|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2011

புகைப்பட கலையில் சரித்திரம் படைத்த முதல் பெண்

பத்ம விபூஷன் விருது, இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த விருது பெறுபவர்கள் பட்டியலில், இந்த வருடம் இடம் பெற்றிருப்பவர்களில் ஒருவர், 98 வயதான மூதாட்டி ஹோமய் வைதரலா. இவர்தான், நம் நாட்டின் முதல் பெண் பத்திரிகை போட்டோகிராபர். இவர் விருது பெறுவதற்கு, இது மட்டுமே தகுதி இல்லை. இவர், தன் வேலையின் போது காட்டிய சாதனைகளே, இவரை விருது பெற வைத்துள்ளது.
அப்படி என்ன சாதித்தார்? கொஞ்சம் பின்னோக்கி போவோமா...
குஜராத் மாநிலம், நவசார் பகுதியில், 1913ல் பிறந்தார். ஆண்களே பள்ளிப் படிப்பை தாண்டாத அந்தக் காலத்தில், படிப்பது பிடித்து போனதால், பிடிவாதமாக படித்து, கல்லூரி வரை சென்றவர், அந்த ஊரில் இவர் ஒருவரே. மும்பையில் உள்ள கலைக் கல்லூரியில், ஓவியம் தொடர்பான பாடப் பிரிவை எடுத்து படித்தார். அப்போது, அதே கல்லூரியில் மானேக்ஷா என்பவர் புகைப்படம் தொடர்பாக பாடம் எடுக்க வந்தார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தது. காதல் கணவர் மானேக்ஷாவின் பிரதான தொழில், பத்திரிகைக்கு படம் எடுப்பதுதான். உனக்கு எதற்கு இதெல்லாம் என்று சொல்லாமல், புகைப்படம் தொடர்பான அனைத்தையும் மனைவிக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு கட்டத்தில், அவசரமாக எடுக்க வேண்டிய ஒரு படத்தை, தன் மனைவியை எடுக்கச் சொன்னார். எந்தவித பதட்டமும் இல்லாமல், அவர் எடுத்த புகைப்படம் அருமையாக இருக்கவே, தன்னால் போக முடியாத இடத்திற்கு, தன் மனைவியை அனுப்பி வைத்தார். அந்த வகையில், இவர் எடுத்த படம், முதல் முறையாக இவரது பெயருடன் மும்பை பத்திரிகை ஒன்றில் வெளியானது. அதற்கு, ஒரு ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டது. இது, அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை என்பதால், ஓவியமா, புகைப்படமா என எண்ணியவர், இனி, புகைப்படமே தன் வாழ்க்கை என்று முடிவு செய்தார். அதன் பிறகு, "யார் இவர்?' என கேட்கும் அளவிற்கு, பல படங்கள் வெளிவந்தன. இதன் காரணமாக, டில்லியில் இருந்த பிரிட்டிஷ் அரசு, இவரை புகைப்படக்காரராக பணியாற்ற அழைப்பு விடுத்தது; அழைப்பை ஏற்று, டில்லி சென்றார். டில்லியில் இவரது வளர்ச்சி வேகமெடுத்தது. அதற்கு, இவர் தந்த விலையும் அதிகம். பாலுக்காக எப்போது அழும் எனத் தெரியாத, மூன்று மாத கைக் குழந்தையுடனேயே வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அப்போது, புகைப்படக் கருவிகளும் சற்று கடினமானவை, எடை கூடுதலானவை, வேலையும் அதிகம் வைப்பவை.
அதே போல், படம் எடுக்க எவ்வளவு நேரமும், சிரமமும் உண்டோ, அதே போல, எடுத்த படத்தை பிரின்ட் போடவும் ஆகும். படத்தில் நேர்த்தி வேண்டும் என்பதற்காக, புகைப்படம் எடுத்த காலம் முழுவதும் இவர் உதவியாளர் யாரையும் வைத்துக் கொள்ளாமல், தானே அனைத்து வேலைகளையும் செய்வார். இதனால், தூங்கிய நேரம் மிகக்குறைவே! இவர் படம் எடுக்கும் விதம், பலருக்கும் பிடித்து போனது. இதன் காரணமாக, நேருவின் நெருங்கிய தோழி போல இருந்தார். இன்றைக்கு காணக்கூடிய நேருவின் நல்ல படங்கள் பல, இவருடையது தான். இருபதாம் நூற்றாண்டில் இடம் பிடித்த சரித்திர நாயகர்கள் மவுண்ட்பேட்டன், கென்னடி, குருசேவ், நிக்சன், சூ-என்-லாய் உள்ளிட்ட டில்லி வந்த விருந்தினர்கள் பலர், இவரது கேமராவில் சிக்கியுள்ளனர். இரண்டாம் உலகப்போரின் போது, "நாட்டின் நிஜ தரிசனத்தை காட்ட வேண்டும், கொஞ்சம் சவாலான விஷயம், களத்தில் இறங்க முடியுமா?' என்று கேட்டு முடிப்பதற்குள், களமிறங்கி, ஆண் போட்டோகிராபர்கள் பலரும் அஞ்சி தவிர்த்த விஷயங்களைக் கூட, இவர் அஞ்சாமல் சென்று, அற்புதமாக பதிவு செய்தார். நாடு சுதந்திரமடைந்ததும், டில்லி செங்கோட்டையில் பிரதமராக, நேரு கொடியேற்றும் முதல் சுதந்திர தினவிழா நிகழ்ச்சியை படம் எடுத்தார்.
காந்தி, நேரு, சாஸ்திரியின் இறுதி சடங்குகளை பதிவு செய்தவர் என்று, சரித்திரத்தின் பல பக்கங்கள் இவரது படங்களால் நிரப்பப் பட்டுள்ளன. இப்படி, 57 வருடங்கள் பம்பரமாக சுற்றி, சுழன்று படம் எடுத்தவருக்கு, திடீரென இடி, இவரது கணவர் மறைவு என்ற ரூபத்தில் வந்தது. தனக்கு எல்லாமாக இருந்த கணவரின் மறைவிற்கு பின், வாழ்க்கையே சூன்யமாகிப் போனதாக உணர்ந்தவர், அதன்பின், புகைப்படக் கருவியை தொடவில்லை; அதுவரை எடுத்த படங்களை பாதுகாப்பதிலும் பெரும் அக்கறை காட்டவில்லை. பேராசிரியராக வதோராவில் பணியாற்றிய தன் ஒரே மகனிடம் போனார். அங்கும், அவருக்கு அடுத்த அதிர்ச்சி. அவரது மகன், புற்றுநோயால் எதிர்பாராத விதமாக இறந்து போக, அதன் பிறகு எந்தப் பிடிப்பும் இல்லாமல், வதோராவில் உள்ள வீட்டில், யாருடைய உதவியும் இல்லாமல், தனியாக, தன் சேமிப்பில், வாழ்ந்து வருகிறார். யாரையும் வேலை வாங்குவது, அவருக்கு எப்போதுமே பிடிக்காது. ஆகவே, இந்த வயதிலும் தனக்கான துணிகளை துவைப்பது முதல், சமையல் செய்து கொள்வது வரையிலான சகல வேலைகளையும் செய்து, வாழும் அவரை, அரசு இப்போது அடையாளம் கண்டு, பத்மவிபூஷன் விருதை அறிவித்தது. இதற்கு, அவரிடம் இருந்து இப்போதைக்கு கிடைத்திருக்கும் பதில், சின்ன புன்னகை மட்டுமே!
விருதால் பலருக்கு பெருமை; சிலரால் மட்டுமே விருதிற்கு பெருமை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...