|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 March, 2011

சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்தா?

நாளை (19-ம் தேதி) சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம், பூமிக்கு 3 லட்சத்து 56 ஆயிரத்து 577 கிமீ தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் வி்ஞ்ஞானிகள். அவ்வாறு நிலா பூமிக்கு அருகில் வரும்போது பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகின்றன.

இதனால் தான் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வததந்திகள் பரவுகின்றன. ஜப்பானை போன்று நாளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் சபூகம்பம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.

இதை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மறுத்துள்ளது. இது குறித்து அதன் செயல் இயக்குனர் அய்யம் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

சூப்பர் மூனுக்கும் பூமியில் ஏற்படும் நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. நிலா வழக்கத்தை விட பெரியதாகத் தோன்றலாம். அதற்காக அச்சப்படத் தேவையில்லை. இந்த நிகழ்வால் வானிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.

நில நடுக்கம் என்பது டெக்டானிக் தட்டு நகருவதால் ஏற்படுகிறது. எனவே, நில நடுக்கத்திற்கும் நிலா பூமிக்கு அருகில் வருவதற்கும் தொடர்பு கிடையாது. எனினும், கடலில் மட்டும் அலை சற்று அதிகமாகி கொந்தளிப்புடன் காணப்படும்.

ஏற்கனவே, பல முறை நிலா பூமிக்க மிக அருகில் வந்துள்ளது. கடந்த 1912-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி அன்று மிகவும் நெருக்கமாக 3 லட்சத்து 56 ஆயிரத்து 375 கிமீ தொலைவில் நிலா வந்தது. நாளை (மார்ச் 19-ந் தேதி) 3 லட்சத்து 56 ஆயிரத்து 577 கிமீ தொலைவில் நிலா இருக்கும். இதேபோன்று வரும் 2125-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி அன்று 4 லட்சத்து 6 ஆயிரத்து 720 கிமீ தொலைவுக்கு நிலா சென்று விடும்.

நிலவு வழக்கமான பவுர்ணமி தினத்தை போலவே நாளையும் பிரகாசமாக இருக்கும். ஆனால் தோற்றத்தை பொறுத்தவரை வழக்கத்தை விட 14 சதவீதம் பெரிதாக இருக்கும். இதை சாதாரண மனிதரால் முழுமையாக அறிய முடியாது. கடந்த 2008-ம் ஆண்டில் கூட 3 லட்சத்து 56 ஆயிரத்து 567 கிமீ தொலைவில் நிலா வந்தது. தற்போது, அதை விட 10 கிமீ தொலைவில் தான் இருக்கிறது.

இதுபோல, வரும் 2012-ம் ஆண்டு மே 6-ம் தேதி அன்றும் 3 லட்சத்து 56 ஆயிரத்து 953 கி.மீ. தொலைவில் நிலா இருக்கும். இவ்வாறு நிலா பூமிக்கு நெருக்கத்தில் வருவது வழக்கமான நிகழ்வு தான். பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் இது நடைபெறுகிறது. இதனால், எந்தவித இயற்கை பேரழிவும் ஏற்படாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...