|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 February, 2013

பாலியல் புகாரில் சிக்கிய அரசியல்வாதிகள் குறித்தும் பேச்சே காணோம்?


நீதியரசர் வர்மா கமிஷன் பரிந்துரைத்ததில் பலவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை காரணம். இவர்கள் ஏற்க மறுத்துள்ள அம்சங்களை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காகத்தான் இவ்வாறு அவசரச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் தரும் புகார்களைப் பதிவு செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டும், மேலும், சிறப்புப் படை அல்லது காவல்துறையினர் பணிக்காலத்தில் இதுபோன்ற பாலியல் வன்முறையில் ஈடுபட்டால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி விசாரணை நடத்த வேண்டும், அந்த அராஜக செயலுக்காக அவர்களுக்குத் தலைமை ஏற்றிருந்த அதிகாரி மீதும் வழக்கு தொடுக்க வேண்டும் என்று வர்மா கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், அது குறித்து இந்த அவசரச் சட்டம் மெüனம் காக்கிறது. பாலியல் புகாரில் சிக்கிய அரசியல்வாதிகள் குறித்தும் பேச்சே காணோம்.
மணவாழ்வில் ஒரு பெண் சந்திக்க நேரும் பாலியல் வன்முறைக்கும் தண்டனை வழங்க இக்கமிஷன் பரிந்துரை செய்தது. ஆனால், அதுபற்றியும் மத்திய அமைச்சரவை அக்கறை கொள்ளவில்லை. திராவக வீச்சில் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ உதவியை அரசே ஏற்பது குறித்தும் பேச்சே இல்லை. ஆனால், வர்மா கமிஷன் பரிந்துரைக்காத மரண தண்டனையை மத்திய அமைச்சரவை தன்னிச்சையாகப் பரிந்துரைத்துள்ளது. பாலியல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்து, தில்லி பாலியல் படுகொலைச் சம்பவத்தில் பரவலாக இருந்தபோதிலும், பெண்கள் அமைப்புகள் இதற்கு மாறான கருத்தை முன்வைத்ததால்தான், இந்த தண்டனையைத் தான் பரிந்துரைக்கவில்லை என்று வர்மா கமிஷன் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும்கூட, அரிதினும் அரிதான நேர்வுகளில் மரண தண்டனை அளிப்பதில் நீதிபதியின் விருப்புரிமைக்கு இந்த அவசரச் சட்டம் வகை செய்கிறது.
தில்லி பாலியல் வழக்கில் மிக விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு, மிக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், இது குறித்து மத்திய அரசு விரைந்து செயல்படுவது மகிழ்ச்சிதான். ஆனால் அதை முறைப்படி, இரு வாரங்களில் கூடவிருக்கும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உள்படுத்தி சட்டத் திருத்தமாகவே நிறைவேற்றலாமே என்பதுதான் நமது கேள்வி. ஒரு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்போது, முன்தேதியிட்டு அமல்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் அவசரச் சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது. இந்த அவசரச் சட்டம், தற்போது தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் படுகொலை வழக்குக்குப் பொருந்துமா என்றால், பொருந்தாது. அப்படியானால், யாரைக் காப்பாற்ற மத்திய அமைச்சரவை முயல்கிறது?
தற்போதைய தில்லி பாலியல் படுகொலை வழக்கில், மக்கள் கோபம் கொண்டிருக்கும் விவகாரம் - 6 பேர் கும்பலில், மிக வெறித்தனமாக இயங்கி அப்பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கிய நபர் "பதினேழரை வயது சிறுவன்' என்பதால், அவனை சிறார் நீதிமன்றத்தில் விசாரிப்பது பற்றியே! சட்டப்படி அவன் சிறுவனாக இருக்கலாம். ஆனால் அவன் செய்த செயல் சிறுவனுக்கு உரித்தானது அல்ல என்பதுதான் மக்கள் கருத்தாக இருக்கிறது. சிறார் வயது 18 என்பதை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வர்மா கமிஷன் பரிந்துரைக்க மறுத்துள்ளது. இருப்பினும், அரிதினும் அரிதான நிகழ்வுகளிலும், சிறார் ஈடுபடும் குற்றத்தின் கடுமையை வைத்து அவர்களைப் பொது நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்பதை இந்த அவசரச் சட்டம் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அதை ஏன் மத்திய அரசு செய்யவில்லை?
வர்மா கமிஷன் 29 நாள்களில் அறிக்கை கொடுத்தது. அதேபோன்று இவர்களும் விரைந்து செயல்பட்டதாகக் காட்டிக்கொள்ளவும் வேண்டும். அரசு இயந்திரத்தில் அங்கமாக இருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும். ஆகவே கமிஷன் பரிந்துரைத்த சில முக்கியமான பரிந்துரைகளை எடுத்துக்கொள்ளாமல், பரிந்துரைக்கப்படாத மரண தண்டனையை எடுத்துக்கொண்டு, தங்களை அப்பழுக்கில்லாதவர்களாக காட்டிக்கொள்ள நினைக்கிறது மத்திய அரசு. பிரச்னைகளை விவாதிக்காமல் அமைச்சரவை மட்டுமே முடிவு செய்துள்ள இந்த அவசரச் சட்டம் பலன் அளிக்காது என்றும், இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் பெண்கள் அமைப்புகள் குரல் கொடுத்தன. ஆனாலும் குடியரசுத் தலைவர் இந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்த கோலம் போல ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது மத்திய அமைச்சரவை. உளப்பூர்வமான முனைப்புடன் அல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அரசின் குறிக்கோளாக இருக்கும்போது, இந்த அவசரச் சட்டத்தால் முழுப் பயன் பெண்களுக்குக் கிடைக்குமா? எங்கேயோ, ஏதோ இடிக்கிறது!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...