|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 March, 2013

ஒரு லைக் போதும் நீங்கள் யார் என்று தெரிய?



ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுறோமோ இல்லையோ நண்பர்கள் போடும் ஸ்டேட்டஸ், படங்களுக்கு லைக் போடுவது பேஷனாகிவிட்டது. சாதாரணமாக புக் படிக்காதவர்கள் கூட ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுகின்றனர். லைக் போடுகின்றனர். இது மாதிரி லைக் போடுபவர்களின் ரசனையை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் எதையெல்லாம் விரும்புகிறார் என்று தொகுத்துப்பார்த்தால் அவர் ஆணா பெண்ணா, ஒருபாலுறவுக்காரரா என்பது முதல், அவர் எந்த அரசியல் கட்சி ஆதரவாளர், என்னவிதமான பொருளாதார கருத்தாளர், எந்த மதத்தவர், அவரது புத்திக்கூர்மையின் அளவு என்ன என்பது வரை ஒருவரின் பெரும்பான்மை குணாம்சங்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக கணித்துச் சொல்லமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆய்வுக்காக சுமார் ஐம்பத்தி எட்டாயிரம் ஃபேஸ்புக் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் என்னவிதமான விஷயங்களை விரும்பினார்கள் என்கிற விவரங்களும், இவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்கிற விவரங்களையும் சேகரித்த ஆய்வாளர்கள், இவற்றை முதலில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எனப்படும் உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.

அடுத்ததாக, இந்த இவர்கள் விரும்பி லைக் போட்ட விவரங்களை அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கணக்கிடும் மென்பொருளில் உள்ளீடு செய்தார்கள். உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனை முடிவுகளையும், அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கிடைத்த முடிவுகளையும் ஒன்றுக்கொன்று பொருத்திப்பார்த்தார்கள். இதில் கிடைத்த முடிவுகள் தங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்தவரான டேவிட் ஸ்டில்வெல். அல்கோரிதம் கணிதக்கணக்கின்படி இந்த பரிசோதனையில் பங்கேற்ற ஃபேஸ்புக் பக்கத்தில் யாரெல்லாம் ஆண்கள் என்பதை கண்டறிவதில் 88 சதவீதம் சரியாக கணிக்க முடிந்ததாம்.அதேபோல ஃபேஸ்புக்கில் எத்தனைபேர் ஆப்ரிக்க வம்சாவளியினர் என்பதை 95 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. வெள்ளையினத்தவர் யார் என்பதை 85 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. ஒருவர் போதைவஸ்துக்களை பயன்படுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதையும் 65 சதவீதம் முதல் 73 சதவீதம் சரியாக கணிக்கமுடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் ஒருவருக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா என்பதையும் லைக் போடுவதை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த கணக்கீடு விளம்பர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சாதகங்களை அளிக்கிறது. உதாரணமாக, இந்த கணக்கீட்டை பயன்படுத்தி, விளம்பர நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முகநூலரை குறிவைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும். இது வர்த்தக ரீதியில் அவர்களுக்கு சாதகமான விஷயம். 

அதேசமயம், தனிமனிதரின் ஃபேஸ்புக் செயற்பாடுகளை அவருடைய வெளிப்படையான விருப்பம் இல்லாமலே மற்றவர்களால் பார்க்க முடியும், பயன்படுத்த முடியும், குறிப்பிட்ட நபரின் அந்தரங்க அடையாளங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலைமை, தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் என்கிற கவலைகளும் எழுந்துள்ளன. இதை தடுப்பதற்கு சில எளிய வழிகளும் இருக்கின்றன என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, ஃபேஸ்புக்கில் ஒருவர் எதையெல்லாம் விரும்பியிருக்கிறார் என்பதை காட்டும் லைக்குகள் பொதுவாக மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஃபேஸ்புக்கில் இருக்கும் அந்தரங்கத்தை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்புக்கு சென்று, இந்த லைக்குகளை மற்றவர்களுக்கு தெரியாதவாறு செய்ய முடியும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவுகள், ஃ பேஸ்புக்கில் அதிகரித்துவரும் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும் அதிகப்படுத்தக்கூடும். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...