞ்சோலை வளாகத்தில் 2006-ல் ஆளுமைப் பயிற்சிக்காக வந்திருந்த 52 மாணவிகளை இலங்கை விமானங்கள் குண்டு மழைப் பொழிந்து கொன்று போட்டது. காரணம் அவர்கள் பெண்கள் அல்லவா! கருவறைகளையே கலைத்து விடுவதுதான், இராசபட்சேவின் இன அழிப்புக் கோட்பாடு. 1996-களில் யாழ்நகர் கிருஷாந்தி தொடங்கி 2009-ல் ஊடகவியலாளர் இசைப்பிரியா வரை சிங்கள இனவெறி இராணுவத்தால் கசக்கி எறியப்பட்ட மலர்கள் கணக்கில் அடங்காது. கருகிப் போனதை எண்ண முடியாது. தமிழ்ப் பெண்களே, சிங்கள இராணுவத்திற்கு பாலியல் சேவை செய்யத்தானாம். காட்பரல் சோமரத்ன என்ற சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவன், கொழும்பு தமிழ் பெண்ணை கற்பழிப்பு செய்த குற்றத்திற்காக கொழும்பு இராணுவ நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிக்கப்பட்டான். அவனது வாக்குமுலம் இதோ....  “கற்பழிப்பது குற்றம் என்றால் அதற்காக என்னை நீதிமன்றம் தண்டிக்கும் என்றால் ஒட்டுமொத்த சிங்கள இராணுவத்தையும் தண்டிக்க வேண்டும். காரணம் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்களை கற்பழித்துக் கொன்று ஒரே குழியில் போட்டு புதைத்திருக்கிறோம். அதற்கு நானே சாட்சி”.( தமிழ் மண்ணே வணக்கம். மனித உரிமை ஆர்வலர் சுரேஷ் விகடன் பிரசுரம்.)  ஈழத்தமிழர்கள் சமயப்பற்று மிக்க இந்துக்கள். இலங்கையில் வெள்ளையர்கள் ஆண்ட பொழுது தங்களை மதமாற்றம் செய்து விடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுவார்களாம். எனவே தங்களது மத அடையாளங்களை மறைத்துக் கொள்வார்களாம். அதற்கு கல்கி அவர்கள் ஒரு எடுத்து காட்டு சொன்னார். அமாவாசை அன்று வாழை இலை போட்டு சாப்பிடுவது இந்துக்கள் வழக்கம். அதைப் பின்பற்றும் ஈழத்தமிழர்கள் சாப்பிட்ட பிறகு, அந்த எச்சில் இலைகளை கூரையில் சொருகி விடுவார்களாம். காரணம் வெளியில் போட்டால் தாங்கள் இந்து என்று தெரிந்துவிடும் அல்லவா? இப்படி தங்களது மதத்தை பாதுகாத்தவர்கள் தமிழர்கள். அதுமட்டுமா, இலங்கை விடுதலை பெற்றபோது, இலங்கை தேசியக் கொடி உருவாக்கத்தில் சிங்கத்தை கொடியில் பிரதானமாக பொறித்துக் கொண்டனர். தமிழர் அடையாளம் புறக்கணிக்கப்பட்டது. கொதித்தெழுந்த தமிழர்கள் தங்களது மத அடையாளமான நந்தி பொறித்த கொடியை நாடெங்கிலும் ஏற்றினர். இன்று நிலைமை என்ன? புற்றீசல் போல புத்த விகாரைகள் தமிழர் மண்ணில் எழுப்பப்படுகின்றன. தமிழர் மத அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன.
சிங்கள இனப் படுகொலைக்கு அஞ்சி. சொந்த மண்ணை விடடு ஓடிவந்து இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்து புலம் பெயர்ந்தவர்கள் சுமார்; 1.38.000 பேர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 10 இலட்சம் பேர்; பிறந்த மண்ணில் வாழ்கிற உரிமையைப் பறிப்பதும். மண்ணின் மைந்தர்களை ஓடஓட விரட்டுவதும். இராசபட்சேவின் பிறவி இன அழிப்பு புத்தியாகும். அதனால்தான் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீகுவான்யே சொன்னார்...  ”l have read his (rjapakse) speeches and i knew he is a sinhalese extremist, i cnnot chnge his nrcissstic mind'  2009 மே 17.18.19 ஆகிய தேதிகளில் சிங்கள இராணுவம் எனது கட்டுப்பாட்டில் இல்லை என்று சிங்களத் தளபதி பொன்சேகா தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார். 26.05.2011 அன்று கொழும்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் மற்றொரு உண்மையையும் அறிவித்தார். கடைசி நாள் யுத்தத்தில் வெள்ளைக்கொடி பிடித்து வந்த விடுதலைப் புலிகள், கொத்தபாய இராசபக்சே உத்திரவின் பேரில் தான் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சரணடைய வந்தவர்களை கூட கொலை செய்த இந்தத் கொடியவர்களை  மனிதகுலம் ஒரு போதும் மன்னிக்காது. இந்த இராசபட்சேக்கள் மனித நாகரிகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்ட கயவர்கள்.வெள்ளை கொடி பிடித்து வந்தவனை சுட்டு வீழ்த்தியபோது தெறித்த இரத்தம், மனித இரத்தமில்லை; அது மானுடத்தின் ரத்தம்; அதன் ரணம் ஆறாது. காயாது.   தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு என்ற பெயரில் சிங்கள ராணுவத்தினரை நிறுத்தி, அவர்களுக்கு வீட்டுவசதி அளிப்பதின் ஊடாக. சிங்களக் குடிறேற்றம் செய்வது. தமிழர் நிலத்தைப் பறிப்பது. இது ராசபட்சேவின் அழுகிய மூளையில் இருந்து கிளம்பிய யோசனை.
ஜெனிவா உடன்படிக்கைக்கு எதிராக. இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது. கொத்துக் குண்டுகளைப் போட்டு. தமிழ் மக்களைக் கொன்றுகுவித்தது. விமானத்திலிருந்து 4.5 லட்சம் கிலோ குண்டுகள் போட்டோம் என்று புள்ளிவிளக்கம் வேறு தருகிறார் இலங்கை அமைச்சர். கடந்த போரில் மட்டும் வன்னிப்பகுதியில் 2. லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சொல்கிறது. கடந்த 15.12.2008 முதல் 02.05.2009 வரையிலான 5 மாதங்களில் மட்டும் தமிழர்; பகுதிகளில் 12 மருத்துவமனைகள் 30 முறை தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை. கண்காணிப்பத் தகவல் தெரிவிக்கிறது. போரினால் கதிகலங்கிப் போயிருந்த அப்பாவி மக்களை பாதுகாக்கிறோம். என்ற கூறி பாதுகாப்பு வளையத்துக்குள் அழைத்துக் கொன்ற பேரவலம், உலகம் இதுவரை காணாத கொடூரம்.. மே 2009 முள்ளிவாய்கால் இறுதி நாள் யுத்தத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக “டைம்ஸ்” இதழ் செயற்கைகோள் ஆதாரங்களைக்காட்டி மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இறுதி மதிப்பீட்டில் 40 ஆயிரம்பேர்வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேற்கூறியவை எல்லாம் ராசபட்சேவின் இனஅழிப்பு நடவடிக்கைகளின் எடுத்துக்காட்டுகள். ராசபட்சேவின் இன்னொரு இனவெறிமுகம் யாதெனில் ஒட்டுமொத்த தமிழனத்தையே கொச்சைப்படுத்தும் வண்ணம், உள்நோக்கம் கொண்ட பாசிச இன இழிவுச் செய்யும் யுத்தமுறை. இதோ மெய்பிக்கும் சான்றுகள். தாயார் பார்வதி அம்மாள் சிதைக்கு தீ மூட்டிய பிறகு, அந்த சிதைச் சாம்பலில் சிங்கள ராணுவம் நாய்களை விட்டு அவமானப்படுத்தியது. முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் பருவம் வந்த பெண்களை, பெண் புலிகள் தானா? என ஆய்வு செய்கிறோம் என்ற போர்வையில் பாலியல் வன்முறை செய்யும் பாசிச ராணுவ நடவடிக்கைகள்.
ஒரு தலைமுறை செய்யும் தியாகமும், சிந்தும் இரத்தமும், அடுத்த தலைமுறையை தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழவைக்கும் என்ற நம்பிக்கையை, நெஞ்சில் ஏந்தி இளமைப் பருவத்தை விடுதலை வேள்விக்கு கொடுத்துவிட்டுக் களமாடிய பெண் போராளிகள். வீரமரணம் அடைந்த பிறகு, அந்த புனித வதிகளின் செத்த உடம்பைக்கூட எச்சில் படுத்திய சிங்கள ராணுவ ஓநாய்களின் பாலியல் வெறித்தனம். மனசாட்சி உள்ள எந்த மனிதனாலும் மன்னிக்க முடியாது. சான்று ஓவியா புகழேந்தியின் போர் முகங்கள் ஓவியம்.   அனுராதபுரம் விமானத்தள தாக்குதலில் பங்கேற்று வீரமரணம் அடைந்த பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி, அங்கங்களை துண்டு, துண்டாக வெட்டிப் போட்டது சிங்கள இன வெறி அரசு. லண்டன் 4-வது சேனல் ஒளிபரப்பில் உள்ளபடி நிராயுதபாணியான போராளிகளை நிர்வாணப்படுத்தி, கண்களைக் கட்டி பூட்ஸ்காலால் முதுகில் மிதிப்பது. தலையில் சுடுவது போன்றவை ஏதோ தனிப்பட்ட தமிழனை இழிவு படுத்துவதற்காக செய்யப்பட்ட நடவடிக்கை அல்ல. அது தமிழனாக பிறந்த ஒவ்வொருவரையும் இராசபட்சே அவமானப்படுத்துகிறார்.. அதற்கு அவர் பதில் சொல்லி ஆக வேண்டும்..   “உண்டி கொடுத்தோரே உயிர்; கொடுத்தோர்’ என்று உலகிற்கு தத்துவம் சொன்ன தமிழ்மக்களை ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல முள்கம்பி வேலியிட்டு இன்னமும் அடைத்து வைத்திருப்பது அவர்களை உணவிற்காக கையேந்த வைப்பது, இதுதான் இராசபட்சே தன் சொந்த நாட்டு மக்களை நடத்தும் இலட்சணமா? அல்லது இன இழிவு செய்யும் உத்தியா? அல்லது இதுதான் இலங்கையின் இறையாண்மையா?. இலட்சகணக்கான மக்களை திறந்த வெளியில் அடைத்து வைத்து., கழிப்பறை வசதியின்றி, ஆடை மாற்றக்கூட வழியின்றி இயற்கை அவஸ்தைகளால் பெண்கள்படும் துன்பங்களும், அவமானங்களும் வார்த்தையால் சொல்ல முடியுமா? அந்த அப்பாவி மக்கள் தமிழச்சியாய் பிறந்ததே குற்றம்தானா? ஏழு கோடித் தமிழர்கள் பக்கத்திலிருந்தும் ஒப்பாரிதான் வைக்க முடிந்ததே தவிர இந்த பாதகத்தை தடுத்து நிறுத்த முடியவில்லையே. பாலியல் குற்றச்சாட்டின் பேரில் ஐ.நா படையில் இருந்து விரட்டப்பட்ட இராணுவம்தான் இந்த சிங்கள இராணுவம். அந்த கொடூர இராணுவத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டு மிச்சமிருக்கும் தமிழ்மக்கள் நிம்மதியாக கற்போடு பாதுகாப்பாக வாழ முடியுமா? இதோ கண்டிநீதி அரசர் சரத் இன் செல்வா முகாமை பார்த்துவிட்டு கண்ணீர் மல்க சொன்ன சாட்சியம் “ ஆயிரம் பேர் அடைக்க வேண்டிய இடத்தில் பத்தாயிரம் பேரை அடைத்தால் அது என்ன நியாயாம்? மூவாயிரம் பேருக்கு ஒரு கழிப்பறை. ஐயோ என்ன கொடுமை. பெருத்த அவமானம். வேறு என்ன நான் சொல்வது. இதை சொன்னதால் நான் கொல்லப்படலாம்.’  இதோ ஜெர்மனி சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் தலைவர் விராஜ்மென்டிஸ்  (பிறப்பால் ஒரு சிங்களர்) கூறுகிறார்;

இன்று தமிழ்ச் சமூகம் இலங்கை அரசின் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. வடக்கே மட்டும் 140 இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதியை இராணுவத் தொகுதி வலைப் பின்னல் வியூகத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முகாந்திரமாக இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயாத்தப்பட உள்ளது. மேற்கூறிய நடவடிக்கைகள் மனித உரிமையை மீறிய செயல்கள் என்பதை விட மனித தன்மையற்ற செயல்களாகும். சிங்கள அரசிற்கும் தமிழ் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை மேலும் அகலப்படுத்திவிட்டார் இராசபட்சே.’  இராசபட்சே உண்மையான பௌத்தனாக இருந்தால் அவர்மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கட்டும். ஜனநாயகப் பண்பு என்பது அவரிடம் மிச்சமிருந்தால்,வெள்ளையனை எதிர்த்துப் போராடி ரத்தம் சிந்தி, சர்வபரித் தியாகம் செய்து தமிழ் மக்கள்தான் இன்று இராசபட்சேக்கள் அரியணையில் அமர்வதற்கு பிராதானமான காரணமாகும். அந்த நன்றி உணர்வு இருந்தால் பொது வாக்கெடுப்பு நடத்தட்டும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் இறுதியில் முகமது அலி ஜின்னா மத அடிப்படையில் பாகிஸ்தானை பிரித்ததுபோல் ஈழத் தமிழர்கள் அன்று இன அடிப்படையில் ஈழத்தை பிரிக்கவில்லை. இதை சிங்கள் இன வெறியர்கள் யோசிக்கவேண்டும்.   மக்களுக்காக ஆயுதம் தூக்கியவன் வரலாற்றுக்குரியவன். மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவன் கடவுளால் கூட மன்னிக்கப்படாத பாவியாவான். எல்லா உயிர்களிலும் கண்ணன் இருக்கிறான்” என்பது இந்து தர்மம். மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவனுக்கு மக்களே அதற்கு மறுதலையாக பதில் அடி கொடுக்கும் விதத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி, ஆதிக்க ஆணவ இன வெறி ஆட்சியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் புரட்சிக் கர ஐனநாயகத்திற்கு தமிழ் ஈழம் சான்றாகட்டும்.. தமிழ் ஈழ விடுதலை ஒன்றுதான் பூகோள ரீதியாக தமிழக மீனவர்களை சிங்கள பயங்கரவாதியிடமிருந்து காப்பாற்றும்.
பௌத்த மதவெறியும் சிங்கள இனவெறியும், ஊற்றி ஊற்றி வளர்க்கப்படும் இலங்கையில் புத்த கொள்கை என்பது இங்கு ஈழத் தமிழருக்கு எதிரான யுத்தக் கொள்கையாக மாறிவிட்ட சூழலில் சிங்களத்தோடு தமிழ் மக்களை சேர்ந்து வாழச் சொல்வது தற்கொலைக்கு இணையானது. வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும் செயலாகும். நாடு என்பது தேசங்கள் அடங்கியதாக இருக்கலாம். தேசங்களுக்குள் சிக்கல்கள் எழலாம். அந்த சிக்கல்கள் நீண்ட காலம் நீடித்தால், பாதிக்கப்பட்ட தேசம் பிரிந்து போவது என்பது முழு ஐனநாயக உரிமையாகும். குடும்பம் என்ற அமைப்பில் கணவன் மனைவி இவர்களுக்கு இடையேயான பிரச்சனை முற்றும்போது பிரிந்து போகும் உரிமையை சட்டப்பூர்வமாகவே சமூகம் தருகிறது. இது குடும்பத்துக்கு பொருந்தும் எனில், குடும்பங்களில் தொகுப்பாக இருக்கிற தேசங்களுக்கும் பொருந்தும். ஒரு நாடு தனது நாட்டில் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஒரு தேசிய இனப் பிரச்சனையை தீர்வு காண முடியாவிட்டால், அதற்கான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை பொது வாக்கெடுப்பு மூலம் பொது மக்களிடமே விட்டு விடவேண்டும். இதை ஐ.நா சபை சர்வதேச விதியாகக் கூட அறிவிக்கலாம். உலகத்தின் நாகரிகம் மனிதன் மனிதனின் நாகரிகம் மொழி, மொழியின் நாகரிகம் மனிதாபிமானம்” என்றார்ட்; கார்லைல். நீதி நூல்கள் நிரம்பியிருக்கிற தெய்வீகமான மொழி நமது தாய்மொழியானால், நமது சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்குவது மெய்யானால், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிற மனதுக்கு நாம் உரிமையாளர்கள் என்றால்...  “ஆவின் கடை மணி நெஞ்சுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியில்’ மடித்த வரலாறு உண்மையானால், அறிவினான் ஆகுவதுண்டோ பிரிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை என்ற வள்ளுவத்தின் வாய்மொழி மெய்யானால், எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்பது நமது சமயமானால், ஈழப் பிரச்சனைக்கு இறுதித் தீர்வு தமிழ் ஈழத் தனி அரசுதான். அது அமைய பொது மக்கள் வாக்கெடுப்பு என்ற ஐனநாயக வழிமுறைக்கு நாம் ஆதரவு திரட்டுவோம். இனி ஈழ மண்ணில் யுத்தம் வேண்டாம். சப்தமும் வேண்டாம்.. இரத்தமும் வேண்டாம். ஒரு தேச விடுதலைக்கு என்ன விலை தரவேண்டுமோ அதைவிட கூடுதலாகவே ஈழ மக்களும், ஈழப் போராளிகளும், கண்ணீராலும் ரத்தத்தாலும் ஈகத்தாலும் தந்து விட்டார்கள். போஸ்னியா, தெற்கு சூடான், கிழக்கு தைமூர்; தேசங்களைப் போல தமிழ் ஈழமும் பொது வாக்கெடுப்பின் மூலம் விடுதலை பெறட்டும். என்றைக்காவது ஓர்நாள் தாயக மண்ணை தரிசிக்க மாட்டோமா? என்ற தாகத்தோடு ஏங்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ் ஈழ விடியலை கண்ணாற் காணட்டும், கண்டு மனம் குளிரட்டும். பதுங்கு குழியில் பாடம் படித்த தமிழ் பிஞ்சுகள் பள்ளிகளுக்கு போகட்டும்.. பிரிந்த உறவுகள் சங்கமிக்கட்டும்.

இராசபட்சேக்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, அவர்களுக்கு மரண தண்டனைகளையும் வாங்கித் தருவதைவிட கொடிய தண்டனை எது தெரியுமா? எந்த நிராயுதபாணியாக இருந்த பொது மக்கள் மீது இராசபட்சே போரை நடத்தி வீழ்த்தினாரோ அதே பொதுமக்கள் கையில் வாக்காயுதம் கொடுத்து இராசபட்சேவை வீழ்த்துவதுதான் உண்மையான தண்டனையாகும். அரசியல் பிழைத்தோர்க்கு நிச்சயம் அறம் கூற்றாகும். இது சர்வதேச சமூகத்தின் அவசர அவசியத் தேவையாகும். இது சர்வதேச மனித உரிமைக்கும், மனித நேயத்திற்கும் விடப்பட்ட சவால். இதை முறியடிக்க மொழி, மத, இன, தேச, எல்லைகளைக் கடந்து மனித குலம் ஓர் அணியாய், போரணியாய் கட்டாயம் கனவு காண வேண்டும். காலம் காலமாக ஈழ மக்கள் பட்ட கொடுமைகள் இப்போதுதான் உலகத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. உத்தரவிட நிர்பந்திப்போம். இறுதியாக 21-ம் நூற்றாண்டு இன்னொரு ஹிட்லரை முசோலினியை இந்த பூமியில் அனுமதிக்காது என்பதை நிரூபிப்போம்.   மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவன் எவனாக இருந்தாலும், அவனை வீழ்த்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச சமூகம் வாக்காயுதம் கொடுத்து, அதன் மூலம் பாதித்தவனை வீழ்த்துவதுதான் புதிய ஐனநாயக புரட்சியாகும். இது ஒரு நல்ல தொடக்கமும், மக்களைக் கொல்லும் மனிதகுல விரோதிகளுக்கு தக்க பாடமும் ஆகும். இந்த மக்கள் தீர்ப்புக்கு இணையாக எந்த ஒரு சர்வதேச நீதிமன்றமும், தீர்ப்பளிக்க முடியாது.
1897-ல் இராமேஸ்வரத்தில் சுவாமி விவேகானந்தா; இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது சொன்னார்;. ’இந்தியர்களே இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்கு உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபடுவதை நிறுத்துங்கள். அதற்கு மாறாக பாரத மாதாவை வழிபடுங்கள். நாடு விடுதலை அடைந்து விடும்!’   அதே போல்தான் தமிழா, நீயும், திரைப்படம் தொலைக்காட்சி கிரிக்கெட், வழிபாடு இவற்றுக்கெல்லாம். நேரம் ஒதுக்காது நம் தொப்புள் கொடி உறவுக்கு நேரம் ஒதுக்கு.  ’ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்து’ என ஒற்றை முழக்கம் செய். இது இலங்கை அரசை வற்புறுத்த வைக்கும் கோரிக்கை.  இங்குள்ள அரசுகளுக்கு எதிரானது அல்ல. இதை நாம் செய்யத் தவறினால் ஈழப் பிரச்சனையில் இராசபட்சே மட்டும் குற்றவாளியல்ல; 10 கோடி தமிழர்களும்தான்.

முடிவாக ஐனநாயகம் என்பது மனித நாகரிகத்தின் உச்சம். அதில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது ஒரு முதிர்ந்த அரசியல் சார்ந்த ஐனநாயக வழிமுறை. ஐனநாயத்தின் இறுதி இலக்கு என்பது “ஆட்சி, அதிகாரம் மக்களுக்கே”என்பதாகும். எனவே ஈழச் சிக்கலில் இனி இறுதி தீர்ப்பை, ஈழத் தாயகத்தில் இருக்கும் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும்தான் எழுத வேண்டும். அதற்குரிய சர்வதேச சூழ்நிலையை ஒவ்வொரு தமிழனும் உண்டாக்க வேண்டும். மாவீரன் முத்துக்குமார் வீர மரணமடைந்த ஐனவரி 29-ம் தேதியை “ஈழ மக்களின் பொது வாக்கொடுப்பு கோரிக்கை நாளாக” நாம் அனுசரிக்கலாம். கடைசியாக ஒன்று;.  “விதைத்தவன் உறங்கலாம்; விதைகள் உறங்குவதில்லை”

நன்றி:பேராசிரியர் வி.மருதவாணன். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...