|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 February, 2013

சாமி வராது பூதம் தான் வரும்!

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
உலகிலுள்ள பொருட்கள் யாவும் பகவானால் படைக்கப்பட்டது. சகல ஜீவராசிகளும் அவனது சிருஷ்டி. புழு, பூச்சி முதல், மனிதன் வரை, யாவுமே அவனால் உண்டாக்கப்பட்டது. இந்த ஜீவன்கள் ஜீவிப்பதற்காகவே நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றையும், மரம், செடி, கொடி, புல், பூண்டு, காய், கனி, கிழங்கு போன்றவற்றையும் படைத்தான்.மனிதர்களுக்காக இவ்வளவையும் படைத்துள்ள பகவானுக்கு, மனிதன் நன்றி தெரிவிக்க வேண்டாமா? மனதால் அவனை நினைத்து துதிக்கலாம். பூ, பழம் முதலியவற்றை அவனுக்கு அர்ப்பணம் செய்யலாம். அவன் நாமாவளியைச் சொல்லிச் சொல்லி, நன்றி தெரிவிக்கலாம்.
 
இந்த நன்றியை அவன் எதிர்பார்க்கிறானா, இல்லையா என்பதை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். படைத்தல், அழித்தல், காத்தல் என்ற மூன்று காரியங்களையும் அவன் கடமையாகச் செய்கிறான். நன்றியை எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும், நன்றி செலுத்த வேண்டியது மனிதனின் கடமையாகிறது.பகவான் ரொம்பவும் எளிமையானவன். அவனிடம் பக்தியோடு இருப்பவர்களுக்கு, தன் சுய ரூபத்தை காண்பிக்கிறான். பக்தரல்லாதவருக்கு உக்ரமான ரூபத்தோடு தோன்றுகிறான். பிரகலாதனுக்கு, நாராயணனாகவும், அவனது தந்தையான இரணியனுக்கு, நரசிம்மனாகவும் தோன்றினான். பக்தனை ரட்சித்தான்; துஷ்டனை சம்காரம் செய்தான். பகவானுக்கு எந்த சின்ன பொருளை அர்ப்பணம் செய்தாலும், அதை மிகப் பெரியதாக எண்ணி, அவன் ஏற்று சந்தோஷப் படுகிறான். அவன் படைத்த பொருளையே தான், நாம் அவனுக்கு அர்ப்பணம் செய்கிறோம். 

ஆனாலும், இது நாம் படைத்த பொருள் தானே என்று அவன் நினைப்பதில்லை. மனமுவந்து அவனுக்கு எந்த விதத்திலாவது நன்றி செலுத்துபவர்களை, அவன், தன் பக்தனாக பாவிக்கிறான். இந்த பக்தர்களுக்காக, அவன் எதையும் செய்யத் தயாராக இருக்கிறான்; செய்கிறான்.”ரபி என்ற வேடுவ ஸ்த்ரீ, பகவானிடம் பக்தியோடு இருந்தாள். காடுகளிலுள்ள கனிகளை சேகரித்து, பகவானுக்காக வைத்திருந்து, அவனது வரவுக்காக காத்திருந்தாள். அவளது ஆசிரமத்தைத் தேடிச் சென்று, அவள் அளித்த பழங்களை உண்டு மகிழ்ந்து, அவளுக்கு முக்தியும் அளித்தார் ராமன்.பாண்டவர்களுக்காக தன் பெருமைகளை மறைத்து, தூதுவனாக சென்றான்! பார்த்தனுக்கு தேரோட்டியாக இருந்தான் பார்த்தசாரதி. என்ன காரணம்? பக்திக்குக் கட்டுப் பட்டான். அவனைப் பொறுத்தவரை, பெரிய தொழில், உயர்ந்த தொழில், மட்ட தொழில், கேவலமான தொழில் என்பதெல்லாம் கிடையாது. பக்தனுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் என்பது தான் அவனது கொள்கை.
 
இதே நாராயணன் தானே, மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவும், நரசிம்மனாகவும் உருவெடுத்தான். எதற்காக? பக்த ரட்சணம்! ஆகவே, அவன் சிறுமையாகவும் இருப்பான்; பெருமையாகவும் இருப்பான். அவனுக்கு நன்றி செலுத்தும் வகையில், நாமும் ஏதாவது ஒரு வழியில் அவனிடம் ஈடுபாடு கொண்டு விட்டால், அவன் அருள் செய்வான்! "சாமியாவது, பூதமாவது' என்று சொன்னால் சாமி வராது; பூதம் தான் வரும்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...