|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 March, 2011

தேர்தல் கமிஷன் திகைப்பு தமிழகத்தில் இதுவரை பதிவான வழக்குகள் 48 ஆயிரம்!

தமிழகம் முழுவதும் இதுவரை, 48 ஆயிரத்து 350 வழக்குகள், அரசியல் கட்சிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. பூத் ஸ்லிப் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்தே ஓட்டுப் போட முடியும்,'' என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். விறுவிறுப்பாக வேட்பு மனு தாக்கல் நடக்கும்போது, அதை மிஞ்சும் வகையில் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் திகைத்துள்ளனர்.

ஓட்டுப் போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய, விழிப்புணர்வு போஸ்டர்களை, தலைமைத் தேர்தல் அதிகாரிபிரவீன்குமார் வெளியிட்டார். அதேபோல, ஏன் ஓட்டுப் போட வேண்டும் என்பது பற்றி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் நடிகர்கள், நடிகைகள் பேசிய, "சிடி'யும் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச் சியில்,இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திரன், அமுதா, பூஜா குல் கர்னி கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மொத்தம், 62 ஆயிரம் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இவை, மாவட்டத்துக்கு 2,000 வீதம் அனுப்பி வைக்கப்படும். இதுதவிர, போஸ்டர்களை அச்சடித்துக் கொள்ள, மாவட்டத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். "சிடி'களை இலவசமாக ஒளிபரப்புவதாக, தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம், பல்வேறு பகுதிகளிலும் ஒளிபரப்பப்படும். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், வீடு வீடாக பூத் ஸ்லிப்கள் வழங்கப்படும். பூத் அளவிலான அலுவலர்கள், இவற்றை வழங்குவர். இதில் பிரச்னை இருந்தால், பூத்அளவிலான அதிகாரியை அணுகலாம். மொத்தம், 51 ஆயிரம் பூத் அளவிலான அலுவலர்கள் உள்ளதால், பத்து நாட்களில் இவை வினி யோகிக்கப்பட்டு விடும். பூத் ஸ்லிப் அல்லது புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை சான்றாக காண்பித்து தான் ஓட்டுப் போட முடியும். தமிழகத்தில் 1 சதவீத வாக்காளர்களது புகைப்படங்கள் மட்டுமே, பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே, பட்டியலில் புகைப்படம் இல்லாதவர்கள் மட்டும், இதர 13 வகையான அடையாள ஆவணங்களை காண்பித்து ஓட்டுப் போடலாம். தமிழகத்தில் இதுபோல, 60 ஆயிரம் வாக்காளர்கள் தான் உள்ளனர்.
பணம் பறிமுதல் செய்வது தொடர்பாக, ஒரே சீரான நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் இருந்தால், விட்டுவிடுவர். சிறு வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம், கணக்கு காட்டியதும், இரண்டு நாட்களுக்குள் திருப்பி அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் இதுவரை, 20 கோடி ரூபாய் பணம், 7 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு எதிராக மொத்தம், 48ஆயிரத்து 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவச பொருட்கள் வழங்குவதாக அறிவிப்பு வெளியிடுவது, சட்ட விரோதமானது அல்ல. அது ஒரு உறுதிமொழி தான். எனவே, நன்னடத்தை விதிகளின் கீழ் அது வராது. பணம் பறிமுதல் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக, வரும் திங்கள்கிழமை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை வரும் போது, தனது கருத்தை தேர்தல் கமிஷன் தெரிவிக்கும். பிரசாரங்களில் ஈடுபடும் நடிகர், நடிகைகளது படங்களை, தூர்தர்ஷனில் மட்டும் ஒளிபரப்பக் கூடாது. திருப்பூர் வடக்கு தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தாலும், வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த பின்பே, எந்த முறையில் தேர்தல் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...