|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 March, 2013

உலக குருவிகள் தினம்!

அறிவியல் கண்டுபிடிப்புகளும், நவீன தொழில் நுட்பமும் அறிமுகம் ஆவதற்கு முன்பு விவசாயிகளின் உற்ற நண்பனாக சிட்டுக் குருவிகள் திகழ்ந்தன. பயிர்களை அழிக்கும் புழு, பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் சிட்டுக் குருவிகள் முக்கிய பங்கு வகித்தன.இத்தகைய சிறப்பான சிட்டுக்குருவி இனத்தை இன்றைய தலைமுறை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது. உலகில் தற்போது 226 பறவை இனங்கள் அழிந்து வருவதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதில் சிட்டுக்குருவி இனம் அழிவது முதன்மையாக உள்ளது.
 
சிட்டுக் குருவிகள் அழிவதற்கு என்ன காரணம்?முதல் காரணம், நாம் பயிரிடும் தானிய வகைகளுக்கு இயற்கை உரம் போடுவதற்கு பதில் ரசாயண உரத்தை பயன்படுத்துவதுதான். ரசாயன கலவையிலான பூச்சிக் கொல்லி மருந்து அடித்து வளரும் தானியங்களை சாப்பிடும் சிட்டுக் குருவிகள் இறந்து விடுகின்றன.ஒரு வேளை தப்பி பிழைத்தாலும் அந்த சிட்டுக்குருவிகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. அவை போடும் முட்டைகள் உடனே உடைந்து விடுகின்றன.
 
அடுத்து நாம், சுற்றுச் சூழலை பற்றி கவலைப்படுவதில்லை. சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்களை நாம் தெரிந்தோ, தெரியாமலோ அழித்து வருகிறோம்.சமீபகாலமாக செல்போன் டவர்கள் சிட்டுக்குருவிகளுக்கு மிகப் பெரும் எமனாக மாறியுள்ளன. செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு (சிக்னல்) சிட்டுக் குருவிகளின் முட்டைகளை பொரிக்க விடுவதில்லை.
 
இப்படி நாம் எல்லா கோணங்களிலும் சிட்டுக் குருவிக்கு பாதகமாக நடந்து வருகிறோம்.அதனால்தான் தமிழ்நாட்டில் சுமார் 60 சதவீத கிராமங்களில் சிட்டுக்குருவி இனமே இல்லாமல் போய் விட்டது.அபூர்வமாகி வரும் சிட்டுக் குருவி இனத்தை நம் கண் முன்னே அழிய விடலாமா? நமது அடுத்த தலைமுறையும் சிட்டுக் குருவிகளின் "கீச்...கீச்...'' ஒலி கேட்டு குதூகலிக்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் மார்ச் மாதம் 20-ந்தேதியை உலக குருவிகள் தினமாக அறிவித்துள்ளனர். நாளை (புதன்கிழமை) உலக குருவிகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நீங்களும் முடிந்த அளவுக்கு சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற ஏதாவது செய்யுங்கள். ஒரு இனத்தை காப்பாற்றிய புண்ணியமாவது உங்களுக்கு கிடைக்கும்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...